வ.வே.சு. ஐயர் (பகுதி - 4)
வந்தது சிக்கல்
வ.வே.சு. ஐயருக்கு மிகப்பெரிய கனவொன்று இருந்தது. ஆரிய சமாஜம் போல், சாந்தி நிகேதன் போல் ஓர் உயர்ந்த கல்வி நிறுவனமாக குருகுலத்தைக் கொண்டுவர வேண்டும்; பல மொழிகள் அறிந்த, பல்வேறு கைத்திறன்கள் கொண்ட, நேர்மையும், எதற்கும் அஞ்சாத உறுதியும், தளராத தேசபக்தியும் கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும்; பாரதத்தின் பண்டைய பெருமையை, தொன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்பதெல்லாம் அவர் லட்சியமாக இருந்தது. அந்த லட்சியத்தை நிறைவேற்றும் கருவியாகத்தான் அவர் குருகுலத்தையும், பாலபாரதி இதழையும் நினைத்தார். நடத்தினார். ஆனால், மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும் விஷயத்தில் தோன்றிய பிரச்சனை மாநில அளவில் மிகப் பெரிய பிரச்சனையாக மாறும் என்றோ, அது குருகுலத்திற்கே மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும் என்றோ அவர் நினைக்கவில்லை. ஆனால், நடந்தது அதுதான்.

உணவு வேளையின் போது பிராமணச் சிறுவர்கள் ஒருபுறமும், பிராமணரல்லாதவர் மறுபுறமும் அமர்ந்து உண்ணும் பழக்கம் ஏற்பட்டது. பிராமணரல்லாத சிறுவர்களின் வரிசையில் அமர்ந்துதான் வ.வே.சு. ஐயரும் மற்ற ஆசிரியர்களும் அமர்ந்து உண்டனர். அது அவ்வப்போது குருகுலத்திற்கு வந்து சென்ற ராஜாஜி, பெரியார் ஈ.வெ.ரா., வரதராஜுலு நாயுடு போன்ற விருந்தினர்களால் கண்டிக்கப்பட்டாலும், பெரிய பிரச்சனை ஆகவில்லை. ஆனால், இரண்டு பிராமணச் சிறுவர்களுக்கு மட்டும் சமையலறையில் தனியாக உணவு பரிமாறப்படுவதாகச் செய்தி வெளியானபோதுதான் பிரச்சனை ஆரம்பித்தது. பிராமணர், பிராமணரல்லாதார் என இரு சாராருக்கும் தண்ணீர் குடிப்பதற்குத் தனித்தனிப் பானை இருந்ததாகவும் புகார் வந்தது. அது பெரியார் ஈ.வெ.ரா.வின் கவனத்துக்கு வந்தது.

பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும் அதையும் மீறி குருகுலத்திற்கு முதல் தவணையாக ரூ. 5000 நிதி அளித்ததே, அப்போது காங்கிரஸின் தலைவராக இருந்த பெரியார்தான். ஆரம்பத்தில் பெரியார்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தவர் வ.வே.சு. ஐயர் என்றாலும் அதைப் பொருட்படுத்தாமல் குருகுலத்திற்கு முதல் தவணை நிதி உதவினார் பெரியார். அவருக்கு இது தெரிய வந்ததும் ராஜாஜியிடம் புகார் தெரிவித்தார். ராஜாஜி ஐயரிடம் இதுகுறித்து விசாரிக்க, "வைதிகர்கள் வசிக்கிற இடத்திலே இதை ஆரம்பித்துவிட்டேன்; கொஞ்சம் கொஞ்சமாகச் சரி செய்கிறேன்" என்று பதில் சொன்னார்.

பெரியாரின் சீற்றம்
மாதங்கள் கடந்தன. அதே நிலை தொடர்ந்ததாகப் பெரியாருக்குத் தகவல் எட்டியது. தான் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அளித்த நிதியில் ஆரம்பிக்கப்பட்ட குருகுலம், காங்கிரஸின் நிலைப்பாட்டிற்கு எதிராக சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு ஆதரவாக இருப்பதாகப் பெரியார் கருதினார். தான் நேரிலே சென்று அறிவுறுத்தியும் நிலைமை தொடர்வது கண்டு சீற்றமுற்றார். நவசக்தி இதழின் ஆசிரியராக இருந்த திரு.வி.க., பெரியாரை மயிலாடுதுறையில் சந்தித்தார். அக்காலத்தில் வெளியான நவசக்தி, தமிழ்நாடு போன்ற இதழ்கள் இதழ்தோறும் குருகுலத்துக்கு ஆதரவாக, நிதி வேண்டி விளம்பரங்கள் வெளியிட்டன. 'தமிழ்நாடு' குருகுலத்தை ஆதரிப்பதால் தாமும் செய்வதாக திரு.வி.க. சொன்னார். அப்போது தமிழ்நாடு இதழின் ஆசிரியராக இருந்தவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு. அவர் அப்போது காங்கிரஸின் தலைவராகவும் இருந்தார். அவரிடம் விஷயம் சென்றது.

