முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக்கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தாள். என்ரிக்கே மரபணுவின் இரட்டைச்சுருள் வடிவம், மரபணுத் தொடர்கள் (chromosomes), இனப்பெருக்கத்தில் அவை இரண்டாகப் பிரிந்து தந்தை, தாயின் பாதிகள் சேர்ந்து குழந்தையின் குரோமசோமாக உருவாகின்றன என்பவற்றை விளக்கினார். எவ்வாறு இயற்கையிலும் மனிதர்களின் தேர்ச்சி இனப்பெருக்கத்தாலும் (selective breeding) மரபணு மாற்றங்கள் பரவுகின்றன என்பதை விளக்கினார். மரபணு எழுத்துத் தொடர்களில் ஓரெழுத்தை மாற்றிக்கூடப் பரம்பரை பரம்பரையாகப் பரவும் நோய்களையும் நிவர்த்திக்க முடியும், உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும் என்றார். மேற்கொண்டு பார்ப்போம்!
*****
பரம்பரை நோய் நிவாரணத்தையும், உணவு உற்பத்திப் பெருக்கத்தையும் பற்றி என்ரிக்கே அளித்த உதாரணங்களைக் கேட்டுப் பேரார்வமுற்ற ஷாலினி, க்ரிஸ்பர் வழிமுறை இன்னும் பல உன்னத முன்னேற்றங்களை அளிக்கமுடியும் என்று கேள்விப்பட்டதாகவும் அவற்றில் ஏதாவதொன்றை உதாரணத்துக்கு விவரிக்க முடியுமா என்று கேட்டாள்.
உற்சாகமடைந்த என்ரிக்கே விவரித்தார், "ஆஹா நிச்சயமா. ஆனா அதுக்கு முன்னாடி நோய் நிவாரணத்தைப்பத்தி இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும். நாம பரம்பரை நோய்ப் பரவலைத் தவிர்ப்பதைப் பத்தித்தான் முன்னாடி பேசினோம். ஆனா, தற்காலத்துல புற்றுநோய், ஆல்ஷைமர் போன்ற உயிரணு சார்பான நோய்களைப் போக்கவும் தவிர்க்கவும் குறிப்பிட்ட நபரின் மரபணுக்களுக்குத் தகுந்த முறையில் மருந்துக்களைத் தயாரிக்கவும்கூட க்ரிஸ்பர் முறையால முடியும்!"
ஷாலினி, "ஆஹா, தனிநபர் மருத்துவம்! ரொம்ப நாளா வேற முறையில எங்க குழுவிலேயேகூட முயற்சி செய்திருக்கோம். ரொம்ப முன்னேற்றம் கிடைக்கலை. இப்போ க்ரிஸ்பர்ல செய்ய முடியும்னா பிரமாதந்தான்! வேற உதாரணம் சொல்றேன்னீங்களே..." என்றாள்.
என்ரிக்கே தொடர்ந்தார். "சொல்றேன். கிரண்மாதிரி இளைஞர்களுக்கு ரொம்பப் பிடிச்சமாதிரி ஒண்ணு!"
குனிந்துகொண்டு தன் கைபேசியில் எதோ தடவிப் பார்த்துக் கொண்டிருந்த கிரண் சட்டெனத் தலை நிமிர்ந்தான்! "என்ன, என்ன? எனக்குப் பிடிச்சதா? ஆல்கஹால் சார்பான விஷயம்னா சொல்லுங்க! இப்ப அதுபத்திதான் ஆர்வமாப் படிச்சிக்கிட்டிருந்தேன்!"
