திவாகர்
இவர் வசிப்பதோ தெலுங்கு தேசம். ஆனால் மனம் தோய்ந்து கிடப்பதோ தமிழில். எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், வரலாற்றாய்வாளர் எனச் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் திவாகர். இவரது 'வம்சதாரா' (இரண்டு பாகங்கள்), 'திருமலைத் திருடன்', 'விசித்திரச் சித்தன்', 'S.M.S. எம்டன் 22-09-1914', 'அம்ருதா', 'இமாலயன்' போன்ற வரலாற்று நாவல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. 'நான் என்றால் நானில்லை', 'அந்திவானம்' போன்றவை சிறுகதைத் தொகுப்புகள். பாசுரங்களில், குறிப்பாக நம்மாழ்வார் மீது மிகுந்த ஈடுபாடு. நம்மாழ்வாரின் சிறப்பை 'நம்மாழ்வார் நம்ம ஆழ்வார்' என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்கிறார். 'ஆனந்த விநாயகர்' அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட நூல். எழுத்தாளர் தேவனின் படைப்புகளைத் திறனாய்வு செய்து, 'தேவன் - நூறு' என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். அது மின்னூலாகவும் வெளியாகியிருக்கிறது. இவரது 'வம்சதாரா' நாவல் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வம்சதாரா, அடுத்த வீடு வலைப்பூக்கள் மூலம் தனது கருத்துக்களைத் தொடர்ந்து பகிர்கிறார். விசாகப்பட்டினம் தமிழ்ச்சங்கத்தில் பதினாறு வருடங்கள் செயலாளராகப் பணிபுரிந்தவரும் கூட. சமீபத்தில் சென்னை வந்திருந்த திவாகர், தனது எழுத்துப் பயணம் குறித்து மனம் திறந்தார். கேட்போமா?

*****


நாடகத்திலிருந்து நாவலுக்கு....
இருபது வயதுவரை சென்னையில் இருந்தேன். பின்னர் ஆந்திரத்துக்குக் குடிபெயர்ந்தேன். விஜயவாடாவில் வாசம். அங்கு இருந்தபோது நாடகம் எழுத ஆரம்பித்தேன். முதல் நாடகம் 'சாமியாருக்குக் கல்யாணம்' 1978ல் மேடையேறியது. தொடர்ந்து நானும் என் நண்பன் 'தேவா'வும் திவா-தேவா என்ற பெயரில் நாடகங்கள் எழுதி அங்கிருந்த தமிழ்ச்சங்கம் மூலம் நடத்தினோம்.

பின்னர் பணி காரணமாக விசாகப்பட்டினத்திற்குக் குடிபெயர்ந்தேன். அங்கும் நாடகப் பயணம் தொடர்ந்தது. 'சிங்கப்பூர் சிங்காரி', 'காதல் கடிதம்', 'மாப்பிள்ளையே உன் விலை என்ன?', 'அச்சமில்லை அச்சமில்லை', 'மலேசியா மாப்பிள்ளை', 'டாக்டர் டாக்டர்' என்று நிறைய நாடகங்களை எழுதினேன். ஆந்திர பத்திரிகாவில் முதன்முதலில் எனது கட்டுரை (ஆங்கிலத்தில் நான் எழுதி நண்பன் தெலுங்கில் மொழிபெயர்த்தது) வெளியானது. பின்னாளில் நிறைய ஆங்கிலப் பத்திரிகைகளில் எனது கட்டுரைகள் வெளியாகின. ஷிப்பிங் டைம்ஸ் பத்திரிகைக்காகவும், வேறு சில மாதாந்திர வாராந்திர இதழ்களுக்காகவும் எழுதி இருக்கிறேன். சில சிறுகதைகள், கட்டுரைகள் குமுதம், கல்கி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. நான் தொழில்ரீதியாக பிஸினஸ் கரெஸ்பாண்டெண்ட் ஆக இருந்தேன். ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் எனது துறை. 'ஷிப்பிங் டைம்ஸ்' இதழில் 2015 வரை பணி செய்தேன். பிறகு தினமலர் குழுமத்தின் 'சாகர் சந்தேஷ்' பத்திரிகையில் 'ரீஜனல் எடிட்டர்' ஆக இருந்தேன். என்றாலும் என்னைப் பரவலாக அறியச் செய்தது 'வம்சதாரா' புதினம்தான்.