நாயுடு காந்தியின் நண்பர். காந்தியைக் கைது செய்ததற்காகப் போராடிச் சிறை சென்றவர். பிற்காலத்தில் ஹிந்து மகா சபையின் அகில இந்தியத் துணைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். வ.வே.சு. ஐயர் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட சமரசவாதியான நாயுடுவுக்கு குருகுலத்தில் சாதி வேற்றுமை பார்க்கப்படுவதாக வந்த தகவல் கடும் சீற்றத்தைத் தந்தது.

நாயுடுவின் அறிக்கை
அது நாள்வரை ஆதரித்து வந்த குருகுலத்தைத் தீவிரமாக எதிர்த்துத் 'தமிழ்நாடு' இதழில் எழுத ஆரம்பித்தார். அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அந்த அறிக்கையில், "ஜாதி வித்தியாசத்தைப் பாராட்டாத குருகுலத்தினால்தான் ஏதாவது நமது தேசத்திற்கு நன்மை செய்யமுடியும். அதுதான் நமக்குத் தேவை. இந்த வித்தியாசம் தமிழ்க் குருகுலத்தில் இருந்து வருகிறது. இதைப்பற்றி இதுவரை எமது இதழில் குறிப்பிடவில்லை. வித்தியாசம் ஒழிந்து போகுமென்று எண்ணியிருந்தேன்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர், "தேசத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டுமென்று ஆவல் கொண்ட எந்த பிராமண, பிராமணரல்லாதாரும் தமிழ்க் குருகுலத்தை ஆதரிப்பது சாத்தியமில்லாதிருக்கிறது. சமபந்தி போஜனம், சமமான கல்வி முதலியவை கொடுத்துச் சம திருஷ்டியுடன் நடத்தத் தயாராகவிருப்பதாக ஸ்ரீமான் அய்யர் அவர்கள் அறிவித்தாலன்றி, இந்த குருகுலத்திற்குப் பொருள் உதவி செய்யக் கூடாதென்று பிராமணரல்லாதாரைக் கேட்டுக் கொள்ளுகிறேன்" என்று எழுதியிருந்தார்.

குருகுலப் போராட்டம்
இந்த அறிக்கை தமிழ்நாட்டில் பெரும்புயலைக் கிளப்பியது. பத்திரிகைகள் பலவற்றிலும் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. பல இதழ்கள் நாயுடுவின் அறிக்கையை வெளியிட்டுக் குருகுலத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்தன. அறிக்கைப் போர் குருகுலப் போராட்டமாக மாறியது. காங்கிரஸிலேயே குருகுலத்தின் செயல்பாடுகளை ஆதரிப்போர், எதிர்ப்போர் என்று இரு பிரிவுகளைத் தோற்றுவித்தது. சேலம் வாசுதேவையா உள்ளிட்ட சிலர் வரதராஜுலுவின் செயலைக் கண்டித்து காங்கிரஸை விட்டு விலகினர்.

வ.வே.சு. ஐயர் இரு அந்தணச் சிறுவர்களுக்குத் தனியாக உணவிட்டது உண்மையே. அச்சிறுவர்களைக் குருகுலத்தில் சேர்க்கும்போது வைதீகர்களான அவர்களது பெற்றோர்கள் அவ்வாறு கேட்டுக்கொண்டதால், அதனால் என்ன பிரச்சனை வரப்போகிறது என நினைத்த ஐயர் அவர்களுக்குத் தனியாக உணவிடுவதாக வாக்குக் கொடுத்துவிட்டார். பிரச்சனை பெரிதானபோதும் கூட, தாம் சொன்ன வாக்குத் தவறக்கூடாது என்பதற்காகவும், வைதீகர்கள் செல்வாக்குப் பெற்ற அவ்வூரில் அவர்கள் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது என்பதாலும் அதனைத் தொடர்ந்தார். மற்றபடி அவர் சாதி வேறுபாடு பார்ப்பவரல்ல. பிராமணரல்லாத மாணவர்களுடன் அதே வரிசையில் அமர்ந்துதான் அவர் தினமும் உணவுண்டார். சாதி வேறுபாடுகள் ஒழியவேண்டும் என்பதே அவரது கொள்கையாக இருந்தது.

