நவம்பர் 2018: வாசகர் கடிதம்
அக்டோபர் மாதத் தென்றலில், அஞ்சலி பகுதியில் இசைக்கலைஞர் எழுத்தாளர் எனப் பல துறைகளிலும் இயங்கி, பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற கீதா பென்னட் அவர்களின் புகைப்படம் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். அவர் எழுத ஆரம்பித்த நாட்களிலிருந்து அவரின் படைப்புக்களை மிகவும் ஆர்வமாக ரசித்துப் படிப்பேன். தமிழ் நாட்டில் மட்டுமல்லாது தங்கள் பத்திரிகையில் அவர் எழுதிய அனைத்தையும் படித்து வியந்துள்ளேன். தமிழகம் மற்றும் அமெரிக்கா இடையிலான கலாச்சார, பண்பாட்டுச் சிக்கல்களைத் தம்முடைய உணர்ச்சி நிறைந்த எழுத்துக்களில் அனைவருக்கும் எளிதாகப் புரிய வைத்தவர். வீணை இனிமையாக மீட்டி மகிழ்வித்தவர். மனவலிமை நிறைந்த அவரின் மறைவிற்கு ஆழ்ந்த மன வருத்தத்தைப்பகிர்ந்துக் கொள்கிறோம். சாதனையாளர்கள் ஷ்ரேயா ராமச்சந்திரன், கீதாஞ்சலி ராவ், ஹரீஷ் பாலசுப்ரமணியன் ஆகியோருக்குப் பாராட்டுக்கள். TNF-ன் முன்னோடித் திட்டங்கள் வரவேற்கத் தக்கவை.

"காந்தி இன்று" என்ற இணையதளத்தைத் தொடங்கியவரும், சாகித்ய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' விருது பெற்றவருமான டாக்டர் சுனில் கிருஷ்ணன் அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது. தங்களின் பணி சிறக்க எங்களின் வாழ்த்துக்கள்.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

*****


நான் தென்றல் விடாமல் படித்து வருகிறேன். சிறுவர் படைப்பிலிருந்து சபரியின் பக்திவரை செப்டம்பர் மாத இதழ் எல்லாம் பிரமாதம். சபரியின் கதை பிறப்பால் அல்ல பக்தியால் வருவது உயர்வு என்பதற்கு உதாரணம். வ.வே.சு. ஐயர் வாழ்க்கை, திரைகடல் தாண்டித் தாய்நாட்டின் சுதந்திரம் நாடிச் செய்த தீரச் செயல்களின் வாழ்க்கைப் பாதை. எழுத்தாளர் சி.ஆர். ரவீந்திரன் பற்றிய அரவிந்தின் தொகுப்பு, தன்னை முன்னிறுத்திச் செயல்படாத 72 வயது உற்சாகரைப் பற்றிய உயர்நோக்கு. 92 வயதுவரை பாரதியின் பெருமைக்கே உழைத்த சுராஜ் குறித்த அஞ்சலி, தமிழ் வேர்கள் எவ்விதம் எங்கும் ஊன்றி யாவரின் நலத்துக்கும் உறுதுணை புரிகின்றன என்பதற்கான சான்று. சு.கி. சிவம் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் என்பது பலர் அறியாத விஷயம். சாய் ஷ்ரவணம் நேர்காணல் கேட்கவே வேண்டாம். பிரமாதம்.

வே.சுப்ரமணியன்,
ரெட்வுட் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com