சிம்மாசலக் கல்வெட்டுகள்
அக்காலத்தில் தமிழகத்தின் எல்லை வேங்கடத்தோடு முடிந்து விடுகிறது. அதன் பிறகு வேங்கி நாடு. அடுத்துக் கலிங்கம். கலிங்கத்தின் தென்பகுதியில் உள்ளது விசாகப்பட்டினம். விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் என்ற மலைக்கோவிலில் ஸ்ரீவராக நரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். அப்பகுதி ஒரு காலத்தில் மிகப்பெரிய காடாக இருந்திருக்கிறது. ஏழு காடுகள் சேர்ந்தது என்று கலிங்கத்துப் பரணி சொல்கிறது. அந்த மலையில் ஆலயம் ஒன்றை எழுப்பியதோடு, தமிழில் இரண்டு கல்வெட்டுக்களையும் அமைத்திருக்கிறார்கள். அதை நான் ஆராய்ந்தேன்.

இரண்டு கல்வெட்டுக்களில் ஒன்று வராக நரசிம்மருக்கு ஆபரணங்களைக் கொடையாகக் கொடுத்தது பற்றியது. இரண்டாவது, ஒரு தமிழ் வணிகர் அளித்த கொடை பற்றியது. அவர் ஒரு பெரிய நந்தவனத்தை சிம்மாசலநாதருக்கு அளித்து அதன் பூக்களால் சிம்மாசலருக்குப் பூஜை செய்யவேண்டும் என்று சாசனம் செய்திருக்கிறார். இந்த இரண்டும்தான் அப்பகுதியில் கண்டறியப்பட்ட முதல் கல்வெட்டுக்கள். அதன் பிறகு தெலுங்கு, ஒரியா என நிறையக் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பகுதியில் தமிழரின் ஆதிக்கம் இருந்திருக்கிறது என்பது எனக்கு வியப்பைத் தந்தது. மேலும் இது தொடர்பாக என் ஆய்வுகளைத் தொடர்ந்தேன். தமிழர் இங்கே மிகப்பெரிய அளவில் வாணிபம் செய்து, நிலங்களை ஆண்ட செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது.

வம்சதாரா
விசாகப்பட்டினமே அக்காலத்தில் அரசாண்ட குலோத்துங்க சோழனின் பெயரால் 'குலோத்துங்க சோழப்பட்டினம்' என்று அழைக்கப்பட்டது என்ற விவரம் கிடைத்தது. பின் கலிங்கத்துப்பரணியை வாசித்தேன். அது இந்தப் பிராந்தியத்தில் நடந்த ஒரு மாபெரும் போரை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிதான் கல்வெட்டுக்கள் இருக்கும் பகுதி என்பது தெரியவந்தது. அடுத்து ஸ்ரீகுளம் என்று அழைக்கப்படும் ஸ்ரீகாகுளம் பற்றி ஆராய்ந்தபோது ஒட்டக்கூத்தர் அதனைக் குறிப்பிட்டிருப்பது தெரிந்தது. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் குடும்பமாக அங்கே வந்து தங்கி வாழ்ந்ததும் தெரியவந்தது. அதற்குக் காரணம், அங்கே இருந்த கலிங்கத்தின் துறைமுகம்தான். அவர்கள் தங்கள் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருந்த பகுதி ஸ்ரீகாகுளம். விக்கிரம சோழன் படையெடுத்து வந்து அப்பகுதிகளை வென்றதை "குளம் நீக்கி" என்று குறிப்பிட்டிருக்கிறார் ஒட்டக்கூத்தர். ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தக் கதையை என்னுடைய போக்கில் எழுதினேன். சோழதேசத்துக்குத் தொலைவில் வடகோடியில், சோழர்களுக்கும் கலிங்கர்களுக்கும் இடையே எழுந்த கலிங்கப்போர் எந்தக் காரணத்தை முன்னிட்டு ஏற்பட்டது என்பதை வம்சதாரா சொல்கிறது. நர்மதா பதிப்பகம் திரு ராமலிங்கம் அவர்கள் இந்நூலைப் பதிப்பித்தார்.



