டாக்டர் சுனில் கிருஷ்ணன்
மகாத்மா காந்தியைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், காந்தி, காந்தியம், காந்தியர்களைப் பற்றிய முக்கியமான இணையதளமாக 'காந்தி - இன்று' இருக்கிறது. இதைத் தொடங்கி நடத்தி வருகிறார் சுனில் கிருஷ்ணன். அடிப்படையில் இவர் ஓர் ஆயுர்வேத மருத்துவர். ஆனால், எழுத்து, கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனத் தனது சிறகுகளைப் பல திசைகளிலும் விரித்துள்ளவர். சொல்வனம், பதாகை, கபாடபுரம் போன்ற தளங்களில் வெளியாகும் இவரது படைப்புகள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றவை. குடும்பத்துடன் காரைக்குடியில் வசித்துவரும் இவருக்குக் கிடைத்த சமீபத்திய அங்கீகாரம் சாகித்ய அகாதமியின் 'யுவபுரஸ்கார்'. 'யாவரும் பதிப்பகம்' வெளியிட்ட 'அம்புப்படுக்கை' சிறுகதைத் தொகுப்புக்காக இவ்விருது கிடைத்துள்ளது. தனது பரந்துபட்ட ஆர்வங்களின் வேர்களையும் வீச்சுக்களையும் பற்றி இங்கே நம்மோடு பேசுகிறார். வாருங்கள் கேட்கலாம்...

*****


ஆளுக்கொரு புத்தகம்
அம்மாவும் அப்பாவும் வாசிப்பவர்கள். இப்போதும் அலமாரியில் அவர்கள் சேமித்து பைண்டு செய்த தொடர்கதைகள் உள்ளன. பி.வி. தம்பி எழுதிய 'கிருஷ்ணப்பருந்து' என்றொரு நாவலை அப்படி ஒரு பைண்டு புத்தகமாகப் படித்தது நினைவுக்கு வருகிறது. சாப்பாட்டு மேசையில் ஆளுக்கொரு புத்தகத்தை விரித்துக்கொண்டு உண்போம். சிறுவர் மலரின் 'பலமுக மன்னன் ஜோ', 'சோனிப்பையன்' கதைகளுக்கு அப்பால், 'சம்பக்', 'கோகுலம்', 'டிங்கிள் டைஜஸ்ட்' போன்ற இதழ்கள் வீட்டுக்கே வரும். மிகச்சிறு வயதிலேயே எனக்கான கதைகளை உருவாக்கிக் கொண்டேன். ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்தேன். என் சிறுவயதில் தந்தையின் மரணத்திற்குப் பின்பான காலங்களில் மொட்டை மாடியில் நின்று விரிந்த வானத்தை, செம்மண் நிலத்தை, தூரத்துத் தென்னைகளை பார்த்துக் கொண்டிருப்பேன். அன்றைய நிகழ்வுகளைப் பள்ளியை விட்டுத் திரும்பியவுடன் அம்மா சொல்வார். அவற்றை உள்வாங்கிக் கொஞ்சம் மாயாஜாலம் கலந்து எனக்கே நிகழ்ந்தவையாகத் திருப்பிச் சொல்வேன்.

எட்டாவது அல்லது ஒன்பதாவது இறுதிப் பரீட்சை விடுமுறையில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' வாசித்து முடித்திருந்தேன். அன்றைய காலகட்டத்தில் கல்கியும், தேவனும், சாவியும் என் விருப்பத்திற்குரிய எழுத்தாளர்களாக இருந்தார்கள். அதே பருவத்தில் ஆன்மிகம், குண்டலினி என்று திருட்டுத்தனமாக வாசித்ததும் உண்டு. ஆங்கில வாசிப்பு ரிச்சர்ட் பாக்கின் 'ஜோனாதன் லிவிங்க்ஸ்டன் சீகல்' நூலிலிருந்து துவங்கியது. பாலோ கொயல்யோவின் 'ரசவாதி' நூலையும் வாசித்திருக்கிறேன். எங்கள் பள்ளி சார்பாகக் கொண்டுவந்த பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் இருந்தேன். அதில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒவ்வொரு கவிதை எழுதினேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் சிறுவர் இணைப்பில் 'Joker' என்ற எனது ஆங்கிலக் கவிதை பிரசுரமாகி, அதைப் பாராட்டி ஒரு கடிதம் வந்திருந்தது. இப்படித்தான் ஆரம்பித்தது எனது இலக்கிய ஆர்வம்.



