ஜகத்குரு ஆதிசங்கரரையும், அவர் அளித்த அத்வைத தத்துவத்தையும் மையப்படுத்திய நாடகம் 'சர்வம் பிரம்மமயம்'. சிகாகோவின் லாப நோக்கற்ற CAIFA மற்றும் GC VEDIC என்ற அமைப்புகள் இணைந்து, சேகர் சந்திரசேகர் எழுதி இயக்கிய இந்த நாடகத்தை, ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி லெமான்ட் ராமர் ஆலயக் கலையரங்கில் மேடையேற்றினர்.
ஐநூறுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்த இந்த நாடகத்தின் முதல் காட்சியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், நாரதர், முருகன் ஆகியோர், ஆதிசங்கரர் அவதார அவசியத்தைப் பளிச்சென்று எடுத்துரைத்தனர். சங்கரரின் அவதார நோக்கம், அவர் பிறப்பு, தங்க நெல்லிக்கனிகள் கொட்டும் காட்சி, இளம் சங்கரர் ஆபத் சன்யாசம் பெறுவது, கோவிந்த பகவத்பாதரிடம் மாணவனாகச் சேர்வது, வியாசரின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது, சனந்தனர் சீடராக வந்து பத்மபாதர் என்ற பெயர் பெறுவது, சண்டாளனை எதிர்கொண்டு உபதேசம் பெறுவது, மண்டனமிஸ்ரருடன் விவாதம் புரிவது, பஜகோவிந்தம் பாடுவது, இறுதியாக சங்கரர் முக்தி பெறுவது என்று சுவையாக நாடகம் நகர்ந்தது.
இளம் சங்கரராக நடித்த எட்டு வயது அபிநவ், நீண்ட வசனங்களை, தவறில்லாமல், சரியான முக பாவங்களுடன் பேசி நடித்து அசத்திவிட்டான். கனகமழை பொழியும் காட்சியில், மகாலட்சுமியிடம் எடுத்துரைத்து, அவளது கருணை அந்த ஏழைக்குக் கிடைக்க வேண்டும் என்று கோரி, கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லும் காட்சியில் அரங்கமே அதிசயித்துப் போனது.
சங்கரரின் தாய் ஆர்யாம்பாளாக நடித்த மரகதம் சுந்தரேசன், தந்தை சிவகுருவாக நடித்த சுதர்சன் சாரியுடன் போட்டி போட்டு நடித்தார், பாலசங்கரருக்கு ஆபத் சந்யாசம் வழங்கும் காட்சிகளில் அபிநவும், மரகதமும் பார்வையாளர்களை உருக்கிவிட்டனர்.
பெரிய சங்கரராக நடித்த நாரயணன் திருமலை பொருத்தமான தேர்வு. அத்வைத தத்துவ விளக்கங்கள் வரும் இடங்களில், சரியான ஏற்ற இறக்கங்களுடனும், உடல் மொழியிலும் பொருத்தமாக நடித்து ஆதிசங்கரராகவே காட்சியளித்தார்.
அத்வைத தத்துவத்தை எளிய வசனங்களில் புரியவைத்தது பாராட்டுக்குரியது. தங்க நெல்லிக்காய் கொட்டுவது, பால சங்கரரின் காலை முதலை கவ்வுவது, சனந்தனர் கங்கை ஆற்றின்மேல் நடக்கும்போது, அவர் பாதங்களைத் தாமரை மலர் தாங்குவது போன்ற காட்சிகள், கண்ணுக்கு விருந்து. இதனை ரவிகுமார், கணேஷ், சுபா, அனிதா ஆகியோர் திறம்பட மேடையில் காட்சிப் படுத்தியிருந்தனர்.
நாராயண நம்பூதிரியாக நடித்த சித்தூர் ரமேஷ் வரும் காட்சிகளிலெல்லாம், அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.
கனகதாரா காட்சியில் ஏழையாக நீரஜா, அவர் கணவராக கார்த்திக், மண்டனமிஸ்ரராக லட்சுமிநாராயணன் சனந்தனராக ஶ்ரீராம், சண்டாளனாக சுரேஷ் மகாதேவன் எல்லோருமே பாத்திரமறிந்து நடித்திருந்தனர்.
ரவிகுமார், தேவனாதன், லட்சுமி நாராயணன், கார்த்திக், சிறுமி தன்யா, லலிதா சுப்ரமண்யம், விஜய், ஶ்ரீராம், அரவிந்த், அருண், சுஜாதா நரசிம்மன், கணேஷ், சுபஶ்ரீ, விஜய், அனிதா, குமார் வெங்கட்ராமன், ஆனந்த் சிவராமன், DR. ராமமூர்த்தி, கே.ஜி.சீனிவாசன் மிகச்சிறப்பாக பிற பாத்திரங்களில் நடித்தனர்.
மேடை அமைப்பையும், காட்சி மாற்றங்களையும் ரவிகுமார், கணேஷ், உமாசங்கர், ஆனந்த் செய்திருந்தனர். ஒப்பனை, உடையலங்காரத்தை சுபஶ்ரீ கணேஷ், அனிதா விஜய், வனிதா, ஶ்ரீதேவி, சுபா சாரி பொறுப்பேற்றுச் செய்தனர். அரங்கப் பொருட்களை ப்ரியா நாராயணனும், மாலதி சந்திரசேகரும் நிர்வகித்தனர். பின்னணி இசையைக் கணேசன் சந்திரசேகரன் கவனித்துக் கொண்டார்.
வசனம் எழுதி, நாடகத்தை இயக்கிய சேகர் சந்திரசேகருக்கு நிறைந்த பாராட்டுகள்.
உங்கள் இடத்தில் இந்த நாடகத்தை நடத்த விரும்பினால் தொடர்பு கொள்க: hello@caifausa.org அல்லது info@gcvedic.org
லதா ஆழ்வார், சிகாகோ, இல்லினாய் |