கன்னிக்கோவில் இராஜா
வறண்ட குளங்கள்
தூர்வாரப்பட்டு தொடங்குகின்றது
கட்டடப் பணி

கூவம் நதியில்
கலக்கும் கழிவு
கற்பிழக்கும் கடல்

பெண்கல்வி அவசியம்
சுவரின் மீது
சாணி தட்டும் சிறுமி

இதுபோன்ற ஹைக்கூக் கவிதைகள் மூலம் இலக்கிய உலகில் தன்னைக் கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டவர் கன்னிக்கோவில் இராஜா. இவர் கவிஞர் மட்டுமல்ல; எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாசிரியர், நூல் தொகுப்பாளர், இதழ் வடிவமைப்பாளர் எனப் பல திறக்குகளிலும் இயங்கி வருபவர். சென்னை அபிராமபுரத்தில் உள்ள கன்னிக்கோவில் பள்ளம் என்ற பகுதியில், திரு. செந்தாமரை - திருமதி கஸ்தூரி தம்பதியினருக்கு, டிசம்பர் 11, 1975 அன்று பிறந்தார். பள்ளிப்பருவத்திலேயே வாசிப்பதில் அதிக ஆர்வம். ஆசிரியரான புலவர் இலமா. தமிழ்நாவன் அவர்களால் தமிழார்வம் மேலும் வளர்ந்தது. பாரதி பிறந்த அதே தேதியில் பிறந்த இவருக்குப் பாரதி, பாரதிதாசன் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு. படிக்கும் காலத்திலேயே சிறு சிறு ,கவிதைகளை எழுதத் துவங்கினார். ஏர்வாடி ராதாகிருஷ்ணனை ஆசிரியராகக் கொண்ட 'கவிதை உறவு' இதழ் இவருக்குப் பல வாசல்களைத் திறந்துவிட்டது. அவர்களது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவிதை வாசிப்பது வழக்கமானது. ஒரு சமயம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுரதா இவரது கவிதையைப் பாராட்டினார். அது மேன்மேலும் கவிதைகள் எழுதத் தூண்டியது.

Click Here Enlargeகுடும்பச் சூழ்நிலையால் கல்வி தடைப்பட்டது. பணிக்குச் செல்ல நேர்ந்தது. பணி செய்துகொண்டே, தட்டச்சு பயின்று தேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் தட்டச்சுப் பயிற்சி ஆசிரியர் மற்றும் நண்பர்களின் உறுதுணையால் அண்ணாமலை பல்கலையில் இளங்கலை வரலாறு படித்தார். பணி செய்துகொண்டே படித்தார். கூடவே, தன்னைப் போன்று கல்வியில் தடைப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து படிக்கக் கன்னிக்கோவில் பகுதியில் 'டாக்டர் அம்பேத்கார் இரவுப் பாடசாலை'யைத் தொடங்கி நடத்தினார். அதில் மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் நடந்த அந்தப் பள்ளி சில பிரச்சனைகளால் மூடப்பட்டது. சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதால் தனக்குக் கிடைத்த நேரத்தில் சமூகப்பணிகளை முன்னெடுத்து வந்தார். வருவாய்க்கென, மாலைநேரப் பணிகள் சிலவற்றையும் செய்து வந்தவர், வீட்டருகில் இருந்த ராஜகணபதி ஆலயத்தில் பகுதிநேர அர்ச்சகராகவும் பணியாற்றியிருக்கிறார்.