வ.வே.சு. ஐயரின் அறிக்கை
பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே ஐயர் தனது விளக்கமாக பாலபாரதியில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், "..... இங்கே குருகுல வித்தியாலயத்தில் தமிழ்பேசும் அல்லது தமிழ்க் கல்வி கற்க விரும்பும் அனைவரும் - ஹிந்துக்கள், முஸல்மான்கள், கிறிஸ்தவர்கள், ஸவர்ணர்கள், அவர்ணர்கள் (தீண்டாதார்) என்கிற பேதமின்றி - சேர்ந்து சமமான கல்வி கற்கலாம். ஆகாரத்தில் திருஷ்டி தோஷம் பார்க்கப்படுகிறதில்லை. சேர்ந்து உண்ண எல்லோருக்கும் அனுமதி இருக்கிறது. உபாத்தியாயருள் யாருக்கும் எந்த வகுப்பினருடனும் உண்ணுவதற்கு ஆக்ஷேபமில்லை. ஆனால், எந்தத் தந்தையர் தங்கள் குழந்தைகள் தனியே சாப்பிடவேண்டும் என்று தெரிவிக்கிறார்களோ அந்தத் தந்தையரின் குழந்தைகளுக்குத் தனியே உண்ணக் கூடியவரை வசதி ஏற்படுத்தித் தரப்படுகிறது. வேத மந்திரங்களை வேதமறிந்தவர் உபநயநம் பெற்ற துவிஜர்களுக்குத் தான் உபதேசிப்பார்களாதலால், ஹரித்துவார குருகுலத்தில் போல மாணவர்களனைவருக்கும் துவிஜன்ம சம்ஸ்காரம் செய்விப்பதைப் பற்றிப் பரத்துவாஜ ஆசிரமம் பெரியோர்களோடும் கலந்தும் தானே சிரத்தா பூர்வமாக ஆலோசித்துக் கொண்டும் வருகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பு குருகுல சர்ச்சையை அதிகமாக்கியது. "எல்லோரையும் சமமாக நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டால் எல்லாருக்கும் பூணூல் போட விரும்புகிறார் ஐயர்" என்று பத்திரிகைகள் தாக்கி எழுதின. ஆசாரசீலர்களும் இதனைக் கண்டித்தனர். ஐயர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். வரதராஜுலு நாயுடு இதனை ஒரு போராகவே முன்னெடுத்தார். மலேசியாவிலிருந்து வந்து கொண்டிருந்த நிதி முற்றிலும் நின்றுபோனது. குருகுலம் நிதிப் பற்றாக்குறையில் சிக்கியது. திரு.வி.க., சொ. முருகப்பா எனப் பலராலும் பல்வேறு சமரசத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. காங்கிரஸிலும் பிரச்சனை தீவிரமாக விவாதிக்கப்பட்டது. ஆனால், அதனால் எந்தப் பயனும் விளையவில்லை. இந்நிலையில் குருகுகுலப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டி திருவண்ணாமலையில் ஈ.வெ.ரா. பெரியார் தலைமையில் ஒரு மாநாடு நடந்தது. காவ்யகண்ட கணபதி சாஸ்திரி அதனை முன்னெடுத்தார். பயன் ஒன்றும் விளையவில்லை. மன அமைதி வேண்டி பகவான் ரமண மகரிஷியைத் தரிசித்துவிட்டு ஊர் திரும்பினார் ஐயர்.

வைக்கம் சந்திப்பு
இந்த நிலையில் மகாத்மா காந்தி தமிழகம் வந்தார். அவர் ஆலோசனையைப் பெற்று அதன்படி நடப்பதென ஐயர் தீர்மானித்தார். குருகுல எதிர்ப்பாளர்களையும் காந்தியைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார். காந்தி கேரளாவின் வைக்கத்திற்கு வந்திருந்தபோது ஐயர் நேரில் சென்று சந்தித்தார். காந்தி சில ஆலோசனைகளை முன்வைத்தார். அதனை ஐயர் ஏற்றுக்கொண்டார். ஆனால் குருகுல எதிர்ப்பாளர்கள் ஏற்கவில்லை. அதனால் காந்தி சென்னை வந்தபின் ஸ்ரீநிவாச ஐயங்கார் வீட்டில் மீண்டும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடானது. அதில் இரு தரப்பாரும் கலந்து கொண்டனர். காந்தி தன் முடிவைத் தன் கைப்பட எழுதி அதனை நாயுடுவிடம் கொடுத்தார். ஐயர் அதனை நகலெடுத்துக் கொண்டார்.

