விபா: நிருத்ய சந்த்யா
அக்டோபர் 6, 2018 சனிக்கிழமை மாலை 7:00 மணியளவில் விபா (Vibha) நேப்பர்வில் கிறிஸ்துவ சமுதாய அரங்கில் (1635 Emerson Lane, Naperville, IL 60540) 'நிருத்ய சந்த்யா' என்னும் நாட்டிய நிகழ்ச்சியை வழங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள 37 குழந்தைகள்நலத் திட்டங்களுக்குச் செல்லும். இந்தத் திட்டங்கள் கல்வி, தொழிற்கல்வி, உடல் மற்றும் மன அளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு, அபாயகரமான சூழலில் வாழும் குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு தருதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை.

மதுரா சானே மற்றும் திவ்யா காண்டேகர் இருவரும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை வழங்குவர். மதுரா சிகாகோவில் வாழும் கதக் நடனமணி, நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் 'நிருத்ய நிகேதன்' அமைப்பின் நிறுவனர்-இயக்குனர் ஆவார். வளமான குரல் கொண்ட திவ்யா ஹிந்துஸ்தானி இசையில் சிறந்தவர். ஒடிசியில் தேர்ந்தவரான சிருஷ்டி சாஹுவின் அறிமுக நடனத்துடன் நிகழ்ச்சி தொடங்கும். ரசமான சில தும்ரிகள் மற்றும் மெல்லிசை ஆகியவற்றை திவ்யா தன் குரலாலும், மதுரா அபிநயத்தாலும் வழங்குவார்கள். மொத்தத்தில் இந்த மாலை மயக்கும் மாலையாக இருப்பதோடு, நலப்பணிக்கு உதவும் நிறைவைத் தருவதாகவும் அமையும்.

நுழைவுச் சீட்டுகள் 25 டாலரில் தொடங்குகின்றன. கொடையாளர் சீட்டுகள் 35 டாலரில் தொடங்கி $75 வரை வெவ்வேறு நிலையில் உள்ளன.

விபா அமெரிக்காவில் 501(c)(3) வரிவிலக்குப் பெற்ற நிறுவனம். நன்கொடை மட்டுமல்லாமல் தன்னார்வப் பணியாளர்களையும் விபா வரவேற்கிறது. இந்தியா மற்றும் அமெரிக்காவின் 18 மையங்களில் 2200 தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டுள்ளது விபா.

விபா-சிகாகோ வலைமனை: www.ac.vibha.org/chicago
தொண்டராகச் சேர: volunteer.vibha.org/signups/new

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com