என் மனக்கதவைத் திறந்தவர்கள்
எனது கல்லூரி நாட்கள் மறக்க முடியாதவை. அந்நாட்களில் பெரும்பாலும் ஆன்மீக, சுயமுன்னேற்றப் புத்தகங்களையே அதிகம் வாசித்து வந்தேன். பரமஹம்ச யோகானந்தரின் 'ஒரு யோகியின் சுயசரிதை' மற்றும் சுவாமி ராமாவின் 'Living with Himalayan Masters' ஆகியவற்றைப் பெரும் பரவசத்தோடு வாசித்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். (ஆமாம், நீங்கள் ஊகிப்பது போல் ரஜினியின் தாக்கமேதான்). ஓஷோவின் 'கிருஷ்ணா' மிகவும் தொந்தரவு செய்த நூல். நான்கு பக்கங்கள் வாசிப்பதும் மூடி வைப்பதுமாகப் பெரும் அவதி. இனி அந்த நூலைத் தொடவே கூடாது எனும் உறுதி ஒரேநாளில் மறைந்துபோகும். நான் ஆயுர்வேதம் பயின்றுவந்த அதே கல்லூரியில் சித்த மருத்துவம் படித்துக் கொண்டிருந்த நண்பன் வினோத் அப்போதே தீவிர வாசிப்புடையவனாக இருந்தான். இருவரும் மருத்துவமனையில் இரவுப் பணி பார்த்துக் கொண்டிருந்த காலங்களில் பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினான். அப்படி அறிமுகம் ஆன ஒரு பெயர் ஜெயமோகன். விகடனில் 'தொப்பித் திலகம்' கட்டுரை வழியாக ஜெயமோகனின் வலைத்தளம் அறிமுகமானது. கணினி வாங்கிய புதிது. அவருடைய வலைதளத்தைப் படித்து வெகுவாகச் சீண்டப்பட்டு அவருக்குச் சில கடிதங்கள் எழுதி இருக்கிறேன். முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் வலைப்பூ எழுதத் துவங்கினேன். ஜெயமோகனின் 'இன்றைய காந்தி' பெருந்திறப்பை அளித்தது. ஜெயமோகன் துவங்கி என் வாசிப்பு முன்னும் பின்னுமாக அலைந்தது. இன்றுவரை தொடர்ந்து வாசித்து கொண்டிருக்கிறேன். இன்னும் தமிழிலும் உலக இலக்கியத்திலும் வாசிக்க வேண்டிய எழுத்தாளர்கள் அநேகம்.

இன்றைக்கும் காந்தி
உலகம் இன்றைக்குப் பல தரப்புகளாகப் பிரிந்து சமரிட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாத் தரப்புகளுக்கும் அவரவருக்கான அரசியலும், நியாயமும், தேவையும் இருக்கக்கூடும். ஆனால், எங்கோ ஒரு குரல் 'நாம் அனைவரும் சகோதரர்களே' என்று அழுத்திச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. காந்திமட்டுமே நானறிந்த வரையில் எதிரிகளை உருவாக்காத போராட்டக்காரர். எதிர்த்தரப்புகளின் நியாயத்திற்குச் செவிசாய்த்தவர். விடுதலை என்பது எதிர்த்தரப்பையும் உள்ளடக்கியது எனச் சொன்னவர். அனைத்து சித்தாந்தமும் மற்றமையை உருவகித்துத் தனது வலுவைத் திரட்டிக் கொண்டிருக்கும் சூழலில், காந்தியம் நல்லிணக்க, நன்னம்பிக்கைச் சூழலை உருவாக்க முனைகிறது. அதுவே இன்றைய காலக்கட்டத்தின் முக்கியத் தேவையாக இருக்கிறது.

