ந்ருத்யகலா: 'தேவரதா - கடவுளரின் வாகனங்கள்'
ஜூன் 3, 2018 அன்று கலிஃபோர்னியாவின் கூப்பர்டினோவில் செயல்பட்டு வரும் ந்ருத்யகலா டான்ஸ் கம்பெனி 'தேவரதா - கடவுளரின் வாஹனங்கள்' என்ற கருத்திலமைந்த தனது 3வது தயாரிப்பை சன்னிவேல் நிகழ்த்துகலைகள் அரங்கத்தில் வழங்கியது.

புராணங்களில் வரும் கடவுளர்களின் வாகனங்கள் எப்படி வந்தன என்பதைச் சித்திரிக்கும் விதமாக நடனநிகழ்ச்சியான 'தேவ ரதா'வை ந்ருத்யகலா மாணவர்கள் வடிவமைத்திருந்தார்கள். தொகுத்தளித்த மாதுர்யா சுரேஷ் ஒவ்வொரு நடனத்தின் பின்னணியையும் அழகாக விவரித்து நமது ஆர்வத்தைத் தூண்டினார்.

விநாயகர் எப்படி மூஷிகமாகிய மூஞ்சூறை வாகனமாகப் பெற்றார் என்பதிலிருந்து, சரஸ்வதியின் வாகனமான அன்னம் என்பதன் தத்துவம் உட்பட எல்லாவற்றையும் இவர்களது நேர்த்தியான, எழில்மிக்க நடனங்கள் பரவசம் தரும் வகையில் கண்முன் கொணர்ந்தன. கருட கௌத்துவம், நந்தி அஷ்டகம் ஆகியவையும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகின. நிகழ்ச்சியின் உச்சமாக, துர்க்கைக்குச் சிம்ம வாகனம் அமைந்ததைக் கூறும் வர்ணம்தான். பாபநாசம் சிவனின் "மயில் வாஹனா வள்ளி மனமோஹனா" முருகனின் மயில்வாகனப் பெருமையைக் கூறியது. இறுதியாக, சூரியனின் தேரோட்டியான அருணன் தன்னைக் கடுமையான வெம்மையிலிருந்து சப்தாஸ்வம் என்னும் ஏழு குதிரைகளைப் பயன்படுத்திக் காத்துக்கொண்ட கதைக்கு, எல்லா நடனமணிகளும் ஒன்று சேர்ந்து ஆடியது கண்கொள்ளாக் காட்சி.

ஜனனி நாராயணன் (நட்டுவாங்கம்), ஸ்னிக்தா வெங்கட்ரமணி (வாய்ப்பாட்டு), அஷ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்), விக்ரம் ரகுகுமார் (வயலின்) இளம் சந்தோஷ் ரவீந்திரபாரதி (மிருதங்கம்) ஆகியோர் சிறப்பாகத் துணை நின்றனர். ந்ருத்யகலா எப்போதுமே நமது பாரம்பரியக் கருத்துக்களைப் புதுமையாகப் படைப்பதில் முன் நிற்பது நாம் அறிந்ததே.

தொடர்புகொள்ள:
மின்னஞ்சல்: nrityakalyadance@gmail.com.
வலைமனை: www.nrityakalya.org

ஜனனி நாராயணன்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com