தெரியுமா?: வானவில் பண்பாட்டு மையம்: பாரதி விழா
மஹாகவி பாரதியின் பிறந்த நாளை (டிசம்பர் 11), 1994ம் ஆண்டு முதல் பாரதித் திருவிழாவாக, இயல், இசை, நடன, நாட்டியக் கலைப் பெருவிழாவாக வானவில் பண்பாட்டு மையம் கொண்டாடி வருகிறது. இவ்வாண்டு இந்தத் திருவிழாவின் வெள்ளிவிழா ஆண்டாகும். இது மிகச்சிறப்பாக, "பாரதி திருவிழா - தேசபக்திப் பெருவிழா" என்று வருகிற டிசம்பர் 8 முதல் 11ம் தேதிவரை நான்கு நாட்கள் கொண்டாடப்படும்.

மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களை விழாவைத் துவக்கிவைக்க அழைத்துள்ளார்கள். விழாவின் சிறப்பு அம்சமாக, டிசம்பர் 8, 9 சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும், தமிழ்நாடு அரசின் கலை, பண்பாட்டுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து, "வீரசுதந்திரம்" என்ற பெயரில், இந்திய விடுதலைப் போராட்டத்தின், குறிப்பாகத் தமிழ் நாட்டின் பங்கை, விளக்கும் மாபெரும். கலைக்காட்சி ஒன்று, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் மைதானத்தில் நிர்மாணிக்கப்பட உள்ளது.

புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணி, திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், கே.எஸ். ரவிக்குமார், டாக்டர் பத்மா சுப்பிரமணியம், எழுத்தாளர் சிவசங்கரி, தெ. ஞானசுந்தரம் ஆகியோருடன் சான்றோர் பலரும் பங்கேற்கும் விழாக்குழுவின்

வழிகாட்டுதலில் இந்தக் கலைக்காட்சி நிர்மாணிக்கப்படும். நம் சுதந்திரப் போராட்டத்தின் வீர வரலாற்றை, அதில் பங்கேற்ற தியாகிகளின் வாழ்க்கையை, அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொண்டு, அதனால், தேசபக்தி அவர்தம் மனங்களில் சுடர்விட இந்தக் கலைக்காட்சி உதவும்.

டிசம்பர் 8, 9 நாட்களில், முன்னணி இசைக்கலைஞர்களுடன் 300 குழந்தைகள் பாடும் பிரம்மாண்டமான "பாரதி ஐந்து" இசைநிகழ்ச்சியும், நூறு கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகளும், பத்தாயிரம் சிறுவர், சிறுமிகள் பங்கேற்கும் ஓவியம், ஒப்பனை, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளும் நடைபெறும். பாரதியாரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் எஸ்.பி.எஸ். கிரியேஷன்ஸின் "பாரதி யார்?" என்ற நாடகமும், நல்லதொரு பட்டிமன்றமும் நடைபெறும். உணவு வளாகம் (Food Court), புத்தக அரங்கம், மருத்துவ நிலையம் உட்படப் பல ஏற்பாடுகள் கலைக்காட்சித் திடலில் அமையும். கலைக்காட்சிக்குத் தொடர்புள்ள செய்திகளைக் காணவருவோர் "ஒரே வரியில்" சொல்லும் மேடை அமைக்கப்பட்டு, அவை யூ ட்யூப், முகநூல் போன்ற சமுகவலைத் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக் கட்டணம் கிடையாது. விழாவும், கலைக்காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் நடத்தப்பட உள்ளதால் பாரதி அன்பர்கள் இதற்குப் பொருளுதவி செய்ய வரவேற்கப்படுகிறார்கள்.

தொடர்பு கொள்ள மின்னஞ்சல்: Vanavil Cultural

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com