எழுத்தாளர் பிரேமா நந்தகுமார் வம்சதாராவுக்கு முன்னுரை எழுதினார். அதில், "இந்தப் புதினம் காலத்தை வென்று நிற்கும் அணுச்சேர்க்கைகளால் கட்டப்பட்டிருக்கிறது" என்றும், "இருபத்தோராம் நூற்றாண்டின் விடிவெள்ளி இந்தப் புதினம்" என்றும் பாராட்டி எழுதியிருந்தார். நூலைப் படித்த எழுத்தாளர் சுஜாதாவும், "கலிங்கத்துப் பரணியையும் கல்வெட்டுகளையும் மற்ற சரித்திரக் குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு அறுநூறு பக்கங்களுக்கு மேல் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டிருக்கும் இந்தத் தமிழ் நாவலின் சரித்திரச் சான்றுகள் என்னைக் கவர்கின்றன" என்று ஆனந்த விகடனின் 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் எழுதியிருந்தார். மேலும் அவர், "இந்தப் புதினத்தை திவாகர் தெலுங்கிலும் கொண்டுவரவேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். சுஜாதாவின் அன்றைய வேண்டுகோள் இன்று நனவாகியிருக்கிறது. இந்த நாவல் தற்போது தெலுங்கில் வெளியாகியிருக்கிறது. இந்த நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு என்னை மேலும் எழுதத் தூண்டுகோலானது. எனது இரண்டாவது நாவலான 'திருமலைத் திருடன்' சில ஆண்டுகளுக்குப் பின் வெளியானது.

திருநீறா, நாமமா!
'திருமலைத் திருடன்' எனக்குக் கிடைத்த தகவல்களைப் பின்புலமாக வைத்து உருவான நாவல். திருவேங்கடவன் அணிந்திருப்பது திருநீறா அல்லது நாமமா என்பது ராமானுஜர் காலத்தில் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. அந்தப் பிரச்சனையை ராமானுஜர் நேரடியாகத் திருமலைக்குச் சென்று தீர்த்து வைத்தார். "வைணவர்களின் ரக்ஷை" என்று திருமலையில் ஒரு கல்வெட்டில் இதுபற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனைப் பின்னணியாக வைத்து உருவானது இந்த நாவல். இதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்குப் பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தன. குறிப்பாகத் மின்தமிழ் குழுவின் நாராயணன் கண்ணன் நூலை வைணவப் பார்வையில் விமர்சித்திருந்தார். கடுமையாக விமர்சித்தே எழுதியிருந்தார். ஆனாலும் அது மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. அவருக்கு உடன்படாதவைகளைப் பட்டியலிட்டுத் தொடராக எழுதியிருந்தார். மிக விருப்பத்துடன் படித்தேன். அந்த விமர்சனத்தை விமர்சித்தும் எனக்கு நிறைய விமர்சனங்கள் வந்தன.

மகேந்திரவர்ம பல்லவன் ஆரம்பத்தில் சமணனாக இருந்து அப்பர் சுவாமிகளால் சைவத்துக்கு மாற்றப்பட்டவன். ஆனால் திருச்சி மலைக்கோட்டைக் கல்வெட்டில் மகேந்திரவர்மன் லிங்கத்தால் மாறுபட்ட நெறியிலிருந்து தான் திருத்தப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் தருகிறான். இந்த ஒரு கல்வெட்டை அடிப்படையாகக் கொண்டும் வேறு பல தென் ஆந்திரச் செப்பேடுகளை ஆராய்ந்தும் அவன் எப்படி மதம் மாறியிருக்கவேண்டும் என்று கற்பனை கலந்து எழுதப்பட்ட நாவல் 'விசித்திர சித்தன்'. அதுபோலக் குலோத்துங்க சோழனின் காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நாவல் அம்ருதா'.



