செப்டம்பர் 1, 2 ஆகிய நாட்களில் விரிகுடாப்பகுதி கன்கார்டு முருகன் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டது. மயில் வாகனத்தில் ஊர்வலமும் நடந்ததால், தமிழ்நாட்டுத் திருவிழா போல் தோற்றமளித்தது.
சிறியவர் முதல் பெரியவர்வரை கான்கார்டு முருகன் திருவிழாவுக்கு ஆர்வம் கொப்பளிக்க வந்து சேர்ந்துவிட்டனர். கலை நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார்கள். இத்திருவிழா விரிகுடாப்பகுதி மக்களின் வாழ்முறையைப் பிரதிபலித்தது. இந்து மதத்தைச் சார்ந்து அமைந்தது. பன்னாட்டு முருக பக்தர்களும் பிறமொழி பேசுவோரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தவிர, குதிரை சவாரி குழந்தைகளிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
கன்கார்ட் நகர மேயர் எடி பிர்சான், துணைமேயர் கார்லின் ஒபிரிங்கர், கவுன்சில் உறுப்பினர் ரான் லியோன், கலிஃபோர்னியா மாநில அவை உறுப்பினர்கள் ஆஷ் கல்ரா மற்றும் டிம் கிரேசன் திருவிழாவில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார்கள்.
மக்கள் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அங்காடிகளில் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றை வாங்கினர். குடும்பத்தினரோடு கலந்துகொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு விழாக்களின் முக்கியத்துவம், கலாச்சாரம், பண்பாடு, சமூகநோக்கம் போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கலாம்.
இளங்கோ மெய்யப்பன் |