குருவின் கருணை அழியாப் புகழைத் தரும்
ஆதிசங்கரருக்கு நான்கு முக்கிய சிஷ்யர்கள் இருந்தனர். அவர்கள் தோடகர், ஹஸ்தாமலகர், சுரேஸ்வரர், பத்மபாதர் ஆகியோர். இவர்களில் பத்மபாதருக்குக் குருசேவையே மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவரால் கற்பதில் கவனம் செலுத்த முடியவில்லை. அவர் படிப்பில் பின்தங்கி இருந்ததை மற்றச் சீடர்கள் கேலி செய்வது வழக்கம். பத்மபாதரின் குருபக்தி அவரது பிற குறைகளுக்கெல்லாம் ஈடுகட்டுவதாக இருந்தது.

ஒருநாள் அவர் குருநாதரின் துணிகளைத் துவைத்து ஆற்றின் நடுவில் இருந்த பாறை ஒன்றின்மீது காயப் போட்டிருந்தார். துணிகளை எடுத்து மடித்துக் கொண்டிருந்தபோது திடீரென வெள்ளம் வந்துவிட்டது. அவர் நின்றுகொண்டிருந்த பாறையில் கால்வைக்கவும் இடமில்லாத அளவுக்குத் தண்ணீர் மேலே ஏறிவிட்டது. நேரம் வேறு ஆகிவிட்டது. விரைவிலேயே குருநாதருக்கு ஆடை தேவைப்படும்.

பாய்ந்து வரும் வெள்ளத்தின் மீதே நடந்து செல்ல பத்மபாதர் தீர்மானித்தார். குருநாதரின் அருளாசி தன்னைக் காக்கும் என்பது அவருக்குத் தெரியும். அது காப்பாற்றியது. அவர் ஒவ்வோர் அடி எடுத்துவைக்கவும், வலுவான தாமரை ஒன்று கீழே தோன்றி அவரது பாதத்தைத் தாங்கிக்கொண்டது.

அதனால்தான் அவருக்குத் தாமரைக் காலடி கொண்டவர் எனப் பொருள்படும் பத்மபாதர் என்ற பெயர் ஏற்பட்டது. குருவின் கருணையால் அவர் அனைத்து அறிவையும் பெற்று, புராதன ஞானத்தின் மேதையாக ஒளிவீசினார்.

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

நன்றி: சனாதன சாரதி,
ஃபிப்ரவரி 2017

© TamilOnline.com