S.M.S. எம்டன் 22-09-1914
எம்டன் சென்னையில் அதுவும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குண்டு போட்ட விஷயம் அந்தக் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று. வலிமையான படையையும், உளவுத்துறையையும் கொண்டிருந்த ஆங்கிலேயரை அது அதிரவைத்தது. எம்டன் ஏன் குண்டு போட்டான், அதுவும் ஏன் 10 நிமிடங்கள் மட்டும் போட்டான் என்பதுதான் கதை. செப்டம்பர் 22, 1914 இரவு 9.20க்கு எம்டன் குண்டு வீசினான். 10 நிமிடம் குண்டு வீசிவிட்டுக் கப்பல் போய்விட்டது. ஆங்கிலேயக் கப்பல்படை அணிதிரண்டு சென்று தேடியும் எம்டன் வந்த கப்பலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கோ மாயமாய் மறைந்து விட்டிருந்தது. ஆங்கிலேயர் தங்களிடமிருந்த 200 கப்பல்களைக் கொண்டு விடாமல் முழுக்கடல் பகுதியிலும் நவம்பர் 9 வரை தேடியிருக்கிறார்கள். எம்டன் வந்த கப்பலைக் கண்டே பிடிக்க முடியவில்லை. எப்படி வந்தான், எப்படிப் போனான் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாமல் திணறிப் போனார்கள். அதைப் பின்னணியாகக் கொண்டு உருவான நாவல் எம்டன்.

இமாலயன்
இந்திய - சீன யுத்தம் பற்றிய வரலாற்றுப் பதிவு இமாலயன். இந்த நாவலுக்கான வரலாற்றுப் பின்புலங்களைத் தேடி நான் நிறையப் பயணித்தேன். சீனப் பேராசிரியர்களைச் சென்று பார்த்தேன். திபெத்திய ஆய்வாளர்களைச் சந்தித்தேன். சில ஆன்மிகப் பெரியவர்களைச் சந்தித்து இமயம் குறித்துக் கேட்டறிந்தேன். பொதுவாக 'ஹிமாலயம்' என்றால் மலை என்றே பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அது மலை மட்டுமல்ல; அதையும் தாண்டி அது பெரிய விஷயம். அண்டை நாடுகளில் நமக்குச் சிறந்த நண்பன் யார் என்று பார்த்தால் அது சீனாதான். ஆறாம் நூற்றாண்டில், ஹர்ஷவர்த்தனரின் மறைவுக்குப் பின் சீனாவுக்கு முழுக்க முழுக்க இந்தியாவைக் கைப்பற்றிக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவர்கள் செய்யவில்லை. சமாதான உடன்படிக்கை செய்துகொண்டார்கள். சீனர்களுக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி இந்தியாவின் மீது மிகுந்த பிரமிப்பு இருக்கிறது. கிழக்குச் சீனாவில் உள்ளவர்களை விசாரித்தால் இந்தியாவில்தான் சொர்க்கம் இருக்கிறது; அது சொர்க்க பூமி என்றெல்லாம் மிக உயர்வான அபிப்பிராயம் உண்டு. ஆனால், அதையெல்லாம் கெடுத்தது யார் என்றால் மா-சே-துங். அதையெல்லாம் பிற்காலத்தில் மிகச் சாதுர்யமாகக் கையாண்டவர் சௌ-என்-லாய் தான். அது மிகப்பெரிய போராக மாறிவிடாமல் தனது படைகளைப் பின்வாங்கச் செய்தார். வெற்றிமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் ஏன் பின்வாங்கினார்கள் என்பதுதான் இமாலயப் புதிர்.

"சாகா மருந்து" என அமிர்தம் பற்றிச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர். அப்படிப்பட்ட மருந்து ஒன்றை உட்கொண்டு 400 வருடம் வாழும் ஒரு சித்தர், இமாலயன் கதையின் நாயகர். அவருக்கு வயது 365. நவம்பர் 19, 1962. சீனா, அஸ்ஸாமை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நேரு அன்றிரவு வானொலியில் அஸ்ஸாமைச் சீனா கைப்பற்றிவிட்டதாக அறிவித்தும் விட்டார். சீனர்கள் அருணாசலப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிட்டு தாவாங் என்ற ஊரைத் தாண்டி வந்து கொண்டிருக்கிறார்கள். தேஜ்பூருக்கு அருகே படை இருக்கும்போது திடீரென்று ஓர் உத்தரவு வருகிறது. "பின்னோக்கிச் செல்லுங்கள். முன்னேற வேண்டாம்" என்று. உடனே படை வேக வேகமாகத் திரும்பிச் செல்கிறது. நினைத்தால் அஸ்ஸாமை எளிதாகக் கைப்பற்றி இருக்கலாம். மக்கள் பலரும் யுத்த பயத்தால் ஊரைக் காலி செய்துவிட்டு வெளியேறி இருந்தனர்.



