அன்புள்ள சிநேகிதியே,
ஒரு விசித்திரமான குணாதிசயம் கொண்ட ஒரு சிநேகிதியை அடையாளம் கண்டு கொண்டதிலிருந்து என் மனதில் ஒரு குழப்பம். அந்த நட்பைத் தொடரவேண்டுமா என்று ஒரு சந்தேகம்.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் இந்த சிநேகிதியை ஒரு அலுவலக கஃபேடீரியாவில் சந்தித்தேன். நான் வேலை செய்யும் இடத்திலோ அல்லது இருக்குமிடத்திலோ அதிகம் இந்தியர்கள் இல்லை. இவள் சிரித்த முகத்துடன் எனக்கு என் ட்ரேயை எடுத்துக்கொடுத்து உதவி செய்தாள். அவள் இந்தியர். தமிழ் பேசுகிறவள் என்று தெரிந்ததும் excite ஆகிவிட்டேன். என்னைவிட வயதில் சிறியவள். U.S.க்கு மூன்று வருடங்கள் முன்பு வந்திருக்கிறாள். என்னுடைய நிறுவனத்துக்குப் புதிது. வேறொரு பிரிவில் வேலை செய்கிறாள். கல்யாணமாகி ஒரு பெண். மாமியார் ஆறுமாதம் வருடத்திற்கு ஒருமுறை வந்து தங்கிக் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார். கணவர் அப்போது இந்தியாவில் இருந்திருக்கிறார். அவளை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் கணவருக்குப் போரடிக்கும் வரை அவள் புகழ்பாடிக் கொண்டிருப்பேன். அவ்வப்போது வீட்டில் செய்யும் சமையலை அவளுக்குக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருவேன். அவளும் ஏதாவது கொண்டு வருவாள். நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியாது. எங்களுக்கு வெவ்வேறு வேலைப்பளு. சில சமயம் வாரக்கணக்கில் காணாமல் போய்விடுவாள். நான் மெசேஜ் அனுப்பினால் பதில் வராது. திடீரென்று ஒருநாள் கூப்பிடுவாள்.
காரணம் கேட்டால், "குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லை. மாமியார் திடீரென்று கிளம்பிப் போய்விட்டார்" என்று ஒருமுறை சொன்னாள். Baby Sitter பார்த்துக் கொடுக்கட்டுமா என்று கேட்டதற்கு, "இல்லை நான் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன்" என்று சொன்னாள். ஆனால், அந்த வீக் எண்டில் ஒரு ஸ்டோரில் அவளைக் குழந்தையுடனும், வயதான இந்தியப் பெண்மணியுடனும் பார்த்தேன். நான் உள்ளே நுழையும்போது வெளியே வந்துகொண்டு இருந்தாள். நான் ஆர்வத்துடன், "உன் மாமியாரா? உன் குழந்தை ஸ்மார்ட்டாக இருக்கிறாள்" என்று சொல்லி முடிப்பதற்குள், "ஆமாம். ஆமாம். அவர் திரும்பி வந்துவிட்டார். டாக்டர் அப்பாயின்ட்மெண்ட். அப்புறம் பார்க்கிறேன்" என்று அவசரம் அவசரமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனாள். எனக்கு அந்த மாமியாரிடம், "இவ்வளவு அருமையான மருமகளுக்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று சொல்ல ஆசை. நேரம் இல்லை, ஆனால் மனதில் ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது. 'இந்தியாவிற்குத் திரும்பிச் சென்ற மாமியார் இவ்வளவு விரைவில் அதாவது இரண்டு நாட்களில் திரும்பி வர அவ்வளவு பண வசதி இருக்கிறதா, ஏன் உடனே வரவேண்டும்?' என்றெல்லாம் யோசித்துப் பார்த்தேன். கணவர் என்ன வேலை செய்கிறார், எப்போது இந்தப் பெண்ணின் சுமையை இறக்கப் போகிறார் என்றெல்லாம் அவளிடம் கேட்பேன். நேரடியாக எந்தக் கேள்விக்கும் பதில் இருக்காது. முரண்பாடுகள் நிறைய இருக்கும். எப்போதும் ஏதாவது கேள்வி கேட்டால், "வீட்டில் நிறைய வேலை.... மாமியாரை வேலை செய்ய விடுவதில்லை... குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேறு ஆள் பார்த்துவிட்டேன்... மாமியார் விழுந்துவிட்டார்... எமர்ஜென்சிக்குப் போனேன்..." என்பதுபோல எப்போதும் மாமியாரைக் கவனித்துக் கொள்ளும் அக்கறையுடன் தான் பேசுவாள்.