பல சிற்றிதழ்களுக்குக் கவிதைகளையும், சிறுசிறு ஹைக்கூக் கவிதைகளையும் தொடர்ந்து எழுதி வந்தார். 2001ல் நடைபெற்ற 'உரத்தசிந்தனை' கவிதைத் தேர்வில் இவர் கவிதை வெற்றிபெற்றதோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்த புதுக்கவிதைப் பிதாமகர் கவிஞர் மு. மேத்தாவின் பாராட்டையும் பெற்றுத் தந்தது. 2005ல் பல்வேறு இதழ்களில் தான் எழுதி வந்த ஹைக்கூக் கவிதைகளைத் தொகுத்து 'தொப்புள்கொடி' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். தொடர்ந்து மேலும் சில கவிதைகளைத் தொகுத்து 'கன்னிக்கோவில் முதல்தெரு' என்ற தலைப்பில் வெளியிட்டார். இவ்விரண்டு நூல்களும் இவரைச் சிறந்த கவிஞராக அடையாளம் காட்டின. பத்திரிகை, இதழ் வடிவமைப்பாளராக, நூலட்டை உருவாக்குபவராக எனப் பல பணிகளைத் தொடர்ந்து செய்தபடியே எழுத்துத் துறையிலும் தீவிரமாக இயங்கினார். சிறார்களுக்காகப் பல பாடல்களையும் கதைகளையும் எழுதி வந்த இவர், தனது பாடல்களைத் தொகுத்து 'மழலைச்சிரிப்பு' என்ற நூலாக வெளியிட்டார். 'ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி' என்பது இவர் எழுதிய சிறுவர் கதைகளின் தொகுப்பாகும். 'அணில் கடித்த கொய்யா', 'பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம்', 'கொம்பு முளைத்த குதிரை', 'நிலவை எச்சரித்த கரடிக் குட்டி', 'மூக்கு நீண்ட குருவி' போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த சிறுவர் படைப்புகளாகும். பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் படைப்புகளைத் தந்துள்ளார். இவரது சிறார் பாடல்களும் ஐந்து தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. ஹைக்கூ, லிமரிக்கூ வகைப் புதுக்கவிதைகளும் இதுவரை ஏழு நூல்களாக வெளியாகியுள்ளன. 'சென்னைவாசி', 'ஆழாக்கு', 'வனதேவதை' போன்றவை இவரது முக்கியமான கவிதை நூல்களாகும்.

Click Here Enlargeஎஸ்.எம் எஸ். மூலம் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பேருக்குக் கவிதைகளைப் பரிமாறி அதனை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார். இவரைப் பின்பற்றி, இவரை முன்னோடியாகக் கொண்டு பலரும் இம்முயற்சிகளை மேற்கொண்டனர். தமிழ் ஹைக்கூ பற்றி ஆராய்ந்து 'தமிழ் ஹைக்கூ இன்று நேற்று நாளை' என்ற தலைப்பில் கட்டுரை நூல் ஒன்றை எழுதியுள்ளார். 58 பெண் கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து 'தென்றலின் சுவடுகள்' என்ற தலைப்பில் நூலாக்கி உள்ளார். இது கோவை அரசு பெண்கள் கல்லூரியிலும், சிவகாசி பெண்கள் கல்லூரியிலும் பாடமாக வைக்கப்பட்டது. குழந்தை இலக்கிய எழுத்தாளர்களின் வாழ்க்கையைத் தொகுத்து 'குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள்' என்ற பெயரில் நூலாக்கி உள்ளார். பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை இவர் தொகுத்துள்ளார். இவருடைய சில கவிதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