செய்தி திரட்டச் சென்ற மூன்றே மூன்று பத்திரிகையாளர்கள் தவிர அங்கே வேறு யாரும் இல்லை. டி.எஸ்.சி. தியாகி என்ற ஒரு ரிப்போர்ட்டர். அவருக்கு இன்று வயது 93, பெங்களூரில் இருக்கிறார். அவர் இந்தியன் எக்ஸ்பிரஸிற்குச் செய்தி தருவதற்காக தேஜ்பூர் சென்றிருந்தார். அவர்கள் ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். அங்கிருந்த கிராம மக்கள் சொன்னார்களாம், "முன்னேறி வரும்போது மெள்ள மெள்ள வந்தவர்கள், திரும்பிச் செல்லும்போது வேக வேகமாக ஓடினார்கள்" என்று. அவர்கள் ஏன் ஓடினர், அவர்களை ஓடவைத்தது யார் அல்லது எது என்பதையெல்லாம் இந்த நாவலில் சொல்லியிருக்கிறேன். இந்தப் போரினால் சீனாவுக்கு இழப்பு அதிகம். இந்தியாவிற்குக் குறைவான இழப்புதான். பசி மற்றும் பஞ்சத்தால் இந்த யுத்தம் நிகழ்ந்த காலகட்டத்தில் 1959-62க்குள் சைனாவில் முப்பது லட்சம் பேர் இறந்திருக்கின்றனர். இது பதிவு செய்யப்பட்டுமிருக்கிறது.

தெலுங்கில் திருமுறைகள்
ஈழப் பேரறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐ.நா.வில் பணிசெய்தவர். அவர் சைவத்துக்குச் செய்திருக்கும் தொண்டு தமிழர்கள் போற்றவேண்டிய ஒன்று. அவரை நான் 'சிவகணம்' என்றுதான் சொல்வேன். என்ன காரணமென்றால் தேவாரத்தை உலகமெல்லாம் கேட்கும் அளவிற்குக் கொண்டு சேர்த்திருக்கிறார் அவர். thevaaram.org என்ற தளத்தில் தேவாரப் பாடல்கள் அனைத்தும் வலையேற்றப்பட்டுள்ளன. அவற்றுக்கான விளக்கங்களும் உள்ளன. அவற்றை நீங்கள் இசையாகக் கேட்கவும் முடியும். மிகப்பெரிய பணி அது. அதைச் சைவத்திற்கு, தமிழுக்குத் தான் செய்யும் சேவையாகக் கருதி, அவர் செய்திருக்கிறார். ஒரு சமயம் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இதனைத் தமிழ் மட்டுமல்லாது எல்லா மொழிகளுக்கும் கொண்டு சேர்க்க விரும்புகிறேன். தெலுங்கில் மொழிபெயர்க்க உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டார். எனது மனைவி சஷிகலா அனந்தபூரைச் சேர்ந்தவர். சத்ய சாயி கல்லூரியில் படித்தவர். அவருக்குத் தெலுங்கு நன்றாகத் தெரியும். தமிழிலும் வல்லவர். அவரிடம் நான் மொழிபெயர்க்கக் கேட்டேன், ஒப்புக்கொண்டார். அதன்படி முதல் மூன்று திருமுறைகளையும் தெலுங்கில் அவர் மொழிபெயர்த்தார். இதே போல் 4, 5, 6ம் திருமுறைகளை பேராசிரியர் சத்யவாணி (திராவிடப் பல்கலைக்கழகம், சித்தூர்) செய்து கொண்டிருக்கிறார். திருவாசகம் மொழிபெயர்ப்பு நிறைவாகிவிட்டது. ஏழாம் திருமுறையைத் தெலுங்குப் பேராசிரியர் மூர்த்தி செய்தார். ஒன்பது, பத்தாம் திருமுறைகளை திருப்பதி பல்கலைக்கழகத்தில் முனிரத்தினம் என்னும் பார்வையற்ற ஒருவர் செய்து கொண்டிருக்கிறார். பிரெய்லி முறையிலேயே அனைத்தையும் படித்து அவர் இதனைச் செய்து கொண்டிருக்கிறார். திருமந்திரத்தை மொழிபெயர்ப்பதில் அவருக்கு ஆசை மிகவும் அதிகம். பதினோராம் திருமுறை முடிந்துவிட்டது. பன்னிரண்டாம் திருமுறை வேலை நடந்து கொண்டிருக்கிறது.

