ஆகஸ்ட்டு 2005: வாசகர் கடிதம்
பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்துள்ளேன். மாநாட்டில் ஜூலை 2005 இதழ், மகள் வீட்டில் நவம்பர் 2003, பிப்ரவரி 2004 இதழ்களைப் படித்தேன், சுவைத்தேன். தமிழ் முறையாகக் கற்காமல், வேலைப்பளு மிகுந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து நடத்தும் தென்றலின் தரம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. மொழி அறிஞர் என்ற முறையில் எழுத்தாளர், முன்னோடி, நூல் அறிமுகம், புழக்கடைப்பக்கம், ஆகிய பகுதிகள் என்னைக் கவர்ந்தன.

எழுத்தாளர் பகுதியில் அறிமுக வார்த்தைகள் கனம் நிறைந்தது. இலக்கியத் திறனாய்வு நோக்கு பளிச்சிடுகிறது. முன்னோடி, தமிழ் வரலாற்றுப் பெட்டகம். அந்த இரண்டு பகுதியின் ஆசிரியர் மதுசூதனன் அவர்களுக்குப் பாராட்டுகள். உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள்.

செ. வை. சண்முகம்
துலுத், ஜார்ஜியா,
மேனாள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசியர்.

~~~~~


கடந்த ஜூன் 2005 தென்றல் இதழில் எழுத்தாளர் ஜெயகாந்தனைப் 'புழைக்கடைப் பக்கத்தில்' வைத்து அவர் தம் 'புண்மொழிகளை' மணிவண்ணன் - நல்ல வண்ணம் அலசியுள்ளார்.

ஜெயகாந்தன் கோடை காலத்து மழை கொட்டி வாய்க்காலில் வரும் வெள்ளம் போன்றவர். புது வெள்ளத்தில் எல்லாம் வரும்.

வருணவேறுபாடுகளை உலகோர் எல்லாரும் 'கொடுமை' எனக் கடிகின்றனர். அதில் உள்ள சுவாரஸ்யம் எல்லாம் சுரண்டல், தீண்டாமை, பெரும்பான்மை மக்களை அடித்தளத்தில் மிதித்தல் ஆகும். சமன்மை (Equality) கட்டிலா உரிமை (Liberty) ஒத்த தோழமை (Fraternity) என்னும் மக்களாட்சி விழுமியங்கள் இல்லாப் பாழ்நிலையே வருணாசிரம தருமம். இதில் 'சுவாரஸ்யம்' என்பது இன்று தாழ்நிலை மக்கள் நடத்தும் போருக்கு எதிரான போராகும். வரலாற்றில் பின் செல்லும் நடை.

1910, 1920 ஆம் ஆண்டுகளில் கல்லூரிக் கல்வித் திட்டத்தில் 'நாட்டுமொழி' என ஒதுக்கிவைக்கப்பட்டது. தமிழுக்கு உரிய இடம் வேண்டித் தமிழறிஞர் போராட வேண்டியிருந்தது. கலைச்சொற்கள் 'உயர்வான செம்மொழி'யான சமஸ்கிருதத்தில்தான் உருவாக்கப்படல் வேண்டும் எனச் சமஸ்கிருத ஆதரவாளர் வாதிட்டனர். தமிழ் இழித்துரைக்கப்பட்டது எனத் தமிழறிஞர் போராடினர். கலைச் சொல்லாக்கத்தில் கல்வியியல் மொழியியல் காரணங்கள் மட்டும் அல்லாமல் சமூகவியற் காரணங்களும் இருக்கின்றன.

பேரா. த. முருகரத்தனம்,
(மேனாள் திருக்குறள் பீடப் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)
டெட்ராய்ட், மிச்சிகன்

~~~~~


தென்றல் தவழ்ந்து விளையாடும் குற்றாலத்திலிருந்து வந்தேன். இங்கும் ஒரு தென்றல். பார்க்க... படிக்க... சுவைக்க என்று. இந்த தென்றல் சுவையான தென்றல். அமெரிக்காவில் இப்படியும் ஒரு தென்றல் என என்னை மலைக்க - மயக்க வைத்தது உங்கள் தென்றல். அடுத்த மாதம் மீண்டும் தாயகம். இந்த ஆறு மாதங்கள் தென்றலாய் பறந்துவிட்டது. புத்தகத்தைக் கையில் எடுத்தால் ஊரில் இருப்பது போன்ற உணர்வு. உங்கள் (நம்) தென்றலுக்கு என் அன்பான பாராட்டுக்கள். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வளரட்டும் - தொடரட்டும் உங்கள் பணி.

ஜேனட் அப்பாதுரை
பிரின் மௌர், பென்சில்வேனியா

© TamilOnline.com