மீண்டுவரும் ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் நம் மண்ணில் பல நூற்றாண்டுகளாக உயிர்த்திருக்கும் தர்க்கபூர்வமான ஒரு மருத்துவமுறை. நாம் பரவலாக எண்ணுவதுபோல் அது ஒரு தேங்கிய அறிவுத்துறை அல்ல. ஓர் உதாரணத்தைச் சொல்லலாம் - ஐரோப்பியர்கள் இந்தியா வந்து சேர்ந்த ஒரு நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட மருத்துவ நூல்களிலேயே சிஃபிலிஸ் நோய் பற்றிய குறிப்புகள் மற்றும் சிகிச்சைமுறை காணக் கிடைக்கின்றன. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, தொன்மையான அறிவுத்துறையின் இருப்பைக் கேள்விக்கு உட்படுத்துவதாக உள்ள பார்வை எனக்கு ஏற்புடையது அல்ல. அவற்றையும் தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளும் தன்மை ஆயுர்வேதத்திற்கு உண்டு. அதேபோல் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் ஆர்டிமிசின் (மலேரியாவுக்கான மருந்து) போன்ற ஒன்றை நவீன மருத்துவமும் - தனக்குத் தேவையானதை - எடுத்துக்கொண்டுள்ளது. இன்றைய முக்கியமான சவால் என்பது, ஆயுர்வேத அறிவியல் நிரூபணம் சார்ந்த சொல்லாடல்களில் நிலவும் குழப்பம்தான். ஆனால் அதைவிடவும் பெரும் சிக்கல் மருந்துகளின், இடுபொருள்களின் பற்றாக்குறை. பல மூலிகைச் செடிகள் நசிந்து வருகின்றன. அறிவியல் நிரூபணம் செய்வதற்கு முதலில் இடுபொருள்கள் வேண்டுமே. அதைக் காக்கவேண்டுவதே இன்றைய முக்கியத் தேவையாக இருக்கிறது.



இன்றைக்குப் பெருநகரங்களில் ஆயுர்வேதம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. வரவேற்பும் இருக்கிறது. ஆனால் சிறு நகரங்களில் அப்படியான போக்கு இல்லை. நவீன மருத்துவம் அறிமுகமாகிப் பரவத் துவங்கி, பாரம்பரிய மருத்துவமுறையின் இடத்தை முழுமையாகக் கைப்பற்றியபோது, அது உயர்குடியினரின் மோஸ்தராகக் கருதப்பட்டது. நகரத்து மேல்குடியினர் கல்வியை, அறிவை வெளிப்படுத்த நவீன மருத்துவத்திற்குக் குறுகிய காலத்தில் மாறினர். நவீன மருத்துவம் அறிவின், முற்போக்கின் குறியீடாக நிறுவப்பட்டதும் சிறுநகர, கிராம மக்களும் அதையே பின்தொடர்ந்தனர். இப்போது பெருநகர உயர்குடி மக்கள் மாற்று மருத்துவத்தை நாடத் துவங்கியிருக்கிறார்கள். இதுவும் நவீன நாகரீகப் போக்கின் குறியீடாக நிலைபெற்றால் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பாரம்பரிய மருத்துவ முறைகளின் மறுமலர்ச்சி நிகழலாம்.

நரோபா
நான் புனைவுலகில் காலடி வைக்கும் முன்னரே ஜெயமோகனின் அணுக்கன். காந்திய ஆர்வலன். ஆயுர்வேத மருத்துவன். இது ஒரு வகையில் வசதி என்றால் வேறொரு வகையில் அவதி. எழுத்தாளன் மறைந்து அவனுடைய படைப்பு மட்டும் வெளிப்படும்போது அது எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்பதை அறிய விழைந்தேன். ஆகவே, 'நரோபா' என்ற புனைபெயரில் எழுத ஆரம்பித்தேன். நரோபா ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' நாவலில் வரும் ஒரு பாத்திரம். பௌத்த நூல்களை திபெத்திய மொழிக்குக் கொண்டுசெல்ல வருபவன். ஆனால், அவனுடைய பணி அவனைச் சலிப்படைய வைக்கும். அவன் எழுதும் பயணக்குறிப்பில் அவன் வெளிப்பட்டு காலாதீதத்தை அடைவான். எங்கோ என் அன்றாடத்திலிருந்து தப்பிப் புகலிடம் பெற, ஆசுவாசம் பெற, ஒரு சிறிய வெளி வேண்டியதாய் இருக்கிறது. உள்ளே ஒரு சுவிட்ச் இருப்பதுபோல் நரோபாவாகக் கதைகளை எழுதும்போது என் மொழி மாறுவதைக் காண்கிறேன்.