ஆந்திராவில் நாகார்ஜுனா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் பாலமோகன்தாஸ் 'அனந்த விநாயகர்' என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் எழுதியுள்ள நூலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். என்னுடைய முதல் நாவலான வம்சதாரா தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதை நவம்பர் 26 அன்று விசாகப்பட்டினத்தில் மிகப்பெரிய அளவில் வெளியிட இருக்கிறார்கள். தெலுங்கில் சமூக நாவல்கள்தான் அதிகம். வரலாற்று நாவல்கள் மிகக்குறைவு. இல்லவே இல்லை என்றுகூடச் சொல்லலாம். தமிழிலிருந்து தெலுங்கிற்கு ஒரு சரித்திர நாவலைக் கொண்டு வருவது ஒரு பெரிய சாதனை என்றார் தெலுங்கு அறிஞரான பிரபாகர்.

விசாகப்பட்டினம் தமிழ்ச்சங்கம்
விசாகப்பட்டினம் தமிழ்ச்சங்கம் 1903ல் தொடங்கப்பட்டது. 115 வருடம் பழமையானது. அது நிறுவப்பட்டதற்கு ஆதாரமான கல்வெட்டுகூட இருக்கிறது. இன்றைக்குச் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அந்தத் தமிழ்ச்சங்கத்தில் பல பணிகளைச் செய்திருக்கிறேன். 1994ல் நானும் எனது நண்பர் சம்பத்தும் சங்கத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டோம். சம்பத் ஹிந்துவில் பணியாற்றியவர். தமிழ் மன்றத்தை தமிழ்க் கலைமன்றம் என்று பெயர் மாற்றினோம். அதனை முறையாகப் பதிவுசெய்தோம். 2002-2003ல் சங்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினோம். பின்னர் நிதி திரட்டி, இடம் தனியாக வாங்கி, அதில் சிறியதாக ஒரு கல்யாண மண்டபம் ஒன்றைக் கட்டினோம். இன்றளவும் அங்குள்ள ஏழைகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தக் கொடுக்கிறோம். மன்றத்தின் மூலம் அங்குள்ள தமிழர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்ந்தோம். இசை, பாடல் என்று இன்றளவும் அவர்கள் ஊக்கமுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாரதி விழா, ஆசிரியர் தின விழா என்று பல விழாக்களை நடத்தி வருகிறோம். அரசின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் அதில் கலந்து கொள்வார்கள். தெலுங்கு, தமிழ் என்கிற பேதமில்லாமல் அங்கே விழாக்கள் நடக்கும்.



விமர்சனங்கள்
சில நாத்திக அன்பர்கள் என் புத்தகங்களின் கருத்தை எதிர்த்து எனக்குக் கடிதம் எழுதுவதுண்டு. கோவையைச் சேர்ந்த ஒரு அன்பர் கடுமையாக விமர்சித்திருந்தார், அத்துடன் என் கதையில் நாத்திகரும் நல்லவர்தான் என்று எழுதியதைக் காண்பித்து இந்த ஒரு வரிக்காக என்னை மன்னித்து விடுவதாக எழுதி இருந்தார். அவரவர் பார்வை அவரவருக்கு என்று சமாதானம் செய்துகொள்வேன். மற்றபடி பாராட்டினாலும் எதிர்த்தாலும் நான் வரவேற்கவே செய்கிறேன். அப்போதுதான் நிறை, குறைகள் தெரியும். இன்றைக்கும் வம்சதாரா தொடங்கி எனது பல நாவல்களுக்கு விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதே சமயம் கல்கிக்கோ, சாண்டில்யனுக்கோ கிடைத்த முக்கியத்துவம் இன்றைய வரலாற்று நாவலாசிரியர்களுக்குக் கிடைக்காது என்பதும் எனக்குத் தெரியும். அதை உணர்ந்தேதான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். காலம் மாறிவிட்டது. பத்திரிகைகளில் முன்பு இருந்ததுபோல் வரலாற்றுத் தொடர்களுக்கு - ஏன் தொடர்கதைகளுக்கே - வரவேற்பு இல்லை. அதனால்தான் எனது நாவல்களை நான் புத்தகமாகவே வெளியிடுகிறேன். அதற்கு வரவேற்பு இருக்கிறது.