என்ரிக்கே தலையைப் பின்னால் சாய்த்து அட்டகாசமாகச் சிரித்தார். "கிரண் உனக்கெதாவது ஜோஸ்யம் தெரியுமா இல்லை மனசைப் படிக்கத் தெரியுமா? அமேஸிங்! ஆல்கஹாலேதான்னு சொல்லமுடியாது, ஏமாற்றத்துக்கு மன்னிக்கணும். ஆனா எப்படி யீஸ்ட் பயன்படுத்தி நொதிக்க வச்சு ஆல்கஹால் தயாரிக்கறாங்களோ, அதேமாதிரி, உயிர் எரிபொருட்கள் (biofuels), தானே விரிசல்களை சரிசெய்து கொள்ளும் கான்க்ரீட், உலோகங்களைவிட வலுவான, தாவரங்களிலிருந்து தயாரிக்கும் ப்ளாஸ்டிக் மூலப்பொருட்கள் போன்ற பல மிக உன்னதமானவற்றை, அவற்றை உருவாக்கும் மரபணுத்தொடர்கள் கொண்ட டிஸைனர் உயிரினங்களை, க்ரிஸ்பர் முறையைப் பயன்படுத்தி உருவாக்க முடியும். கிரண், புதுச்சுவையளிக்கும் ஆல்கஹால்கள் கூட உருவாக்கலாம்னுதான் நினைக்கறேன்"
கிரண் முகத்தைக் சுளித்தான். "சே போங்க என்ரிக்கே! ஆசைகாட்டி மோசம் பண்ணிட்டீங்க. நல்லா ஏத்தறத்துக்கு எதாவது புதுசா சொல்லுவீங்கன்னு பாத்தா உயிர் எரிபொருள், கான்க்ரீட்னுகிட்டு!"
சூர்யா புன்னகையுடன் வினவினார். "என்ரிக்கே இந்த நொதித்தல் முறைக்கான டிஸைனர் உயிரினங்கள் பத்திப் புரியுது. ஆனா அவை சில உயிரணுக்களே கொண்ட உயிரினங்கள். பெரிய மிருகங்கள், இல்லை மனிதர்களிடம் செய்யமுடிந்த அளவுக்குப் பெருமாற்றங்கள் செய்ய வாய்ப்பிருக்கா என்ன?"
ஷாலினி சிலாகித்தாள். "என்ன சூர்யா அப்படி இப்படி வளைச்சு போன கேஸ்ல மனித அங்கங்களை முப்பரிமாண முறையில பதிச்சா மாதிரி இந்த கேஸ்லயும் இருக்கான்னு பாக்கறீங்களா, நல்லா இருக்கு இது! என்ன என்ரிக்கே அப்படிக்கூட இருக்கா என்ன?"
என்ரிக்கே முறுவலித்தார். "சரியான கேள்வி இது சூர்யா! அப்படியும் இருக்கு. சொல்றேன். நீங்க மனித அங்கங்களை முப்பரிமாண முறையில பதிக்கற முயற்சிபத்திக் குறிப்பிட்டீங்க. அது எனக்கும் தெரியும். அந்த முயற்சியில பலதிறன் மூல உயிரணுக்களைப் (pluripotent stem cells) பத்தித் தெரிஞ்சிருக்குமே?" ஷாலினி ஆமாமென்று தலையாட்டினாள். "அந்தமாதிரி மூல உயிரணுக்களை வச்சு பல முப்பரிமாணப் பதிப்பான்களைப் பயன்படுத்தி மனித அங்கங்களை உருவாக்கிக்கிட்டிருந்தாங்க. அதுல வந்த பிரச்சனை ஒண்ணைத்தான் சூர்யா நிவர்த்திச்சார்" என்று கூறியவள், தன் பிரிய சூர்யாவைப் பெருமிதத்துடன் பார்த்தாள்!
கிரண் இடைபுகுந்து, "ஹேய் சிஸ், சூர்யா மட்டுமா? நானுந்தான் உதவி செஞ்சேன், மறந்துட்டயா?" என்றான்.
என்ரிக்கே பாராட்டினார். "நைஸ்! அந்த முப்பரிமாண முறையின் சிக்கலை நிவர்த்திச்சது மனித அங்கங்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப் பலன் தரணும்னு நான் பிரார்த்திக்கறேன். ஆனா பல்திறன் மூல உயிரணுக்களை வேறுவிதமாப் பயன்படுத்தி, அத்தோட, க்ரிஸ்பர் முறையையும் பயன்படுத்தி அம்மாதிரி மனித அங்கங்களை மிருகங்கள், உதாரணத்துக்குப் பன்றிகள், உடல்களில் உற்பத்தி செய்யவும் ஒரு பெருமுயற்சி நடந்திட்டிருக்கு. அதுவும் ஓரளவு பலன் தருது."
கிரண் மீண்டும் முகம் சுளித்தான். "அய்யய்யே, யக்! இது என்ன என்ரிக்கே, பன்றிகள் உடம்புல மனித அங்கமா? கேட்கவே அருவருப்பா இருக்கே?!"
என்ரிக்கே தலையசைத்து மறுத்தார். "அப்படிச் சொல்லக்கூடாது கிரண். மனித இனம் பல வகையான மிருகங்களைப் பலவிதத்துல பயன்படுத்துது. இப்போ மேலைநாடுகளில் நாய்கள் அன்புப் பிராணிகளாத்தான் வளர்க்கறாங்க. ஆனா சைனாவுல அதே நாய்களை உணவா உட்கொள்றாங்க!"