விருது என்னும் இளைப்பாறல்
யுவபுரஸ்கார் விருது எனக்கு ஒரு சின்ன இளைப்பாறல். செல்தொலைவுக்குக் கிரியா ஊக்கி. விருது அறிவிக்கப்பட்ட பின் ஜெயமோகன் "இந்த விருது சின்ன விருது என ஆகும்படி எழுதி முன்செல்லுங்கள்" என்று எனக்கெழுதிய மடலில் கூறிய சொற்களை எப்போதும் சுமந்து செல்ல விழைகிறேன். எழுத்தாளாராக என்னை இனம்கண்டு பதிப்பித்த 'யாவரும் பதிப்பகம்' ஜீவகரிகாலனுக்கு என் நன்றி உரித்தானது.

மரப்பாச்சி
சென்னைக்கு அடுத்தபடியாக கடந்த பதினாறு, பதினேழு ஆண்டுகளாக காரைக்குடியில் தொடர்ச்சியாகப் புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், துவக்கத்தில் இருந்த ஆர்வம் இதை முன்னெடுப்பவர்களுக்கு மெல்ல மெல்ல வற்றிவிட்டது. நவீன இலக்கியப் பதிப்பகங்கள் பலவற்றுக்கு இங்கு வந்து செல்வது கட்டுபடியாகவில்லை. புத்தகக் கண்காட்சிக்கு சென்றால் வாங்குவதற்குப் புத்தகங்களே இருக்காது என்ற அளவிற்கு மனம் நொந்த காலகட்டம் உண்டு. கடந்த மூன்றாண்டுகளாக 'மரப்பாச்சி' என்னும் பேரில் கண்காட்சிக்கு மட்டுமென ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அரங்கெடுத்து, தெரிந்த பதிப்பக நண்பர்களின் உதவியோடு இயன்றதைச் செய்து வருகிறேன். பெரும்பாலும் நஷ்டம்தான். ஆனால், நஷ்டத்தை நண்பர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். தேவைப்படும் பலருக்குப் புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன், அவ்வகையில் கொஞ்சம் பரவாயில்லை. இவ்வாண்டு தமிழ் நாடு அறிவியல் இயக்கம் முதன்முறையாகக் கண்காட்சியை அக்டோபர் மாதத்தில் நடத்தவிருக்கிறது. அதன் ஆலோசனைக் குழுவில் நான் இடம் பெற்றிருக்கிறேன். புதிய நண்பர்கள் களமிறங்கிச் செயல்பட்டு வருகிறார்கள். அதற்குரிய பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்.



படித்ததில் பிடித்தவர்கள்
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் என்றால் ஜெயமோகனையும் அசோகமித்திரனையும் சொல்வேன். என்னைப் பாதித்த எழுத்தாளர்கள் என்றால் அந்தப் பட்டியல் சற்றே நீளமானது. நான் வாசிக்கும் ஒவ்வொரு எழுத்தாளரும் என் படைப்பூக்கத்தின் மீது தாக்கம் செலுத்துகிறார்கள். யுவன் சந்திரசேகரின் 'நீர்ப் பறவைகளின் தியானம்' சிறுகதைத் தொகுப்பு நான்கை முறையாவது வாசித்திருப்பேன். அ. முத்துலிங்கமும் யுவனும் என் மொழியின் இறுக்கத்தைத் தளர்த்தினார்கள். சுரேஷ்குமார இந்திரஜித்திடம் சிறுகதைகளின் பல்வேறு வடிவ சாத்தியங்களைக் கற்றுக்கொண்டேன். நாஞ்சில்நாடன், சு. வேணுகோபால், தேவிபாரதி, பி.ஏ. கிருஷ்ணன் எனப் பலரையும் பெருவிருப்புடன் வாசிக்கிறேன். இரா. முருகனின் 'அரசூர் வம்சம்' அபார வாசிப்பனுபவம். அண்மையில் என்னைப் பெரிதும் ஈர்த்த படைப்பு, பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் 'துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை'.

அயல்மொழி இலக்கியத்தில் காஃப்காவை என் ஆதர்சம் எனச் சொல்வேன். கசன்ஜாகிஸ் (Nikos Kazantzakis), ஜார்ஜ் ஆர்வெல், போரிஸ் பாஸ்டர்நாக், புல்ககோவ் (Mikhail Bulgakov) போன்றோரை வெகுவாக ரசித்து வாசித்திருக்கிறேன். சமீபத்தில் அப்படி என்னைப் பாதித்த எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி. இந்திய மொழிகளில் பஷீரும் பைரப்பாவும் புனத்தில் குஞ்சத்துல்லாவும் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்.

எழுத்தாளனும் குடும்பமும்
சித்தமருத்துவக் குடும்பம் எங்களுடையது. தாத்தா சித்த மருத்துவர். தந்தை பாளையங்கோட்டை கல்லூரியில் பயின்று அரசு சித்த மருத்துவராகப் பணியாற்றியவர். எனது எட்டாவது வயதில் அவர் இறந்துவிட்டார். ஒரே பிள்ளையாக வளர்ந்தேன். எனக்கென்று நான் வாங்கிக்கொள்வது புத்தகங்கள் மட்டுமே என்பதால் ஒருபோதும் அம்மா அதற்குத் தடை சொன்னதில்லை. இக்கட்டான நிலைகளை ஒற்றையாளாகச் சமாளித்து எனக்கு எந்தத் துயரத்தையும் கடத்தாமல் வளர்த்தார். யுவபுரஸ்கார் விருதை அவருக்கே அர்ப்பணித்திருக்கிறேன். மனைவி மானசா, என்னைப்போலவே ஆயுர்வேத மருத்துவர், ஆகவே இத்தொழிலின் நியாயமான வருமானம் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை அறிந்தவர். இசையிலும் ஓவியத்திலும் நல்ல பரிச்சயம் கொண்டவர். மணிக்கணக்காக அமர்ந்து சாக்பீஸ் சிற்பங்களை உருவாக்குபவர். படைப்பூக்கத்தின் நிலையற்ற தன்மையை நன்கு உணர்ந்தவர். வாழ்க்கைத்துணையாக அவர் கிடைத்திருப்பது மிகுந்த ஆசுவாசம் அளிக்கிறது. எழுத்தாளனை வேறு விஷயங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதைக் காட்டிலும் அவனுடைய வீட்டுச் சிக்கல் அதிகமும் அவனுடைய படைப்பூக்கத்தை விழுங்கிவிடும். என் படைப்பூக்கத்தை பேணிக்காப்பதில் அவருடைய பங்களிப்பு அளப்பரியது. எங்களுக்கு ஒரு மகன். சுதீர், இரண்டரை வயது இப்போது. குழந்தைகளின் அண்மையைப்போல் நமக்கு உற்சாகம் அளிப்பது உலகில் வேறெதுவும் இல்லை. அவ்வகையில் அவனுடைய இருப்பு என் வாழ்வைக் கொண்டாட்டம் ஆக்கியிருக்கிறது.



செய்யவேண்டும்...
ஆயுர்வேதத்தை வரலாற்றுப் பூர்வமாக அணுகும், அதற்கும் நவீன அறிவியலுக்கும் உண்டான உறவைப் பரிசீலனை செய்யும் ஒரு நூலைப் படைக்கும் முயற்சியில் உள்ளேன். பாரதிய வித்யா பவனுக்காகத் தொகுக்கப்படும் 'தமிழில் காந்தி' நூலுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நிகழ்ந்து வருகின்றன. சுரேஷ்குமார இந்திரஜித்தின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் காலச்சுவடு வெளியீடாக டிசம்பரில் வரவிருக்கிறது. கதைத்தேர்வும் முன்னுரையும் என் பணி. ஆயுர்வேத ஆசிரியர் டாக்டர். இல. மகாதேவனுடன் நீண்ட நேர்காணல் நிகழ்த்தி அதைக் காலச்சுவடுக்காக ஒரு நூலாகக் கொண்டுவரும் திட்டமும் உண்டு. புதிய எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனக் கட்டுரையும் நேர்காணலும் கொண்ட புதிய குரல்கள் பகுதியைத் தொடர வேண்டும். இப்படிச் செய்வதற்கு அநேகப் பணிகள் உள்ளன.

சுனில் கிருஷ்ணன் suneelwrites.blogspot.com என்ற தனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவருகிறார். தனது முதல் நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார். "நாவலுக்கு 'நீலகண்டம்' எனப் பெயரிட்டிருக்கிறேன். இந்நாவலை பிரியத்திற்குரிய வானவன் மாதேவி மற்றும் இயலிசை வல்லபிக்குச் சமர்ப்பிக்க உள்ளேன்." என்கிறார். விரிந்த வாசிப்பும் விடாத படைப்பூக்கமும் அவருக்கு இன்னும் சிறந்த மகுடங்களைக் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்தி விடைபெற்றோம்.

உரையாடல்: அரவிந்த்

*****


அன்னா ஹசாரே ஏன் காந்தியல்ல?
ஜெயமோகனின் 'இன்றைய காந்தி' வாசித்து முடித்த காலம். அப்போதுதான் அன்னா ஹசாரேவின் போராட்டம் ஓர் அலையாகப் பொங்கி இந்தியாவைச் சூழ்ந்துகொண்டது. சமூக ஊடகம் தலையெடுத்து இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் போராட்டம் அதுவாகவே இருக்கும். அன்னா ஹசாரே உண்ணாவிரதமிருக்கும் முன்பே வாசிப்பினூடாக எனக்கு அறிமுகம் ஆகியிருந்தார். நண்பர்கள் அவருக்கெனத் துவங்கிய வலைதளத்தில் என்னை இணைத்துக் கொண்டார்கள். ஹசாரேவின் இயக்கம் நீர்த்துப் போனபோது நண்பர்கள் ஆர்வமிழந்தார்கள். "ஹசாரே ஏன் காந்தியல்ல?" எனும் கேள்வியை எனக்குள் எழுப்பிக்கொண்டேன். ஹசாரே ஊழலை மேலிருந்து ஒழிக்க முடியும் என நம்பினார். காந்தி இதற்கு நேரெதிரான திசையைத் தேர்ந்திருப்பார் என்று புரிந்துகொண்டேன். தனிமனிதன் தானே அவருடைய இலக்கு. நண்பர் நட்பாஸ் இணைந்து கொண்டார். அங்கிருந்து இது காந்திக்கான தளமாக மாறத் துவங்கியது.

தளத்தைத் துவங்கி ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஐநூறுக்கும் மேற்பட்ட இடுகைகள் அதில் உள்ளன. மில்லி போலாக்கின் 'காந்தி எனும் மனிதன்' முழு நூலை நண்பர் கார்த்திகேயன் மொழியாக்கம் செய்துள்ளார். காந்தியக் கட்டுரைகளின் தொகுப்புத் தளமாகத் துவங்கி, பின்னர் பல கட்டுரைகளை மொழியாக்கம் செய்வது, புத்தக விமர்சனங்கள், அறிமுகங்கள் எழுதுவது, பல்வேறு காந்திய ஆளுமைகளை அறிமுகப்படுத்துவது எனப் பல தளங்களில் இது செயல்பட்டு வருகிறது. காந்தி குறித்த புரிதலை அடைய விரும்புபவர்களின் தேவைகளை முழுமையாய் நிறைவு செய்யுமளவுக்குக் கட்டுரைகள் கொண்ட ஆவணத் தொகுப்பாக இத்தளம் உள்ளது. 'காந்தி - எல்லைகளுக்கு அப்பால்', 'அன்புள்ள புல்புல்', 'காந்திய காலத்திற்கொரு பாலம்', 'காந்தி எனும் மனிதர்' என இதுவரை நான்கு நூல்கள் 'காந்தி -இன்று' தளத்திலிருந்து உருக்கொண்டுள்ளன. இன்னம் மூன்று தொகை நூல்களுக்கான விஷயம் அதில் உண்டு.