காந்தி சொல்லியிருந்ததன் சாராம்சம் இதுதான். குருகுல வாசம் செய்கிற பிரம்மச்சாரிகள் ஒரே வரிசையிலிருந்து உண்ண வேண்டும். அபூர்வமான சந்தர்ப்பங்களில் வெளியில் வசித்துவரும் மாணவர்களைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அவர்களுக்கு ஆகார சம்பந்தமாக எவ்வித பிரத்யேக ஏற்பாடும் குருகுல நிர்வாகிகள் செய்துதரக் கூடாது. ஏற்கனவே தனித்துண்ண அனுமதி பெற்றிருக்கிற இரண்டு மாணவர்கள் தவிர மற்றெல்லோரும் வழக்கம் போல ஒன்றாக அமர்ந்தே உணவுண்ண வேண்டும். அவ்வாறு தனியாகச் சாப்பிட முடியாத மாணவரை குருகுலத்தில் சேர்க்கக் கூடாது.

இவற்றை எதிர்ப்பாளர்கள் ஏற்காததால் பிரச்சனை தீராமல் தொடர்ந்தது.

ஐயரின் விலகல்
தான் தலைவராக இருப்பதால்தான் இப்படி நடைபெறுகிறதோ என நினைத்தார் ஐயர். குருகுலத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகத் தீர்மானித்தார். காசி நண்பர் ஆதிமூர்த்திக்கு இதுபற்றி எழுதிய கடிதத்தில், "தலைமை ஸ்தானத்திலிருந்து நீங்கி பரத்துவாஜ ஆசிரமத் தலைமையை வேறொருவரிடம் கொடுத்து இலக்கியத்துக்காகவும், அத்தியாத்ம வளர்ச்சிக்காவும் என் நேரத்தைச் செலவு செய்வதே உசிதமென யோசித்துக் கொண்டிருக்கிறேன். முடிவு பகிரங்கப் படுத்தும்போது தெரியவரும்" என்று எழுதியிருந்தார். இதை எழுதிய ஐயர் அதற்குப் பின் வெகுநாட்கள் இருக்கவில்லை.

உச்சகட்டம்
மகாதேவ ஐயர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தங்களைக் கேட்காமல் எப்படி ஐயர் ஆச்ரமத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகலாம், ஐயரை நம்பித்தானே நிதி உதவினோம் என்று வை.சு. சண்முகம் செட்டியார் உள்ளிட்ட நகரத்தார்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஒருபுறம் நாயுடு தலைமையில் குருகுலப் போராட்டம். பத்திரிகைகளும் எதிர்த்து எழுதின. மறுபுறம் அதுவரை உதவி வந்தவர்கள் தீவிரமாக எதிர்த்தனர். மிரட்டல் கடிதங்களும் குருகுலத்திற்கு வர ஆரம்பித்தன. சுதேசமித்திரன் இதழ் மட்டுமே வ.வே.சு. ஐயரின் தரப்புக்கு ஆதரவாக இருந்தது. போராட்டமும், கண்டன அறிக்கைகளும் தொடர்ந்து கொண்டிருந்தன.

எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு வர வேண்டுமல்லவா? வந்தது.

ஒருநாள் குருகுல மாணவர்கள் பாபநாசம் அருவியைப் பார்க்கக் கிளம்பினர். வ.வே.சு. ஐயருக்கு வேறு பணிகள் இருந்ததால் அவர் செல்லவில்லை. ஆனால், அவர் மகள் சுபத்ராவோ தானும் அருவி பார்க்கச் செல்வேன் என்று பிடிவாதம் பிடித்தாள். ஐயர் தடுத்தும் கேட்காததால் மறுநாள் மதியம் ஐயர், மகளுடன் பாபநாசம் அருவிக்குக் கிளம்பினார். விரைவாகச் சென்று மறுநாள் காலை குழுவினருடன் இணைந்து கொண்டனர் ஐயரும், மகளும். சுபத்ராவிற்கு உற்சாகம் தாங்கவில்லை. அருவியைப் பார்க்கும் ஆனந்தத்தில் அங்கும் இங்கும் குதித்து ஆடிக் கொண்டிருந்தாள். எல்லோரும் அருவிக்கு மேலே உள்ள கல்யாண தீர்த்தம் ஆற்றை அடைந்தனர்.

