அக்கறை காட்டாதது போல அக்கறை
அன்புள்ள சிநேகிதியே,

என்னுடைய நெருங்கிய தோழியின் மகள் இங்கே படிக்க வந்தாள். தோழியின் கணவர் சில வருடங்களுக்கு முன்னால் ஒரு விபத்தில் போய்விட்டார். பாவம் அவள், மிகவும் உடைந்து போய்விட்டாள். நான் அவ்வப்போது ஃபோன் செய்து, தைரியம் அளித்து, பணம் கொடுத்து உதவி வந்தேன். அவளுக்கு ஒரே பெண். இங்கே படிக்க வந்தாள். பரபரவென்று இருப்பாள். பார்ப்பதற்கும் நன்றாக இருப்பாள். இந்த ஊர் கலாச்சாரத்திற்குத் தன்னை முற்றிலும் பக்குவப்படுத்திக்கொண்டாள். Brilliant Girl. படிப்பு முடிந்ததும் உடனே வேலை கிடைத்தது. அடுத்த ஒரு வருடத்திலேயே திருமணம் என்று அறிவித்தாள். எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அவள் அம்மாவிற்கு இது பெரிய இடி. நான்தான் சமாதானம் செய்து, 'இந்த ஊரில் இதெல்லாம் சகஜம்' என்று எடுத்துச் சொன்னேன். அமெரிக்காவிலேயே பெண் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தாள். அவன் மிகவும் நல்ல பையன். இந்தியாவிற்குச் சென்று திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்தான். எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

அவள் எல்லாவற்றிலுமே ரொம்ப 'வேகம்'. கல்யாணம் ஆகி ஐந்து வருடங்களில் மூன்று இடங்கள் மாறி, பதவியில் உயர்ந்துகொண்டே போனாள். இரட்டைக் குழந்தைகள். இரண்டுக்கும் மூன்று வயது. நான் இருக்கும் பகுதியிலேயே வீடு வேறு வாங்கிவிட்டாள். எங்களுக்கு 20 வருடம் தேவைப்பட்டது அங்கு வீடு வாங்க! என் தோழிக்காக நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

மூன்று மாதத்திற்கு முன்பு இந்தப் பெண்ணின் கணவரை அங்கங்கே பார்க்க ஆரம்பித்தேன், குழந்தைகளுடன் வெளியில். ஒருநாள் விசாரித்ததில் வேலை நீக்கம் செய்துவிட்டார்கள் என்று சொன்னான். ஐயோ பாவம், இவ்வளவு பெரிய வீட்டை வாங்கிப் போட்டிருக்கிறார்களே என்று நினைத்தேன். எப்படி, என்னவென்று அவளைக் கேட்பது என்று நினைக்கும்போது, அவளே ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, "ஆன்ட்டி, ஒரு குட் நியூஸ். என் கம்பெனியில் என்னை உயர் நிலைக்கு ப்ரொமோட் செய்துள்ளார்கள். இனி ஐரோப்பாவுக்கு அடிக்கடி போகவேண்டியிருக்கும். I am so excited" என்றாள். "உன் குழந்தைகள் என்ன ஆகும்? அடிக்கடி பயணம் செய்தால் அவர்கள் உன்னை மிஸ் செய்வார்களே" என்றதற்கு "அது பரவாயில்லை ஆன்ட்டி, அவன் (கணவன்) பார்த்துக்கொள்வான். அவனுக்கு இன்னும் எந்த நல்ல வேலையும் கிடைக்கவில்லை. அவன் ஒரு நல்ல அப்பா. பிரச்சனை இல்லை" என்றாள். "இருந்தாலும் நீங்களும் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்" என்று வேண்டுகோள் வைத்தாள்.