அடுத்த நாவல்...
தற்போது நான் 1940-1945 வரை உள்ள காலகட்டத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். இது இரண்டாம் உலகப்போர் நடந்த காலம். சென்னையில் குண்டு போட்டிருக்கிறார்கள். இலங்கையிலும் விசாகப்பட்டினத்திலும் குண்டு போட்டிருக்கிறார்கள். அதுபற்றிய தரவுகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். முடிந்ததும் எழுதத் துவங்கவேண்டும்.

குடும்பம்
எனது மனைவி சஷிகலா எனது பணிகளுக்கு மிகவும் உறுதுணை. அவர் விசாகப்பட்டினத்திலுள்ள 'பென்' பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியையாகப் பணிசெய்து விருப்ப ஓய்வு பெற்றவர். தற்சமயம் எழுத்துப் பணி செய்கிறார். மகன், மகள் இருவருமே மென்பொருள் பொறியாளர்கள். மகன் சிவகுமார் லண்டனில் இருக்கிறார். பெண் சியாமளி நியூ ஜெர்ஸியில் இருக்கிறார். 'தென்றல்' இதழைப் பல ஆண்டுகளாக நான் அறிவேன். அமெரிக்கா செல்லும்போது தென்றலை வாசித்திருக்கிறேன். அதில் சில நூல் அறிமுகங்கள் எழுதியிருக்கிறேன். தென்றல் வாசகர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

நாமும் அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


ராஜாஜியும் நானும்
நான் ராமகிருஷ்ணா பள்ளியில் படிக்கும்போது பள்ளிக்குப் பக்கத்தில் ராஜாஜி குடியிருந்தார். இடைவேளையின் போது அவர் வீட்டிற்கு தண்ணீர் குடிக்கப் போவேன். அவர் மிகப்பெரிய மனிதர் என்பது பின்னால்தான் தெரிந்தது. அவர் வேஷ்டி, அங்கவஸ்திரம் இல்லாவிட்டால் காசித்துண்டு போட்டுக்கொண்டு மிக எளிமையாக இருப்பார். எங்களுக்குச் சரிசமமாக புழக்கடைப் பக்கம் உள்ள படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு எங்களைப் பற்றி, பாடங்கள் பற்றி எல்லாம் விசாரிப்பார். கவர்னர் ஜெனரலாக, முதல்வராக இருந்தவர் அவர். ஆனால் அவரிடம் எந்த பந்தாவும் இருக்காது. எந்தவித வித்தியாசமும் காட்டாமல் எங்களிடம் பழகினார். அந்த நினைவுகளை மறக்கமுடியாது.
- திவாகர்

*****


உவமைக்கு ஒரு தேவன்
என்னை மிகமிகக் கவர்ந்த எழுத்தாளர் என்றால் அது தேவன்தான். தேவன் கதையான மிஸ் ஜானகி என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஆத்திசூடி. உவமை கொடுத்து எழுத தேவனை விட்டால் வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்கமுடியாது. தேவனின் கதைகளை மட்டுமே ஆராய்ந்து ஒரு நூலை எழுதியிருக்கிறேன். அதை அவரது நூற்றாண்டு விழாவின் போது வெளியிட்டேன். அது மின்னூல் ஆகவும் வந்திருக்கிறது. அந்தக் காலச் சமூகநிலையை, மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருப்பார். மிஸ் ஜானகி, கல்யாணி, ஸ்ரீமான் சுதர்சனம் போன்ற அவரது கதைகளைப் படிக்கும்போது ஒரு இடம் எப்படி இருந்தது, ஒரு சமூகம் எப்படி இருந்தது என அறிந்துகொள்ள முடியும். அவர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசியதும், நூல் வெளியிட்டதும் எனக்கு மிகப்பெரிய கொடுப்பினைகள்.
- திவாகர்

*****


முருகக் கடவுள் வழிபாடு
முருகன் வழிபாடு தமிழகத்தில் மட்டுமல்ல; ஆந்திரத்திலும் அதிகம். சொல்லப் போனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முருகன் இங்கே வழிபடப்பட்டு வருகிறார். இதை உலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அது குறித்த தகவல்களைத் திரட்டி எனது வலைப்பூவில் கட்டுரையாக எழுதினேன்.
அங்கே முருகனை 'சுப்ரமண்யன்' என்று கூப்பிடுவார்கள். விசாகப்பட்டினத்தில் அப்பா ராவ், சுப்பா ராவ் என்ற பெயர்கள் சகஜம். அவை முருகனைக் குறிப்பவையே. நாகார்ஜுனா அணை கட்டுவதற்கு முன்பாக அந்த இடப்பகுதியைச் சீர்திருத்திய போது ஆறுமுகம் கொண்ட முருகனின் பழைய காசு அங்கே கிடைத்திருக்கிறது. அது பொதுயுகம் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இன்றைக்கும் அருங்காட்சியகத்தில் அதனைப் பார்க்கலாம்.
- திவாகர்

*****


நம்மாழ்வாரும் நானும்
என்னை மிகமிகக் கவர்ந்தவர் நம்மாழ்வார். அடுத்து, மாணிக்கவாசகர். நம்மாழ்வார் வைணவர்களுக்கு மட்டுமானவர் அல்லர். அவர் மனிதர்கள் எல்லாருக்குமானவர். அவர் எழுதியிருக்கும் பாடல்கள் மிக உயர்வானவை. அவர் பாடல்களைப்பற்றி நிறைய வைணவ அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவை தமிழும் சமஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாள நடையில் உள்ளன. அவற்றைத் தமிழில் தரவேண்டும் என்று எனக்கு ஆர்வம் அதிகம். அவர் எழுதாதது இல்லை. பெருவெடிப்புக் கொள்கை பற்றி எழுதியிருக்கிறார். சிருங்காரம் எழுதியிருக்கிறார். அவர் தொடாததே இல்லை. பெருவெடிப்பிற்குப் பின்னால் உள்ளதை விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்னால் நடந்ததை அவர்களால் விவரிக்க முடியவில்லை. ஆனால், நம்மாழ்வார் எழுதுகிறார்.

யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் எவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற ஒன்றை உணர்ந்தேனே


என்று திருவாய்மொழியில் சொல்லியிருக்கிறார்.
இங்கே வரும் "தனிமுதல்" என்ற வார்த்தை குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் உதாரணம்தான். இப்படி நிறைய இருக்கிறது.

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.


இந்தப் பாடலில் ஆழ்வார் ஏன் 'குறைவிலர்' என்று சொல்லியிருக்கிறார்? 'குறையிலர்' என்பது தானே சரியாக இருக்கும் என்று என்னுடைய நண்பர் ஒருவர் கேட்டார். அவர் நாத்திகர். ஆனாலும் பாசுரங்கள் உள்பட நிறையப் படித்தவர். இப்படி ஆத்திகர் மட்டுமல்லாது நாத்திகரையும் ஈர்க்கும் தமிழ்ச் சுவை, தத்துவச் சுவை உடையது நம்மாழ்வாரின் பாசுரங்கள். அதனால் தான் அவர் நம் - ஆழ்வாராக இருக்கிறார். என்னுடைய எல்லா படைப்புகளிலும் அவர் தவறாது இடம் பெற்றுவிடுவார்.

- திவாகர்

*****


கௌரவங்கள்
கோயமுத்தூர் ஹிந்துஸ்தான் கலைக்கல்லூரியும் கோவைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து - புதின இலக்கியப் புதுமையாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை - மரபுச் செல்வர்
புவனேஸ்வர் தமிழ்ச்சங்கம் - வரலாற்றுத் திலகம்'

சிங்கப்பூர், வாஷிங்டன், ஃபிலடெல்ஃபியா, லண்டன் தமிழ்ச்சங்கங்களில் சிறப்புரையாற்றியுள்ளார். சிங்கப்பூர் திருமுறை மாநாட்டில் 'தேவாரம் - பெயர் வந்த வரலாறு' குறித்துப் பேருரை நிகழ்த்தியுள்ளார். கோவை செம்மொழி மாநாட்டில் "தமிழ்ச்சங்கங்கள் மூலம் தமிழ் வளர்ப்பு" என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்தார்.

© TamilOnline.com