Click Here Enlargeப. சிதம்பரம் அவர்கள் தொடங்கிய 'எழுத்து' இலக்கிய அமைப்பின் நூலாக்கப் போட்டியில் இவரது 'பூமிக்கு இறங்கி வந்த குட்டிமேகம்' சிறந்த சிறார் நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சாகித்ய அகாதமி தொகுத்த 'சிறுவர் கதைகள்' நூலிலும் இவரது கதை இடம் பெற்றுள்ளது. அதுபோல் அகாதமி வெளியிட்ட 'தமிழ் ஹைக்கூ ஆயிரம்' நூலிலும் இவரது ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இந்திய ஆய்வியல் துறை மலாய்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய கலைஞன் பதிப்பகம் வைரவிழாவை ஒட்டி நடந்த நூலாக்கப் போட்டியில் 'தங்க மீன்கள் சொன்ன கதைகள்' நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு மலேசியாவில் வெளியானது. உரத்தசிந்தனை இதழ் நடத்திய 'குழந்தை இலக்கியத் திருவிழா'வில் இவரது குழந்தை இலக்கியச் சேவையைப் பாராட்டி நீதியரசர் டி.என். வள்ளிநாயகம் பரிசு வழங்கிச் சிறப்பித்தார். 'அப்துல்கலாம் பொன்மொழிக் கதைகள்' என்ற நூலுக்கு அழ. வள்ளியப்பா நினைவுப் பரிசு கிடைத்தது. வானொலி சிறுவர் சங்கப் பேரவை இவருக்கு 'குழந்தை இலக்கிய ரத்னா' என்ற விருதை வழங்கியது. 'கவிஞாயிறு தாராபாரதி ஹைக்கூ விருது', 'உரத்த சிந்தனை நூல் விருது', 'ஈரோடு தமிழன்பன் விருது', 'துளிப்பா சுடர் விருது', 'சக்தி கிருஷ்ணாமி விருது' என இவர் பெற்றிருக்கும் விருதுகள் ஏராளம். 'இதழியல் சாரதி', 'இலக்கியச் சுடர்மணி', 'எண்ணச் சுடர்', 'துளிப்பா பரிதி', 'சிந்தனைச் செம்மல்' எனப் பல பட்டங்களையும் பெற்றுள்ளார். முனைவர் பட்ட, இளமுனைவர் பட்ட ஆய்விற்காக இவரது படைப்புகளைப் பல மாணவர்கள் ஆராய்கின்றனர். 'இலக்கியத் தோப்பு கன்னிக்கோவில் இராஜா' என்ற தலைப்பில் இவரது படைப்புகளைத் திறனாய்வு செய்துள்ளார் முனைவர் மு. குமரகுரு. மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையும் இணைந்து கலைஞன் பதிப்பகம் மூலம் அந்நூலை வெளியிட்டுள்ளது.

"அடுத்த தலைமுறையை அரவணைத்துக் கொண்டு செல்லுகின்ற தகுதி கன்னிக்கோவில் இராஜாவிற்கு நிறைய உண்டு. அதுதான் அவரின் துறைசார்ந்த வெற்றி. என் தம்பிபோலக் கருதுகின்ற கன்னிக்கோவில் இராஜா இந்தச் சிறுவர் இலக்கியத் துறையில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்கிறார் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன்.

எளிமை அழகு வளமுடன் சொற்கள்
தெளிவாய் அமைந்த கவிஞர் - நலமார்ந்த
கன்னிக்கோ வில்ராஜா காட்டிய காட்சிகளும்
எண்ணத்தில் என்றும் இனிக்கும்.

என்று வாழ்த்தியிருப்பவர் ஆன்மிக அன்னை திருமதி மதிஒளி சரஸ்வதி அவர்கள். மேலும் அவர், "கன்னிக்கோவில் இராஜாவின் குழந்தைப் பாடல்கள் குழந்தைகள் படிக்கவும், பாடவும், மிக மிக எளிமையான வரிகள். என்றும் நிலைப்பது. இதயத்தை மலைக்க வைப்பது. நம் மனதைக் குழந்தையாக்கிக் கொண்டு, எண்ணத்தைக் குழந்தையாக்கிக் கொண்டால்தான் எழுத்தில் அந்தக் குழந்தைப் பாடல் குழைந்து வரும். வெற்றி பெற்றுவிட்டார் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா மேலும் வளர்க" என்று வாழ்த்தியிருக்கிறார்.

kannikoilraja.blogspot.com என்பது இவரது வலைப்பூ. இவரது சிறார் படைப்புகளை சிறுவர்களே படித்து விமர்சனம் செய்துள்ளனர். (அதனைப் பார்க்க) சிறார் இலக்கியத்தின் மீது தனித்த கவனம் செலுத்தி இயங்கி வரும் கன்னிக்கோவில் இராஜா, தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சிறுவர்களுக்குக் கதை சொல்லும் நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார். தினமணி - சிறுவர் மணி மற்றும் தமிழ் இந்து இதழில் இவர் எழுதிய சிறார் கதைகள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றவை. மின்மினி (ஹைக்கூ இதழ்), துளிப்பா (இணைய வார இதழ்) அரும்பின் புன்னகை (குழந்தைகள் மாத இதழ்) போன்றவற்றின் ஆசிரியர். குழந்தைக் கவிஞர் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். மனைவி ராஜேஸ்வரி, குழந்தைகள் விஸ்வராஜா, பவயாழினியுடன் சென்னையில் வசிக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com