தெரியுமா?: டொரண்டோ: தமிழர் தெருவிழா
நாலாவது ஆண்டாகத் தமிழர் தெருவிழா டொரண்டோவில் ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் பெருந்தொகையில் வசிக்கும் ஸ்காபரோ மற்றும் மார்க்கம் நகர்களை இணைக்கும் வீதியில் இது கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கும் அதிகம்! இந்தியத் துணைக்கண்டத்துக்கு வெளியே நடத்தப்படும் தெருவிழாக்களுள் மிகப்பெரியதும் சாதனை படைத்ததும் இந்தத் தமிழர் விழாதான்.

இம்முறை கனடிய மத்திய அமைச்சர்கள், உறுப்பினர்கள், நகரப்பிதாக்கள் உட்படப் பல தலைவர்கள் பங்குபற்றினர். இலக்கியவாதிகள், நாடகக்காரர்கள், இசை மற்றும் நடனத்துறை சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் விழாவில் கலந்து சிறப்பித்தனர். பரதநாட்டியம், கரகாட்டம், சிலம்பம், தெருக்கூத்து எனச் சகல கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல்நாள், 'மெகா ட்யூனர்ஸ்' குழுவுடன் பின்னணிப் பாடகர் கார்த்திக்கின் இசை விருந்தும், அடுத்தநாள் 'அக்னி' இசைக் குழுவினரின் நிகழ்ச்சியும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. உணவுச் சாவடிகளுக்கும், சிறுவர்களுக்கான களியாட்டங்களுக்கும் குறைவில்லை. பிற நாட்டினர் கரும்பு, பலாப்பழம், இளநீர், நுங்கு ஆகியவற்றைச் சுவைத்தது அரிதான காட்சி.

கனடியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் அனைவருக்கும் நுழைவு இலவசம். பேரவைத் தலைவர் மருத்துவர் சாந்தகுமாரும், உபதலைவர் சிவன் இளங்கோவும் விழாவை ஆரம்பித்து வைத்தனர். விழா முடிவில் டொரண்டோ பல்கலைக் கழகத்தின் மேம்பாட்டு இயக்குநர் ஜோர்ஜெட் சினாட்டி, டொரண்டோ பல்கலையில் ஆரம்பிக்கவிருக்கும் தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார். அவர் பேச்சு நிகழும்போதே தமிழ் இருக்கைக்கான நிதி திரட்டலும் நடந்தது.

2000 வருடப் பழமையான தமிழ் இலக்கியம், பாரம்பரியக் கலைகள், பண்பாடு ஆகியவற்றை உலகமயமாக்கும் முயற்சியாக இந்த விழா அமைந்தது இதன் வெற்றி.

அ. முத்துலிங்கம்,
டொரண்டோ

© TamilOnline.com