"நீ குழந்தையைச் சரியாகப் பார்த்துக்கொள்ள, மாமியாரை கவனித்துக்கொள்ள வேண்டும்தான். ஆனால், நீ ஓவராகச் செய்கிறாய்" என்று நானே கடிந்து கொள்வேன். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் மிகவும் நன்றாகப் பழகுவாள். அவள் வீட்டுக்குப் போய் அவள் குழந்தையை, மாமியாரைப் பார்க்க பலமுறை என் விருப்பத்தைத் தெரிவித்தேன். "நானே உங்களைக் கூட்டிக்கொண்டு போகிறேன்" என்று ஆதுரமாகப் பதிலளிப்பாள். அடிக்கடி பிசினஸ் ட்ரிப் என்று போய்விடுவாள்.
இரண்டு வாரத்துக்கு முன்பு அவள் இருக்கும் பகுதிக்கு நான் போகவேண்டி இருந்தது. அவள் வெகு தூரத்தில் இருக்கிறாள். நான் ஃபோன் செய்தபோது எடுக்கவில்லை. நானும் ஒரு 'சர்ப்ரைஸ் விசிட்' செய்யலாம் என்று அவள் இருக்கும் அபார்ட்மென்ட்டைத் தேடிப்போனேன். பெல்லை அடித்தேன். கதவைத் தட்டினேன். யாரும் வரவில்லை. பக்கத்து வீட்டிற்குள் யாரோ நுழைந்து கொண்டிருந்தார்கள். கொண்டுபோன சாக்லெட், பழங்களை அவர்களிடம் கொடுக்கலாம் என்று விசாரித்தேன். அவர்கள் சொன்ன செய்தி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. அவள் குழந்தை இந்தியாவில் வளர்ந்து கொண்டிருக்கிறதாம். பக்கத்து வீட்டுப் பெண் சிறிது நாள் பார்த்துக் கொண்டாளாம். மாமியார் வந்து பத்து நாட்கள் இருந்து விட்டுக் கிளம்பிப் போய்விட்டாராம். மருமகள் - மாமியார் பெரிய பிரச்சனை. அவள் கணவர் இங்கே வந்து இவர்களைப் பார்க்கவில்லையாம். தனியாக இருக்கிறாள். சனி, ஞாயிறு வீட்டில் இருப்பதில்லை. இதெல்லாம் பக்கத்து வீட்டவர்கள் சொன்ன செய்தி. அவர்கள் பட்டும் படாமலும்தான் பேசினார்கள். அவளைப்பற்றி அவர்களுக்கும் அதிகம் தெரியாது என்பது தெளிவாகப் புரிந்தது.
அவ்வப்போது பார்த்தால் மரியாதையாகப் பேசுவாள். முதலில் குழந்தையை ஒரு மாதம் பார்த்துக் கொண்டபோது இருந்த நெருக்கம் இப்போது கிடையாது என்பதும் புரிந்தது. நான் எடுத்துக்கொண்டு போன சாக்லேட் மற்றும் பழங்களை அவர்கள் வீட்டுப் பையனிடம் கொடுத்துவிட்டு அதிர்ச்சியுடன் வீடு திரும்பினேன்.
நான் அவ்வளவு பாசமாக இருந்தும், நெருக்கமாக இருந்தும், அவள் தன்னைப்பற்றிய உண்மை (அது எதுவோ நானறியேன்) எதுவும் சொல்லவில்லை. நான் உண்மை என்று நம்பும்படி தன்னைப்பற்றிச் சொல்லியிருக்கிறாள். அவளைக் கெட்டவள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், எனக்கு அந்த நெருக்கம் ஒட்டுதல் இனி இருக்குமா என்று தெரியவில்லை. அவள் வாழ்க்கையே ஒரு புதிராக இருக்கிறது. ஏன் அப்படிச் செய்தாள் என்று தெரியவில்லை.
நேற்றைக்கு அவளைக் கஃபேடீரியாவில் பார்த்தேன். ஆனால், பார்க்காததுபோல் அவசர அவசரமாக வேறு பக்கமாகப் போய்விட்டேன். இன்று காலையில் அவளிடமிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது. "நேற்றைக்கு உங்களைப் பார்த்தேன். பேச முடியவில்லை. முடிந்தால் கூப்பிடுங்கள்" என்று எழுதியிருந்தாள். நான் பதில் போடவில்லை. நான் ஏதோ குற்றம் செய்தவள்போல அவளை எதிர்கொள்வதைத் தவிர்க்கிறேன். எப்படி அவளைக் கையாள்வது என்று புரியவில்லை. நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள்? நான் இதுவரை யாரையும் இப்படிப் பார்த்ததில்லை.
