உட்கட்சிப் பூசலில் காங்கிரஸ்!
கடந்த மாதம் சென்னையில் புதியதாக கட்டப்பட்ட அரசு பொது மருத்துவமனை திறப்புவிழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினாயகமூர்த்தி, விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியது தமிழக காங்கிரஸ் வட்டத்தில் பெருத்த அதிர்ச்சியை அளித்தது. காங்கிரசில் பல்வேறு முனைகளிலிருந்து இவரின் பேச்சுக்கு எதிர்ப்பும் கிளம்பியது.

முதல்வரை புகழ்ந்து பேசியதில் எந்தவிதமான தவறும் இல்லை என்றும், முறையான அழைப்பின் பேரிலேயே தான் அந்த விழாவில் கலந்து கொண்டதாகவும் வினாயகமூர்த்தி பதில் விளக்கம் அளித்தார். ஆனால் வினாயகமூர்த்தியை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்றும், அதுவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்கக்கூடாது என்றும் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவருமான மனோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த வினாயக மூர்த்தி மீது சிலர் தாக்குதல் நடத்தினர். தன் மீதான தாக்குதலை எதிர்த்து வினாயகமூர்த்தி சத்தியமூர்த்தி பவனில் அன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். பிறகு சிலரின் சமரச முயற்சியால் உண்ணாவிரதத்தை வினாயகமூர்த்தி கைவிட்டார்.

கடந்த ஜுலை 15ம்தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் தலைமையில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவை வினாயக மூர்த்தி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. விழா நடைபெற்ற அன்று இரவு வினாயக மூர்த்தியின் வீடு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்பிரச்சனை காங்கிரசில் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.

தன் வீட்டின் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோவும் அவரது ஆதரவாளர்கள் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையில் வினாயகமூர்த்தி புகார் அளித்ததையடுத்து மனோ கைது செய்யப்பட்டார்.

வருகிற சட்டப்பேரவை தேர்தலில் வடசென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு தனக்கு இடம் கிடைக்கும். அப்போது அ.தி.மு.க.வின் ஆதரவு தனக்கு தேவைப்படலாம் என்று எண்ணியே வினாயகமூர்த்தி அ.தி.மு.க தலைமையை விழாவில் புகழ்ந்திருக்கலாம் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்தாலும், ஆளும் கட்சியின் நல்ல செயல்களை காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டிய சம்பவங்களை எடுத்துக் கூறி அதுபோல் தான் தன்னுடைய பாராட்டும் என்று வினாயகமூர்த்தி தன்னிலை விளக்கத்தை பத்திரிகையாளர்கள் மத்தியில் அளித்தார்.

காங்கிரசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த உட்கட்சிபூசலின் நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாயகமூர்த்தி தலைமையில் ரகசிய கூட்டம் ஒன்று நடைப்பெற்றது மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. இக்கூட்டத்தில் இளங்கோவன் ஆதரவாளர்கள்,ஜெயந்தி நடராஜன் ஆதரவாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுவின் ஆதரவாளர்கள் என்று பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

காங்கிரசிற்குள் நிகழ்ந்து வரும் இத்தகைய நிகழ்ச்சிகளை தமிழகத்தில் உள்ள இரண்டு திராவிட கட்சிகளும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகின்றன.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com