ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 12)
மறுநாள் எர்த்தாம்டன் நகர விழா ஒன்று அவர்களது நகர அரங்கத்தில் நடைபெற்றது. முன்னமே, அருண் அதைப்பற்றி தெரிந்து வைத்திருந்ததால், அதற்குத் தனது அம்மா அப்பாவுடன் போய்ப் பார்க்க நினைத்திருந்தான். அதில் நகரத்தின் முக்கியமானவர்கள், கடந்த ஒரு வருடமாக என்னென்ன மாற்றங்கள், முன்னேற்றங்கள், மற்றும் குறைபாடுகளைக் கவனிக்கவேண்டும் என்று பேசப்போகிறார்களாம். அதுவுமல்லாமல், ஜட்ஜ் குரோவ் அவர்கள் தலைமை தாங்குவதாகக் கேள்விப்பட்டதால், கடந்த சில நாட்கள் நடந்த சம்பவங்களால் அவனுக்கு இன்னும் ஆவல் அதிகரித்திருந்தது. ஒருநாள் முன்னர், ஹிலரியைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வரும்போது அருண் சொன்ன ஒரு ஐடியா ஜட்ஜுக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதைச்செயல்படுத்த அருணுக்கு ஆர்வம் கட்டுப்படுத்த முடியவில்லை.

நகர விழா அமர்க்களமாகத் தொடங்கியது. நகரமே அங்கு திரண்டிருந்தது. சீக்கிரமே போய்விட்டதால் அவனுக்கும் அப்பா அம்மாவுக்கும் உட்கார இடம் கிடைத்தது.

பலர் வந்து பேசினார்கள். நகரில் கடந்த ஒரு வருட காலமாக நடந்த முன்னேற்றங்களைப் பற்றிச் சொல்லும்பொழுது கைதட்டல் காதைப் பிளந்தது. ஜட்ஜ் குரோவ் மிகுந்த சந்தோஷத்துடன் காணப்பட்டார். நகர மேயரும், துணை மேயரும், ஏதோ கிசுகிசுவென்று அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

அருண் எதேச்சையாகப் பின்பக்கம் திரும்பிப் பார்த்தான். அவன் எதிர்பார்த்தது போல், ஹோர்ஷியானாவின் அதிபர் டேவிட் ராப்ளே அங்கே உட்கார்ந்திருந்தார். அவர் அங்கு அருணுக்காகவே வந்திருந்தது போலத் தோன்றியது. அருணைப் பார்த்து விஷமப் புன்னகை ஒன்று பூத்தார். கொஞ்சங்கூடப் பயப்படாமல் அருண் அவருடன் கை குலுக்கினான். அது மட்டுமல்லாமல், அம்மாவையும் திரும்பி பார்க்கச் சொல்லி, டேவிட் ராப்ளே அவர்களிடம் பேசச் சொன்னான். டேவிட், அருண் அழுதுகொண்டு வெளியே ஓடுவான் என்று எதிர்பார்த்தார். அவருக்குப் பெரிய ஏமாற்றம் ஆனது. கீதாவுக்கும் ஆச்சரியம்தான். கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. அருணைச் செல்லமாகத் தட்டினார்.

விழா முடியும் நேரத்தில், ஜட்ஜ் குரோவ் திடீரென்று, "நகரத்தவர்களே! நம்ப ஊர்க் குழந்தைகள் தாங்களே செய்த பலவகைப் பொருட்களை வெளியே விக்கறாங்க. கைவினைப் பொருள்கள், முகத்தில் வண்ணம் தீட்டுதல், லெமனேடு என்று எல்லாம் நம்ம குழந்தைங்க பண்ணியிருக்காங்க. அதுல இருந்து வரும் வருமானத்தை நம்ம ஊரு குழந்தைங்க நல்லகாரியங்களுக்கு நன்கொடையா கொடுக்கப் போறாங்க. நீங்க எல்லோரும் தயவுசெய்து அவங்களை ஆதரிக்கவேண்டும். அதுவும், நீங்க லெமனேடு ஸ்டாண்டுக்குப் போய் அங்கே நம்ம ஊர் எலுமிச்சம் பழத்திலிருந்து பண்ணிய ரசத்தை குடித்துப் பாருங்க. ஜாலியா இருங்க” என்று அறிவித்தார்.

அருண் வைத்திருந்த லெமனேடு ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது. "வாங்க, வாங்க! எங்க பழச்சாறை ருசித்துப் பாருங்கள். ஒரு கப் ஒரு டாலர்தான்! அதோட கூடவே, உங்களுக்கு மிகச்சக்தி வாய்ந்த, ஜலதோஷ மூலிகையானSneeze Snatcher இலைகளும் இலவசம். வாங்க, வாங்க! தீர்ந்து போறதுக்கு முன்னாடி வாங்க!” என்று சத்தம் போட்டபடி அருண் விற்றுக்கொண்டிருந்தான்.

திகிலோடு அருணைப் பார்த்தார் அங்கு வந்த டேவிட். அவரைப் பார்த்வுடன், இன்னும் சத்தமாக, "ஐயா, வாங்க! இந்த ஜலதோஷ மூலிகை உங்களுக்கும் இலவசம்தான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

(முற்றும்)

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

எர்த்தாம்டனின் சுடர் இத்தோடு மூன்று பகுதிகள் நிறைவடைந்து விட்டன. அருணின் சாகஸச் செயல்களை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்கள் எது பிடித்திருந்தது என்பதை விவரமாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். சிறந்த கருத்துக்கள் பிரசுரிக்கப்படும். மறக்காமல் உங்கள் பெயர், ஊர், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை எழுதுங்கள்.

ஆசிரியர்

© TamilOnline.com