இப்படிக்கு, ...........
அன்புள்ள சிநேகிதியே,
தங்கள் வாழ்க்கை ரகசியங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் நிறையப் பேருக்கு இருக்காது. வாழ்க்கையில் ரகசியம் என்பது ஒரு கசப்பு, நெருடல்தான். சிலருக்கு அதைத் தாங்களே ஜீரணித்துக் கொள்ளும் சக்தி உண்டு. அந்த வகையில் நீங்கள் இதுவரை பாசமுள்ள தோழியாகக் கருதியவருக்கு எந்த அவசியமும் இருந்திருக்காது. பொதுவாக மனிதர்கள்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். இல்லை, சமுதாயக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட சில செயல்களில் ஈடுபட்டிருந்து, தன்னுடைய இமேஜ் பழுதுபடாமல் இருக்க எதுவும் சொல்லாமல் இருக்கலாம்.
ஆனால், நீங்கள் உண்மை என்று நம்பி இருந்தவற்றை மறுபடியும் செய்திருப்பது, அவர்பேரில் உள்ள பாசத்தை, நம்பிக்கையைக் குறைக்கத்தான் செய்யும். உங்கள் சங்கடம் எனக்கு புரிகிறது.
நான் உங்கள் நிலையில் இருந்தால்.....
* ஒருவர் உண்மையைத் திரித்துப் பேசுபவர் என்பது புரிபட்டு விட்டதால் அவரைக் கையாள்வது எனக்குச் சுலபமாகப் போய்விடுகிறது. இனிமேல், அவர் சொல்வதில் முரண்பாடுகள் இருந்தால் நான் நம்பப் போவதில்லை. * ஆனால், அந்த நட்புறவை முறித்துக்கொள்ள மாட்டேன். பலமுறை உங்களுக்கு உதவியதாகச் சொல்லியிருக்கிறீர்கள். உதவி என்று தவறாக எழுதிவிட்டேன். உங்களிடம் சிரித்த முகத்தோடு, கனிவாக இருந்து பேசியதால், நீங்கள் உற்சாகமாக உணர்ந்திருக்கக்கூடும். கஃபேடீரியா தொடர்பைத் தொடருவேன். * அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன். ஆனால், உண்மையான காரணத்தை இப்போது தெரிவித்தாலும், அதை மனது நம்ப மறுக்கும். ஒருமுறை சந்தேகம் தோன்றிவிட்டால் நம் மனது அதைத்தான் பிடித்துக் கொள்ளும். * முன்போல் அந்தப் பரிவையும் பாசத்தையும் காட்ட என் மனதும் முரண்டு பிடிக்கும். ஆனால், அந்தப் புன்னகை முகத்தைத் தக்கவைத்து இனிமையாக உரையாடலைத் தொடர முயல்வேன். * உங்கள் தோழி உங்கள் வயதினரா, பெரியவரா, சிறியவரா என்று தெரியாது. அதனால் நான் என்ன புதிதாகச் செய்வேன் என்று சொல்லத் தெரியவில்லை. * உண்மையைத் திரித்துப் பேசுபவர்களுக்கு நல்ல புத்திக்கூர்மையும் இருக்கும். அதை வைத்து அவர்கள் நம் நட்பில் ஏதோ ஓர் இடர் இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுவார்கள். உங்கள் நட்பை அவர் பொருட்படுத்தினால், உங்கள் நம்பிக்கையை இழந்து விடுவோமோ என்ற உணர்வில், அவர்கள் மறைத்த, திரித்த செய்கைகளை, தற்செயலாக நடந்தது போலக் குறிப்புக் காட்டி நேர்படுத்திக் கொண்டு விடுவார்கள். அதற்குக் கொஞ்சநாள் பொறுத்திருக்க வேண்டும். எனக்கு அந்தத் தோழியின் நட்பு பிடித்திருந்தால் நான் பொறுத்துக்கொள்வேன்.
எல்லாமே அவரவர் பெர்சனாலிடியைப் பொறுத்தது. உங்கள் மனப்போக்கின்படி நீங்கள் நடந்து கொள்ளுங்கள். உணர்ச்சிகளில் கொஞ்சம்தான் தர்க்கம் (logic). மீதி உள்ளுணர்வுகள்தாம் (emotions).
வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன், கனெக்டிகட் |