தொடரும் சலுகைகள்!
கி.மு., கி.பி. என்பது போல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க, தேர்தலுக்குப் பின்பு அ.தி.மு.க என்று அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளை இரண்டாகப் பிரிக்கலாம். கடந்த 2001ம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு பதவியேற்றவுடனே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும், பல்வேறு அவசரச் சட்டங்களையும் இயற்றியது. குறிப்பாக அரசு ஊழியர்கள் போராட்டத்தை டெஸ்மா, எஸ்மா சட்டங்கள் கொண்டு அடக்கியது, மதமாற்றச் சட்டத்தை பிறப்பித்தது, ரேஷன் வழங்கும் முறைகளில் மாற்றம் செய்தது என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. மக்கள் நலத்திற்கு எதிராக செயல்பட்ட அரசின் இத்தகைய கொள்கைகளையும், அவசரச் சட்டங்களையும் எதிர்க்கட்சிகள் விமரிசித்தன.

இந்நிலையில் 2004ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வந்ததது. தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.கவிற்கு எதிராக தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று ஏழு கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்றன. அ.தி.மு.க, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது, தி.மு.க. தலைமையிலான கட்சிகள் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றின.

தோல்வியை அடுத்து அ.தி.மு.க. அரசு தான் முன்பு கொண்டு வந்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும், அவசரச் சட்டங்களையும் ஒவ்வொன்றாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளத் தொடங்கியது. குறிப்பாக மதமாற்றத் தடுப்பு மற்றும் கோயில்களில் விலங்கு பலித்தடைச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. இந்நிலையில் 20 வருடகாலமாக தமிழக, கர்நாடக மற்றும் கேரள அரசுகளுக்கு கடும் பிரச்சனையாக கருதப்பட்ட வீரப்பனை தமிழக அதிரடிப் படையினர் சுட்டுவீழ்த்தியதும், சென்னைக்கு வீராணம் ஏரியின் மூலம் குடிநீர் விநியோகம் செய்ததும் அ.தி.மு.க அரசுக்கு மறுபடியும் ஒரு புத்துணர்வைக் கொடுக்கத் தொடங்கியது.

தொடர் நிகழ்வுகளாக சங்கராச்சாரியார் கைது பரபரப்பாக மக்களால் பேசப்பட்டது. பின்னர் அண்மையில் நடைபெற்ற காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல்களில் பெற்ற வெற்றி அ.தி.மு.க அரசுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்க, பொதுதேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் வேளையில் அ.தி.மு.க பல்வேறு சலுகை களை மக்களுக்கு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அ.தி.மு.க அரசின் இந்தச் சலுகைககள் அனைத்தும் வருகிற தேர்தலுக்கானதுதான் என்று குற்றம் சாட்டுகிறது. அதிரடியாக அண்மையில் தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்தது மட்டுமல்லாமல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, நீதிபதிகள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 1003 அரசு ஊழியர்கள், பணியில் இல்லாத காலம் பணிக்காலமாக கருதப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தைத் தடை செய்த 'டெஸ்மா' சட்டம் புதுப்பிக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இவையெல்லாம் அரசுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும் இடையே மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த ஜெயலலிதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பதைத் தெளிவாக்குகிறது.

ஜெயலலிதா தலைமையிலான முதல் மூன்று ஆண்டு ஆட்சியில் அவசரச் சட்டங்களும், அதிரடி நடவடிக்கைகளுமாக இருக்க, அடுத்த இரண்டு ஆண்டுகள் சலுகைகளும், நல்வாழ்வுத் திட்டங்களும் என்று நாளுக் கொரு அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தேர்தல் அறிவிப்புகள் வரும் வரை இதுபோல் பல்வேறு அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கும் என்பது நோக்கர்கள் கருத்து.

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com