நவராத்திரி மாதம் முழுவதும் எங்கள் வீடு நண்பர்கள், உறவினர்கள் சூழக் குதூகலமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதுமையான கருத்துகளில் கொலு வைப்பதன் மூலம் நமது கலாச்சாரத்தை நினைவூட்டலாம், அதன் செழுமையைக் காட்சிப்படுத்திப் பெருமை அடையலாம், கற்பனைக்குத் தீனி போடலாம், பக்திப் பரவசமும் அடையலாம்.
இந்த வருடம் கொலுவில் நவதுர்கை அம்மன் கோவில், அங்கே நடக்கும் பூஜைகள், வைபவங்கள் ஆகியவையே கொலுவின் மையக்கருத்தாக அமைந்திருந்தது.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் தேவி சரஸ்வதியின் அவதாரங்களான சைலபுத்திரி, பிரம்மசாரிணி சந்திரகாந்தா ஆகியோரும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியின் அவதாரங்களான கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி ஆகியோரும், கடைசி மூன்று நாட்கள் காளராத்ரி, மஹாகௌரி, சித்தியாத்ரி ஆகியோரும் கொலுவின் மையத்தில் வீற்றிருந்தனர். கொலு மண்டபத்தில் நடனங்கள், சங்கீதங்கள் விளக்கு பூஜை, ஆண்டாள் கல்யாணம், திருப்பதி சேவை, திருமணக் காட்சி எல்லாம் மனதை மயக்கும்.
இடதுபுறம் பார்த்தால், லக்ஷ்மி குபேர பூஜை, சத்யநாராயண பூஜை, அஷ்டலக்ஷ்மி பூஜை, நாக பூஜை, துளசி பூஜை, காவடி பூஜை என்று ஒரே வழிபாட்டுக் கோலங்கள். வலதுபுறத்தில் தசாவதாரம், ராமர் பட்டாபிஷேகம், ஸ்ரீனிவாச கல்யாணம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம், கிருஷ்ண லீலை எல்லாம் பார்க்கப் பார்க்கப் பரவசம்.
இவற்றிற்கெல்லாம் நடுவில் முழுமுதற் கடவுளான பிள்ளையார், கொண்டாட்டங்களைக் கண்டு களிக்கக் குவிந்த பக்த கோடிகள், அழகான பூங்கா எல்லாவற்றையும் பார்க்கலாம்.
கொலு வைக்கவும் சந்தோஷம், பார்க்கவும் சந்தோஷம். அதிலும் பலர் வந்து பார்த்து, ரசித்துப் பாராட்டும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது, இல்லையா!
காயத்திரி ஷங்கர், இர்விங், டெக்சஸ் |