செப்டம்பர் 29, 2018 அன்று, டெக்சஸ் மாநில ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளியின் சார்பில் சுகர்லேண்ட் பள்ளிக்கிளையில் அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகம், ஆசிரியர் பயிற்சிப்பட்டறை மற்றும் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கருத்தரங்கம் ஆகியவற்றைச் சிறப்பாக நடத்தியது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. தலைவர் ஜெகன் அண்ணாமலை வரவேற்புரை வழங்கி, பள்ளி குறித்த விளக்கப்படத்தினை விவரித்தார். சிறப்புப் பயிற்றுநராக வருகை தந்திருந்த அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழக இயக்குநரும் பென்சில்வேனியா தமிழ்த்துறைப் பேராசிரியருமான திரு. வாசு ரெங்கநாதன் அவர்களைப் பள்ளி நிறுவனர் கரு.மலர்ச்செல்வன் அறிமுகப்படுத்தினார். அடுத்து, பேரா. வாசு பயிற்சியின் முதற் பகுதியைச் சிறப்புற வழங்கினார். தமிழ் உச்சரிப்பு ஒலிகள் விதிகள் மற்றும் எழுத்திலக்கண வரைமுறைகள் ஆகியனவற்றை எளிய முறையில் எடுத்துக்காட்டுகளுடன் விவரித்தார்.
பிற்பகல் நிகழ்வுகளில், பள்ளி ஆலோசகர் கரு. மாணிக்கவாசகம், வகுப்புநிலை மற்றும் பாடத்திட்டம் குறித்த விளக்கவுரை நிகழ்த்தினார். பின்னர் வாசு ரெங்கநாதன் அவர்களுக்கு வசந்தி ராமன் அவர்கள் பாராட்டுரை நல்கி பள்ளியின் நினைவுப்பரிசினை வழங்கினார்.
பயிற்சியின் இரண்டாம் பகுதியில் ஏழு கிளைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்தாய்வு செய்யக் குழுக்களாகப் பிரிந்து அமர்ந்தனர். அவர்களது ஐயப்பாடுகள் அலசப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பயிற்சி குறித்த பின்னூட்டம் பெறப்பட்டது.
பின்னர் நடந்த பள்ளியின் நிர்வாகக்குழுத் தேர்வுக் கூட்டத்தில் 2018-19 கல்வியாண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றனர். அடுத்து,ஏழு பள்ளிக்கிளைகளின் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பள்ளியின் தலைவர் ஜெகன் அண்ணாமலை, இக்கல்வியாண்டில் பியர்லேண்ட் கிளையின் துணைப்பள்ளியாக கிளியர்லேக் பகுதியில் புதிய பள்ளி திறக்கப்பட்டுள்ளதை அறிவித்தார். தொடர்ந்து, 'டெக்சஸ் பள்ளிக்கல்வியில் தமிழ்' என்னும் தலைப்பில் ஒருங்கிணைப்பாளர் சங்கர் கண்ணன் தொகுத்து வழங்கினார். பின்னர் ஆலோசகர் வெங்கட் பொன்னுசாமி பேசினார்.
இறுதி நிகழ்வாக, பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திரு. ஜெகன் அண்ணாமலை நன்றி கூற, விழா நிறைவடைந்தது.
கரு. மாணிக்கவாசகம் |