அவள் பேசியதில் ஏதோ ஒன்று எனக்குச் சரியாகப் படவில்லை. பழைய தலைமுறையாக இருப்பதால் அப்படித் தோன்றியதா என்று தெரியவில்லை. போனவாரம் எப்படி இருக்கிறார்கள் என்று எட்டிப் பார்க்கப் போனேன். குழந்தைகள் மூன்றும் ஓடிவந்தன. வீடு குப்பையாக இருந்தது நான் சமையலறையில் கிடந்த பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தேன். அவன் மிகவும் சோர்ந்து இருந்தான். இரண்டு நாளாக ஜுரமாம். "ஏன் எனக்குச் சொல்லவில்லை?" என்று கேட்டேன். பதில் சொல்லவில்லை. சோகமாகச் சிரித்தான். அவள் வருவதற்கு மூன்று நாள் ஆகுமாம். "நான் குழந்தைகளை அழைத்துக்கொண்டு போகவா?" என்று கேட்டேன். குழந்தைகளும் அப்பாவைக் கட்டிக்கொண்டுதான் நின்றார்கள். எனக்குத் தெரியும். இருந்தாலும் கேட்டுவைத்தேன். எது கேட்டாலும், "தெரியாது அவளைத்தான் கேட்க வேண்டும்" என்று பதிலளித்தான். நன்றாகப் பேசிக்கொண்டிருப்பவன் - அதுவும் நான் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருந்தவள் - என்னிடம் ஏன் அசட்டையாக இருக்கிறான் என்று புரியவில்லை. என் தோழிக்கு எப்போதும் அவள் பெண்ணைப்பற்றிய ஒரு பய உணர்வு இருந்துகொண்டே இருக்கும். போனமுறை ஃபோனில் பேசியபோதுகூட , "இந்தப் பெண் வேலை, வேலை என்று அலைந்துகொண்டே இருக்கிறாள். அவனும் இப்போதெல்லாம் முன்னைப்போல் பேச மாட்டேன் என்கிறான். நீ அவளுக்குக் கொஞ்சம் புத்தி சொல்லேன். அதுவும் வெள்ளை அமெரிக்கனை வேறு பண்ணிக் கொண்டிருக்கிறாள். எங்கே போய் முடியுமோ?" என்று ஆதங்கப்பட்டாள். அப்போது நான் அவள் கவலையைப் பெரிதாக நினைக்கவில்லை.

எங்கோ இடிக்கிறது. அவளுக்கு நான் என்ன அறிவுரை சொல்வது? ஒருவேளை கயிற்றைப் பாம்பாக நினைக்கிறேனா? நல்ல பெண். ஆனால் தான் நினைத்தபடிதான் செய்வாள். உச்சத்திற்கு வேகமாகப் போகும் நிலையில் தரையைப் பார்க்க நேரம் இல்லையா என்று புரியவில்லை. ரொம்ப ரொம்ப நாசூக்கான விஷயமாக எனக்குத் தோன்றுகிறது உங்கள் அறிவுரை என்னவாக இருக்கும்?

இப்படிக்கு,
...........


அன்புள்ள சினேகிதியே

நான் அறிவுரை என்று எதுவும் சொல்ல விரும்பவில்லை. அதுவும் விஷயம் எதுவும் தெரியாத நிலையில், எனக்கே என்ன கருத்து தெரிவிப்பது என்று தெரியவில்லை.

* நீங்கள் கவலைப்படுவதில் நியாயம் இருக்கலாம். நீங்கள் விவரித்த வகையில் இருந்து she takes relationships for granted என்று தோன்றுகிறது.

* அதேசமயம் அவள் மிகவும் சாமர்த்தியமாகவும் அன்பாகவும் இருக்கும் பட்சத்தில், பிரச்சனையே வெடித்தாலும் அவளால் அதைச் சாமர்த்தியமாகக் கையாள முடியும் என்று தோன்றுகிறது. அவள் கணவர் மந்தமாக, அசட்டையாக இருப்பது, ஒருவேளை உடற்சோர்வால் இருக்கலாம். அது தற்காலிகமான கட்டம்தான்

* என்ன இருந்தாலும் இளைய தலைமுறையினர் நம் தலையீட்டை விரும்புவதில்லை. அவர்களே கேட்டால்தான் நாம் கருத்துச் சொல்லமுடியும். சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியாது.

* ஒரு 'பார்வையாளராக' இருந்து பாருங்கள். எப்போது உதவி வேண்டுமோ அப்போது அவளே கேட்பாள். அப்போது நம் அகங்காரத்தை விட்டுக்கொடுத்துவிட வேண்டும். சில சமயங்களில், அக்கறையாக இருப்பது என்பது அக்கறை காட்டாதது போல் இருப்பதுதான். Your continued discrete support will help.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com