எல்லோர் இதயத்திலும் ஏதோவொரு வகையில் அன்பு இருக்கிறது. தமது குழந்தைகள் மீதோ, ஏழைகள் மீதோ, வேலை மீதோ, லட்சியத்தின் மீதோ அவர்களுக்கு அன்பு உள்ளது. அந்த அன்புதான் கடவுள், அவர்களுக்குள் இருக்கும் கடவுளின் ஒளிப்பொறி. மிகச் சிறியதாக, தற்காலிகமானதாக இருந்தாலும் அவர்களிடம் ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தந்தான் கடவுள், அவர்களுக்குள் இருக்கும் கடவுளின் ஒளிப்பொறி. அவர்களுக்குள் அமைதி, பற்றின்மை, இரக்கம் எல்லாம் இருக்கின்றன. இவையெல்லாம் அவர்களின் மனமென்னும் கண்ணாடியில் பிரதிபலிக்கும் தெய்வீகத்தின் பிம்பமே. நற்பண்புகளின் வளர்ச்சியின் காரணமாக மனது மேம்பாடடைவதன் அறிகுறிகளே இவை.
வேறு வழியே இல்லாமல் ஒருவன் ஏதோ ஒன்றைச் சகித்துக்கொள்வதைச் சாந்தி என்று கூறமுடியாது. இதைத் தெனாலிராமன் கதை ஒன்று விளக்குகிறது.
ஒருநாள் இரவு திருடன் ஒருவன் தனது தோட்டத்திற்குள் நுழைந்து கிணற்றின் அருகே இருந்த புடலங்கொடிக்குக் கீழே ஒளிந்திருப்பதைத் தெனாலிராமன் அறிந்தார். உடனே தனது மனைவியைக் கூப்பிட்டார். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பதற்கு ஒரு வாளியும் கயிறும் கொண்டுவரும்படிக் கூறினார். மனைவி அங்கே வந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து, வாளியோடு அவரிடம் கொடுத்தார். இருட்டுக்குள் ஒடுங்கி உட்கார்ந்து, இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த திருடன், கணவனும் மனைவியும் விரைவில் வீட்டுக்குள் போய்விடுவார்கள், பின்னர் உள்ளே நுழைந்து எல்லாவற்றையும் வாரிச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என்று திட்டமிட்டான்.
தெனாலிராமன் தனது தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டதைப் போல நடித்தார். தண்ணீரை வாய்க்குள் ஊற்றி, உரக்கக் கொப்பளித்து, திருடன் ஒளிந்திருந்த புடலங்கொடியின் கீழே நேராகத் துப்பினார். அது சரியாகத் திருடனின் முகத்தில் போய் விழுந்தது. தெனாலிராமனின் எண்ணமும் அதுதான். திருடனால் ஓடவோ, எதிர்த்துப் பேசவோ, அசையவோ முடியவில்லை. மிகவும் மனவுறுதியோடு அவன் இருந்தான்.
இதை மனவுறுதியாகிய நற்பண்பு என்று எப்படிச் சொல்வது? அல்லது, அதற்காக அவனைப் பாராட்டத்தான் முடியுமா? அவனிடம் இருந்தது அச்சமே அல்லாமல் தன்னம்பிக்கை அல்ல. அப்படிப்பட்ட அமைதி மற்றும் சகிப்புத்தன்மையால் பலனில்லை. அசையாத விசுவாசத்துடன் சுயகட்டுப்பாட்டைப் பழகுங்கள். அதுவே உங்களது வலுவுக்கு ஆதாரமாகும்.
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |