"ஏய்! யாராது. மரத்தை இப்படி ஆட்டுறது... மேலே இருக்கிறது தெரியலையா?" எனச் சத்தமாகக் கேட்டது உராங் உட்டான் குரங்கு.
"ஓ! நீ மேலே இருக்கியா? நான் பார்க்கலே. மன்னிச்சுடு" எனத் தனது கரகரக் குரலாய்ச் சொன்னது அப்பு யானை.
"அட! அப்பு நீயா? என்ன அவசரம். எதற்கு இந்த மரத்தை இப்படி ஆட்டுற" என மீண்டும் கேட்டது உராங் உட்டான்.
"அவசரம்தான். இந்தத் தென்னை ஓலையைப் பறித்து அதிலிருக்கும் குச்சிகளைக் கொண்டு துடைப்பம் செய்யப் போகிறேன்" என்றது குட்டியானை அப்பு.
"என்னது? துடைப்பமா?" என ஆச்சரியப்பட்ட உராங் உட்டான், "துடைப்பம் எதற்கு?" என்று கேட்டது.
"உனக்குத் தெரியலையா? நம்ம காடு எவ்வளவு அசுத்தமா இருக்கு. அதைச் சுத்தப்படுத்துவது நமது கடமை இல்லையா. இந்தக் காடு நமக்கு வசிக்க இடம் தருது. உண்பதற்குக் கனி தருது. குளிக்க, குடிக்க நீர் தருது இல்லையா? ஆனா அந்தக் காட்டைச் சுத்தம் பண்ணத்தான் யாருமே இல்லை" என வருத்தப்பட்டது அப்பு.
அப்பு இப்படித்தான் எதற்கெடுத்தாலும் வருத்தப்படும். அனைவரையும் அழைத்து ஆலோசனைகளைச் சொல்லும். ஆனாலும் முடிவில் அதுவே அந்த வேலையைச் செய்து முடித்துவிடும்.
"ஓகோ! காட்டைச் சுத்தம் செய்யப் போறியா. சரி, சரி. இரு நான் இந்த தென்னை மரத்தை விட்டு இறங்கின பின்னாடி ஓலையைப் பறி" என்றுக் கூறிக்கொண்டே இறங்கியது உராங் உட்டான்.
உராங் உட்டான் இறங்கிய பிறகு, அந்தத் தென்னை மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு ஓலையைத் தனது நீண்ட தும்பிக்கையால் வெகு எளிதாகப் பறித்துப் போட்டது அப்பு.
"அப்பு கேட்கிறேனேன்னு கோவிச்சுக்காதே... நீ என்னதான் சுத்தப்படுத்தினாலும் மீண்டும் குப்பைகள் சேரத்தானே செய்யும்? அதுவுமில்லாம மரத்தோட இலைகள் உதிர்ந்து... உதிர்ந்து... குப்பையாவது இயல்புதானே" என்று கேட்டது உராங் உட்டான்.
"ஆமாம் நண்பா! நீ சொல்வது சரிதான். மரத்தோட இலைகள் உதிர்வது இயல்புதான். ஆனால் அதனைக் கொண்டுபோய் நாம் சேகரித்துப் பயன்படுத்தினால் அது சிறந்த உரமாகுமே" எனப் பதில் அளித்தது அப்பு.
"அப்படியா? சரி. அப்ப நீ ஒரு முடிவோடதான் வந்திருக்க. உன்னிடம் பேசிப் பயனில்லை. நான் என் வேலையை கவனிக்கிறேன். நீ உன் வேலையைக் கவனி" எனச் சொல்லி தாவியது உராங் உட்டான்.
காட்டைச் சுத்தம் செய்ய, அப்பு எடுத்த முடிவு அந்தக் காடு முழுவதும் பரவியது.
அனைத்து விலங்குகளும் ஒவ்வொன்றாக அப்புவை நோக்கி வந்தன.
"உனக்கெதுக்கு அப்பு இந்த வேலை?" எனக் கேள்வி கேட்டு நகர்ந்தது ராஜநாகம்.
"வேலை வெட்டிக்குப் போகலைன்னா இப்படித்தான் எதையாவது செய்யத் தோணும்" எனக் கேலி செய்தது கரடி.
ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு கருத்தைச் சொன்னார்களே தவிர, யாருமே அப்புவுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
யார் சொன்னதையும், மனதில் ஏற்றுக்கொள்ளாமல் தனது வேலையைச் செய்ய ஆரம்பித்தது. முதலில் தன் தும்பிக்கையால் குப்பைகளை அள்ளிப் போட்டது. அதில் சிறிய குப்பைகளை எடுக்க முடியவில்லை. அதனால் தான் முன்னால் போட்ட அந்த தென்னை ஓலையை எடுத்தது. அதிலிருந்த ஓலையைக் கிழித்துவிட்டு, குச்சிகளைக் கொண்டு துடைப்பம் தயார் செய்தது குட்டியானை அப்பு.
இதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தூக்கணாங்குருவி. "அட! அந்தக் குச்சிகளை வைத்து, எவ்வளவு நேர்த்தியாகத் துடைப்பம் செய்கிறது இந்த குட்டியானை. நாம் நம் கூட்டையும் இந்தக் குச்சியால் கட்டினால் இன்னும் உறுதியாக இருக்குமே" என வியந்தது.
தனது நீண்ட துதிக்கையால் அந்த துடைப்பத்தைப் பிடித்து, அந்தப் பகுதியைப் பெருக்க ஆரம்பித்தது. காலையில் ஆரம்பித்த வேலை, நண்பகல் வரை நீண்டது. பல பகுதிகள் சுத்தமாகின. காலையில் இருந்து வேலை செய்ததால் குட்டி யானை அப்புவுக்கு ஓய்வு தேவைப்பட்டது.
ஒரு ஆலமரத்தின் கீழே படுத்துக்கொண்டு ஓய்வெடுத்தது.
ஒரு பகுதி சுத்தமானதைப் பார்த்த விலங்குகள் மிகவும் ஆச்சரியப்பட்டன.
"அட! அப்பு ஒருவனாலே இந்த இடம் இவ்வளவு சுத்தமாகிவிட்டது. நாமும் அவனோடு சேர்ந்தால் முழுக்காடும் சுத்தமாகுமே" எனச் சத்தமாகச் சொன்னது உராங் உட்டான்.
"ஆமாம். நீ சொல்வது சரிதான். நாமும் இதில் இணைந்து காட்டைச் சுத்தப்படுத்துவோம்" என்றன பல உராங் உட்டான்கள்.
ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த அப்புவிடம் வந்தன. "அப்பு! எங்களை மன்னித்துவிடு. எங்களுக்கும் இந்தக் காட்டின் மீது அக்கறை இருக்கு. நாங்களும் உன்னோடு சேர்ந்து இந்தக் காட்டைச் சுத்தப்படுத்த வந்திருக்கிறோம்" என்றது உராங் உட்டான்.
'ஆமாம்' என்பதைப் போல தலை அசைத்தன பல உராங் உட்டான்கள்.
"அப்படியா! மகிழ்ச்சி" வாங்க சேர்ந்தே செய்வோம் என்றது குட்டியானை அப்பு.
"எங்களுக்கும் துடைப்பம் செய்து கொடு" என்றன உராங் உட்டான்கள்.
"சரி. சரி. சீக்கிரம் வாங்க" என்று தென்னை மரத்துக்கு அழைத்துச் சென்று ஓலைகளைப் பறித்து, வேகவேகமாகத் துடைப்பம் செய்து கொடுத்தது குட்டியானை அப்பு.
அதைவாங்கிய குரங்குகள் ஒவ்வொரு பகுதியாகப் பிரித்துக் கொண்டு பெருக்க ஆரம்பித்தன.
சேகரித்த தழைகளை எந்தப் பள்ளத்தில் போடுவது என்று யோசனை செய்துகொண்டு நின்றன.
"என்ன யோசனை... இந்தத் தழைகளை போடுவதற்குப் பள்ளம் எங்கே இருக்கு... என யோசிக்கிறீர்களா? இதோ நாங்களே தோண்டுகிறோம்" எனக் கூறிப் பெரிய பள்ளத்தைத் தோண்டின பன்றிகள்.
இதைப் பார்த்த பல விலங்குகள் சேகரித்த குப்பைகளை அந்தப் பள்ளத்தில் கொட்ட முன்வந்தன.
வனவலம் வந்த சிங்கராஜா இந்தக் காட்சியைக் கண்டு மிகவும் மகிழ்ந்து போனார்.
"நாளை அரண்மனைக்கு வாருங்கள். உங்கள் எல்லோருக்கும் சிறப்பான விருந்து இருக்கு" என்று காட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்த விலங்குகளிடம் சொல்லிச் சென்றார் சிங்கராஜா.
மறுநாள் அரண்மனை விருந்தில் 'இனி வாரம்தோறும் காட்டைச் சுத்தப்படுத்துவது முதன்மைப் படுத்தப்படும்' என முடிவு எடுக்கப்பட்டது.
அந்தத் துறைக்குக் குட்டியானையையே முதன்மை அதிகாரியாக நியமித்தார் சிங்கராஜா.
'சுத்தமே சுகாதாரம்' என்கிற தாரக மந்திரத்தைக் கற்றுத்தந்த குட்டியானை அப்புவை மனதார வாழ்த்திச் சென்றன மற்ற விலங்குகள்.
கன்னிக்கோவில் இராஜா |