"நதியைக் கடந்து அக்கரைக்குப் போய்ப் பார்க்க வேண்டும் அப்பா" என்றாள் சுபத்ரா. ஐயர் மறுத்தார். காரணம், நீரின் வேகம் மிக அதிகமாக இருந்தது. ஆங்காங்கே வழுக்குப் பாறைகளும் இருந்தன. அந்தப் பாறைகளில் கால் வைத்துத் தாண்டித்தான் மறுபக்கம் செல்லவேண்டும். சுபத்ராவோ பிடிவாதம் பிடித்தாள்.

இறுதியில் அவள் பிடிவாதம் வென்றது. ஐயர், ஆற்றில் இறங்கி உறுதியாக ஒரு பாறையில் நின்றுகொண்டு சிறுவர்கள் இக்கரையிலிருந்து அக்கரை தாண்ட உதவினார். சுபத்ரா பையன்களைப் போலவே தாண்டிக் குதித்து அக்கரை சேர விரும்பினாள். அவள் பெண் என்பதால் தானே அவளைத் தூக்கி மறுபக்கம் வைப்பதாகச் சொன்னார்.

இன்னுமொரு ஜான்ஸிராணியாக வாழவேண்டுமென்று ஓயாமல் சொல்லுகிற அப்பாவா இப்படிச் சொல்வது என்றாள் சுபத்ரா. மறு பேச்சின்றி சுபத்ராவுக்குக் கைகொடுத்து அக்கரையில் பாறை ஒன்றில் அவள் ஏறியதும், அடுத்த சிறுவன் ஒருவனுக்கு உதவத் திரும்பினார்.

"அப்பா" என்ற தீனக்குரல் கேட்டது. ஐயர் திரும்பிப் பார்த்தார். சுபத்ரா ஆற்று வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். கால் வழுக்கி விழுந்திருந்தாள்.

பதைபதைத்த ஐயர், அவளைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தார். அவளைப் பிடித்தும்விட்டார். ஒரு கணம்தான்; தண்ணீரின் சுழல் வேகத்தில் கை நழுவினாள் சுபத்ரா. ஆற்றில் முழுகிப் போனாள். இதற்குள் ஆறு அருவிப் பகுதியை நெருங்கிவிட்டதால் வேகம் அதிகமாயிற்று. ஐயரால் சமாளிக்க முடியவில்லை.

மூன்று நாள் கழித்துத்தான் இருவரது உடல்களும் கிடைத்தன. ஒருவகையில் குருகுலப் போராட்டமும் ஒரு முடிவுக்கு வந்தது.

வீரவிளக்கு
வ.வே.சு. ஐயருக்காக நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்திற்குப் பெரியார் தலைமை வகித்தார். ஐயரின் தேசபக்தி, தியாகம் ஆகியவற்றைப் புகழ்ந்து பேசினார். வரதராஜுலு நாயுடுவும் தனது இரங்கலுரையில் ஐயரைப் புகழ்ந்து பேசினார். ராஜாஜி, டி.எஸ்.எஸ். ராஜன், சுத்தானந்த பாரதியார் எனப் பலரும் பல கூட்டங்களில் ஐயரின் பெருமையை விதந்தோதினர். வீரவிளக்காகத் தோன்றி மறைந்தார் வ.வே.சு. ஐயர்.

குருகுலம்
குருகுலத்தில் உடனிருந்தோரே மகாதேவருக்கு எதிராகத் திரும்பினர். மாணவர்கள் விலகிச் சென்றனர் அவரால் குருகுலத்தை நடத்த முடியாததால் அதனை காந்தி பெயருக்கு எழுதி வைத்துவிட்டார். காந்தி அதன் நிர்வாகப் பொறுப்பை டி.எஸ்.எஸ். ராஜனுக்கு வழங்கினார். பின்னர் குருகுலம் ஹரிஜன சேவா சங்கத்தின் கைகளுக்குச் சென்றது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் சுவாமி சித்பவானந்தரின் தலைமையில் சிறிது காலம் இயங்கியது. தற்போது திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் பொறுப்பில் இயங்கி வருகிறது.

வீரமே வடிவ மானான்;
வீரமே செயலு மானான்;
வீரமும் கலையும் வாழ்வில்
விளக்கி நந் தமிழ்க் குலத்தை
வீரர்க ளாக்க வேண்டி
குருகுலம் விரும்பி நட்டான்
பாரதவீர ருக்குப்
பரிதியே போன்றான் மன்னோ!


- கவியோகி சுத்தானந்த பாரதியார்

பா.சு.ரமணன்

© TamilOnline.com