முத்தமிழ் விழா
ஜூலை 16ம் தேதி அன்று சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் மவுண்டெய்ன் வியூ சமுதாயக் கூட அரங்கில் சார்பாக முத்தமிழ் விழா கொண்டாடியது. தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்னர் தமிழ்மன்றம் சென்ற ஆண்டு இதே நாளில் தீக்கிரையான கும்பகோணம் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியது.

விழாவின் முதல் நிகழ்ச்சியாக, பேராசிரியை அலர்மேலு ரிஷி அவர்கள் பண்டைய இலக்கியத்தில் காணும் தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் பேருரை ஆற்றினார்கள். தென்றல் வாசகர்களுக்கு தனது வழிபாட்டுத் தலங்கள் கட்டுரைத் தொடர் மூலம் அறிமுகமான தமிழ்ப் பேராசிரியை முனைவர். அலர்மேல் ரிஷி அவர்களது உரை மிக பயனுள்ளதாகவும் பல செய்திகள் அடங்கியதாகவும், இலக்கிய வளம் நிரம்பியதாகவும் அமைந்திருந்தது.

தொடர்ந்து பாகீரதி சேஷப்பன் அவர்கள் எழுதி இயக்கிய 'பாரி அவையில் ஔவை' என்ற சிறுவர்கள் நாடகம் அரங்கேறியது. பாரி மன்னரின் அவையை மேடைக்குக் கொணர்ந்து, அவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மேடையில் சுவை படக் கொணர்ந்திருந்தனர். மழலைகள் குழலினும் இனிய குரல்களில் தமிழ் வசனங்கள் பேசியது செவிக்கின்பம் வழங்கியது. பாரி மன்னரின் அவையில் மன்னரது விசாரிப்பும், பாரியைக் காணவரும் புலவர்களும், விருந்தினர்களும் தமிழில் அற்புதமாக வசனங்கள் பேசி நடித்திருந்தனர். பாரி அவையில் ஔவையார் தோன்றி பாடுகிறார். நாடகத்தின் துவக்கத்தில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" பாடல் மிக அருமையாக மெட்டமைத்துப் பாடப்பெற்றது. பாரியின் அவையில் இரு நடன மாதர் வந்து பாடலுக்கு ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. சிறுவர்களின் பாடலும், நடிப்பும், நடனமும், வசனமும் சேர்ந்து நாடகத்தைச் சிறப்பாக்கின.

நாடகத்தைத் தொடர்ந்து, 'தமிழின் பொற்காலம் கடந்த காலமா, எதிர் காலமா' என்ற தலைப்பில் ஒரு பட்டி மன்றம் நடைபெற்றது. கடந்த காலமே என்ற அணியில் கந்தசாமி, கருணாகரன், ரவி மூவரும், எதிர்காலமே என்ற அணியில் உமா மகேஸ்வரி, முஸ்த·பா மற்றும் ராஜாமணி ஆகியோரும் கலந்து கொண்டு அவையைக் கலகலக்க வைத்தனர். பட்டிமன்றத்தின் நடுவராக பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றித் தீர்ப்பு வழங்கினார்கள். இரு அணியினரும் மிகச் சிறப்பாக தத்தம் வாதங்களை மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் எடுத்து வைத்தனர். அணியினரின் பேச்சும், சமயோதிடமான பதில்களும், தகுந்த இடங்களில் வைக்கப் பட்ட தர்க்கரீதியான குறிப்புக்களும் சபையோரின் பலத்த கைத்தட்டல்களையும், சிரிப்பலைகளையும், ஏகோபித்த பாராட்டுதல்களையும் பெற்றன. நடுவர் முனைவர்.ஞானசம்பந்தன் அவர்களது பேச்சு மிகுந்த வரவேற்பை பெற்றது.

ஞானசம்பந்தன் அவர்கள் தமிழ்நாட்டில் மிகப் புகழ்பெற்ற நடுவர், நகைச்சுவைப் பேச்சாளர், தொலைக்காட்சிப் பேச்சாளர், தமிழ்ப் பேராசிரியர், திரைப்பட நடிகர் என்ற பல ஆளுமைகளில் சிறப்பும் புகழும் பெற்றவர். வளைகுடாப் பகுதி தமிழ் அன்பர்களின் உள்ளங்களைத் தனது சிறப்பான, நகைச்சுவைப் பேச்சுக்களால் கவர்ந்து சென்று விட்டார். நகைச்சுவைக்கு நடுவே தமிழின் சிறப்புக்களை அவர் சொல்லிய விதம் அவரது தமிழறிவின் மேன்மையையும் அவரது பேச்சுத் திறனையும் விளக்கியது. தீர்ப்பை அவர் வழங்கிய போது அவர் ஆற்றிய சொற் பொழிவு மறக்க இயலாத ஒரு சிறப்புரையாக இருந்தது. தமிழ் கடந்தகாலத்தில் பொற் காலத்தைக் கொண்டிருந்தாலும் கூட, எதிர்காலத்திலேயே அது மேலும் பல மேன்மைகளை அடைந்து உலகமெலாம் சென்றடையப் போகிறது என்ற தீர்ப்பை வழங்கினார்.

முத்தமிழ் விழாவில் கலந்து கொண் டோரிடம், சிரிக்க, சிந்திக்க வைத்த இயல் இசை, நாடகம் அனைத்தும் கலந்த ஒரு அருமையான உணர்வையும் அனுபவத்தை யும் ஏற்படுத்தியது.

திருமலை ராஜன்

© TamilOnline.com