கிரண் இடைமறித்தான். "அதுவும் எனக்கு யக், அய்யய்யேவாத்தானே இருக்கு?!"
சூர்யா அவனுக்கு மறுப்புக் கூறினார். "கிரண், பலதரப்பட்ட கலாச்சாரங்கள் ஒரே விஷயத்தைப் பலவிதமாப் பாக்கறாங்க. இந்திய கிராமப்புறங்களில் கூட மழை பேஞ்சு நின்னா வர ஈசல் பூச்சிகளைப் பிடிச்சி வறுத்து சாப்பிடறாங்க. அதுக்கு ஒரு காலத்துல மேலைநாடுகளில் அருவருப்புன்னாங்க. இப்போ என்ன ஆச்சு? க்ரிக்கெட்டுங்கற வெட்டுக்கிளி பூச்சி புரதச்சத்துக்கு நல்லதுன்னு அதை மாவாவே விக்க ஆரம்பிச்சிட்டாங்க! அதுனால எதையும் ஒரேயடியா அருவருப்புன்னு ஒதுக்கிடக்கூடாது!"
ஷாலினி ஆமோதித்தாள். "அது என்ன, இந்தியாவுலகூட மாட்டு சாணத்தைத் தரையில மெழுகியும், வரட்டியா எரிபொருளாவும் ஆக்கறாங்களே. அந்த அருவருப்பை ஒதுக்கி அதோட பலன்களை இப்போ மேல்நாட்டு விஞ்ஞானம் விளக்க ஆரம்பிச்சிருக்கே!"
கிரண் வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டான். "எல்லாரும் சேர்ந்து என்னை அடிக்கறீங்க. ஓகே, ஓகே என் அருவருப்பைத் தணிச்சுக்கறேன். என்ரிக்கே சொல்லுங்க எப்படி க்ரிஸ்பர் முறையில பன்றிகள் உடம்புல மனித அங்கங்களை உருவாக்கறாங்க?"
என்ரிக்கே முறுவலுடன் தொடர்ந்தார். "அப்படி வா வழிக்கு! நாம் முன்னமே க்ரிஸ்பர் முறையில சில மரபணு எழுத்துத் தொடர்களை வெட்டி எடுக்கமுடியும்னு பாத்தோம், இல்லயா? அதைத்தான் அங்க உற்பத்திக்கும் பயன்படுத்தறாங்க. முதல்ல இதன்மூலம் சுண்டெலிகள் உடம்புல எலிகளின் அங்கங்களை வளர வச்சாங்க. எப்படின்னா முதல்ல அந்த சுண்டெலிகள் கருவா இருக்கச்சே, அவற்றின் மரபணுத் தொடர்களில் ஒரு பகுதியைக் க்ரிஸ்பர் முறையால வெட்டி எடுத்தாங்க. அதுனால உண்டான இடைவெளிக்குள்ள எலிகளின் பல்திறன் மூல உயிரணுக்களைப் புகுத்தி நிரப்பினாங்க. அதுனால சுண்டெலி கரு வளர்ந்து குழந்தையாப் பிறக்கறச்சே, மரபணு மாற்றத்துக்கேற்ப எலியோட சில அங்கங்களோட பிறக்குது. அப்படியே வளர்ந்து சாதாரணமான சுண்டெலி மாதிரியும் வாழுது!"
கிரண் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான்! "வாவ் என்ரிக்கே ரெண்டு வழிமுறைகளைப் பின்னி எடுத்திருக்காங்க, பெரிய கில்லாடி விஞ்ஞானியா இருப்பாங்க போலிருக்கு!"
ஷாலினியும் ஆமோதித்தாள். "இந்தத் துறையில ஓரளவுக்கு ஆராய்ச்சி செஞ்சிருக்கற எனக்கே வாவ்னு ஆச்சர்யமாத்தான் இருக்கு என்ரிக்கே!"
சூர்யா வினாவினார். "என்ரிக்கே நீங்க சுண்டெலியோட எலி அங்கம் பத்தி சொன்னீங்க. ஆனா பன்றிகள் உடம்புல மனித அங்கம்னு வேற சொன்னீங்களே அது என்ன?"
என்ரிக்கே தொடர்ந்தார்....
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |