எர்த்தாம்டனில் கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. கதிரவன் தனது ஒளிக் கிரணங்களோடு மலைவழியே புகுந்து கிழக்கு நோக்கி வருவதில் ஒரு மகிழ்ச்சி காண்பித்தான். ஆனால், விளையாட்டு மைதானத்திலோ தெருக்களிலோ ஒரு குழந்தையையும் கண்ணில் காணோம்! ஆம், எல்லோரும் கோடை விடுமுறையைக் கழிக்கும் திட்டத்திலும், பெற்றோர்கள் - அதிலும், இருவரும் வேலை பார்ப்பவர்கள் - கோடை வகுப்புகளில் சேர்த்துவிடும் ஆர்வத்திலும், இருந்தார்கள். ஆனால், அருணுக்கு இந்த வருடம் வித்தியாசமாக இருக்கப் போகிறது. அருணின் மாமாவும், அத்தையும் குழந்தைகளுடன் வரப்போகிறார்கள். ஒரு மாதம் முழுவதும் அங்கே இருக்கப் போகிறார்கள். அருணுக்கு ஒரே ஜாலியாக இருந்தது.
அருண் "அம்மா, அவர்கள் எப்பொழுது வருகிறார்கள்?" என்று படுக்கையில் இருந்து எழுந்த கணத்திலிருந்து கேட்க ஆரம்பித்து விட்டான். மாமா குடும்பத்தினரை எதிர்பார்த்து நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான். அவர்கள் எர்த்தாம்டனுக்கு முதன்முறையாக வருகிறார்கள். அதுவுமின்றி இங்கிலாந்திலிருந்து மாமா வீட்டினர் வெளியே புறப்படுவதும் முதன்முறை. ஆகையால், அருண் அவர்களுடன் பேஸ்பால், பாஸ்கட்பால் விளையாட ஆர்வமாக இருந்தான். "யாரைக் கேட்கிறாய், கண்ணா?"
"மாமா, அத்தையை."
"ஓ, என் அண்ணன் குடும்பத்தைக் கேட்கிறாயா?" கீதா அருணைச் சீண்டினார்.
அம்மா நல்ல மூடில் இருப்பதைப் புரிந்துகொண்ட அருண், "இல்லை, என் மாமன் அத்தையும் அவர்கள் குடும்பமும் இங்கிலாந்திலிருந்து வருவதைப் பற்றி" என்றான் குறும்பாக.
"நீ ரொம்ப ஆர்வமாக இருக்கிறாய் போல!"
"ஆமாம், அம்மா."
"பக்கரூவிடம் சொல்லிட்டாயா? அவனும் உன்னைவிட ஆவலாக இருக்கிறான்."
"ஆமாம், அம்மா."
கீதா ஹால் கடிகாரத்தைப் பார்த்தார். அவருக்குக் கிடைத்த தகவல்படி, அண்ணன் மதியம் வந்து சேர்வதாக இருந்தது. அதற்கு இன்னும் நேரம் இருந்தது.
"அம்மா, அரவிந்தும், அனுவும் என்னுடன் பேஸ்பால் விளையாடுவாங்க இல்லையா? இங்கிலாந்தில் பேஸ்பால் கிடையாதே."
அதைக் கேட்டதுதான் தாமதம், பக்கரூ மாடிக்கு ஓடிப்போய் வாயில் பேஸ்பாலைக் கவ்விக்கொண்டு வந்தது. அருண் தன்னுடன் விளையாட வேண்டும் என்று காட்ட பந்தைக் கீழே போட்டது. கீதா உரக்கச் சிரித்தார்.
"பார்த்தாயா அருண், பக்கரூவுக்கு விளையாட ஆசை. உன் மாமன் மக்களை நம்மை மாதிரியே மாற்றிவிடுவான்."
அதே சமயம் யாரோ லிவிங் ரூமுக்கு வரும் ஓசை கேட்டது. அந்த வீட்டில் இன்னும் ஒருவர்தான் இருக்கிறார். அது யார் என்று கீதாவுக்குத் தெரியும். சாமான்களை நகர்த்தும் சத்தம் கேட்டதும் கீதா என்ன நடக்கிறது என்று புரிந்துகொண்டார்.
"அப்பா, நீங்கள் சுத்தம் செய்கிறீர்களா? காலைல எப்போதிலிருந்து செய்யறீங்க?" என்று அருண் கேட்டான். பக்கரூவும் அதன் பங்கிற்குக் குலைத்துத் தன் கேள்வியைக் கேட்டது. சற்றுக் கழித்து, அப்பா ரமேஷ் தவிர அனைவரும் ஹாலிற்கு வந்தார்கள். ரமேஷ் மும்முரமாகச் சுத்தப்படுத்தும் வேலையில் இருந்ததால், தன்னை மூன்று ஜோடிக் கண்கள் வியப்புடன் பார்ப்பதை அறியவில்லை.
"அப்பா?"
"என்ன கண்ணா?"
"பௌ பௌ" என்றது பக்கரூ. ரமேஷ் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்த தூசைத் துடைத்து, படங்களைச் சரிசெய்து, காஃபி மேஜையில் இருந்த வேண்டாத பொருட்களை அகற்றி, வேலையில் மும்முரமாக இருந்தார். கீதா அருணைப் பார்க்க, அவன் தோளைக் குலுக்கிக்கொண்டான். சில நிமிடங்களில் ரமேஷ் கீதாவின் பக்கம் திரும்பினார்.
"My lovely wife, may I have a cup of tea?" சுத்தமான பிரிட்டிஷ் உச்சரிப்பில் ரமேஷ் கேட்டார்.
அருணுக்கு அப்பா பிரிட்டிஷ் உச்சரிப்பில் பேசியது புதுமையாக இருந்தது. கீதாவாவது அடிக்கடி வேற்று மொழி உச்சரிப்பைப் பயன்படுத்துவார், பெரும்பாலும் அருணுக்கு கதைப் புத்தகம் படிக்கும்போது.
"Arun my boy, do you want a lolly? Everything is hunky-dory. Isn't it?" ரமேஷின் மாறுபட்ட ஆங்கில உச்சரிப்பு பக்கரூவிற்கும் பதிதாக இருக்க அது குழப்பத்துடன் பார்த்தது.
"அப்பா, உங்க பிரிட்டிஷ் பாணி, அம்மா எனக்கு கதை புஸ்தகம் படிக்கும்போது சொல்வதைவிட ரொம்ப நல்லா இருக்கு."
"இருக்காதா என்ன? உன் அம்மாவோடு எர்த்தாம்டன் வருவதற்கு முன்னால் நான் டெர்பிஷயரில் ஒரு கவுன்ட் (Count) ஆக இருந்தேன். எல்லோரும் என்னை அப்போது Count Ramesh என்று அழைப்பார்கள்."
கீதா ரமேஷின் நக்கலான பேச்சை ரசித்தார். அவருடைய கிண்டல் கீதாவுக்கு மிகவும் பிடிக்கும். கீதாவும் தன் ஆங்கிலப் புலமையைக் கொஞ்சம் காட்டிக்கொள்ள விரும்பி ஏதோ சொல்ல, அருண் "நம்ம வழக்கமான மொழியில் பேசுவோமே?" என்றான்.
அப்பொழுது கீதாவுக்கு ஒரு குறுஞ்செய்தி (SMS) வந்தது. "நாங்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு இருக்கிறோம். வரத் தாமதமாகும்."
"மாமா, ட்ராஃபிக் ஜாம்ல மாட்டிக்கிட்டாரு கண்ணா. அதான் லேட்டாம்." கீதா அருணிடம் அவனது அறையைச் சுத்தம் செய்து அவனது இரண்டு கசின்களும் தங்க ஏற்பாடு பண்ணச் சொன்னார். "அரவிந்த், அனு, இரண்டு பேரோடும் ஒரே ரூமில் தூங்க ஆசைப்படறேன்." என்றான் அருண். "அதில் பிரச்சினையே இல்லை. ஆனால், இதுபற்றி அனுவைத்தான் கேட்க வேண்டும். You know, she is a girl," என்றார் ரமேஷ்.
"Oh, those girls!" என்று அருண் அலுத்துக்கொண்டான்.
கீதாவுக்கு செல்ஃபோனில் அழைப்பு வர, எடுத்தார்.
"ஹலோ?"
"நாங்க வந்தாச்சு, கீதா."
எல்லோரும் வாசலைப் பார்க்க, அங்கே அரவிந்தும், அனுவும் பெற்றோருடன் நின்றுகொண்டிருந்தார்கள்.
(தொடரும்) |