- டாக்டர் சுனில் கிருஷ்ணன்

*****


எனது மொழிபெயர்ப்புகள்
தாகூரின் சாந்தி நிகேதனத்தில் முக்கியப் பங்காற்றியவர் க்ஷிதி மோகன் சென். உலகப் புகழ்பெற்ற அமார்த்யா சென்னின் தாத்தா. அவர் மேற்குலகிற்கு இந்துமதத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஓர் அறிமுக நூலை எழுதினார். இந்து மரபின் பன்முகங்களைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தும் நல்ல நூல். அந்நூலை நண்பர் கடலூர் சீனுவின் 'சொல்புதிது' பதிப்பகத்திற்காக மொழியாக்கம் செய்தேன். வங்காள நாடோடிக் கவிமரபான 'பால்கள்' குறித்த அத்தியாயம் மொழியாக்கம் செய்யும்போதும், வாசித்தபோதும் மனம் நெகிழ்ந்தேன். மகிழ்ந்தேன்.

காந்தியின் மரணத்தின்போது ஒலிபரப்பட்ட வானொலி அஞ்சலிக் குறிப்புகள் கொண்ட நூறு பக்க நூலை மொழியாக்கம் செய்து இந்திய அரசின் பதிப்புத்துறைக்கு அளித்திருக்கிறேன். தவிர ஜானிஸ் பாரியட் எனும் மேகாலய எழுத்தாளரின் ஒரு கதையை, நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் தொகுப்பிற்காக மொழியாக்கம் செய்திருக்கிறேன். கோணங்கியின் 'கல்குதிரை' இதழுக்கு அமெரிக்க எழுத்தாளர் டான் டெலிலோவின் கதை ஒன்றை மொழியாக்கம் செய்திருக்கிறேன். கிரேக்க எழுத்தாளர் நிகோஸ் கசன்ஜாகிசின் அற்புதமான 'Zorba the Greek' நாவலைச் சற்றே நிதானமாக மொழியாக்கம் செய்து கொண்டிருக்கிறேன். இவற்றைத் தவிர 'காந்தி இன்று' தளத்திற்கு முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் மொழியாக்கம் செய்திருக்கிறேன். இனி, புனைவற்ற எழுத்துக்களை மொழியாக்கம் செய்வதைத் தவிர்க்க முடிவு செய்திருக்கிறேன். மொழியை வளப்படுத்த, அதைச் சோதனைக்குள்ளாக்க அவ்வப்போது சவாலான புனைவுகளை மொழியாக்கம் செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.

- டாக்டர் சுனில் கிருஷ்ணன்

*****


திரிபுகளும் குறை உண்மைகளும்

அருந்ததி ராய், அம்பேத்கரின் முக்கியமான நூலான 'Annihilation of Caste' நூலை மீள்பிரசுரம் செய்யும்போது, மிக விரிவான முன்னுரை ஒன்றை 'Doctor and Saint' எனும் தலைப்பில் எழுதி இருந்தார். அம்பேத்கரின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியதை விட, அந்நூல் காந்தியை அவதூறு செய்வதிலேயே குறியாக இருந்தது. அந்நூலில் காந்தியைப்பற்றி சொல்லப்படும் ஒவ்வொரு வரியும் குறை உண்மைகளும் திரிபுகளும் கொண்டவை. அதை மறுத்து ராஜ்மோகன் காந்தி ஒரு சிறு பிரசுரத்தை வெளியிட்டார். அதை மொழிபெயர்த்தேன். 'சுதந்திரமும் சமூகநீதியும்' எனும் எழுபது பக்க நூல் 'சர்வோதயா இலக்கியப் பண்ணை' வெளியீடாக வந்துள்ளது.

- டாக்டர் சுனில் கிருஷ்ணன்

*****


செட்டிநாடும் இலக்கியமும்
பதிப்பகத் துறையில் பெரும் சாதனையாளர்கள் இங்கிருந்து உருவானவர்கள்தான். சக்தி வை. கோவிந்தன், சின்ன அண்ணாமலை, ஏ.கே. செட்டியார் துவங்கி பழனியப்பா பிரதர்ஸ், வானதி, கவிதா என்று அது நீள்கிறது. ஆனால், இத்தனை வளமான சூழல் நவீன இலக்கியத்தில் பிரதிபலித்துள்ளதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இத்தனைக்கும் வாசிக்கக் கூடியவர்கள் எல்லாச் சிறு நகரங்களைப் போல் இங்கும் உள்ளார்கள். காரைக்குடி த.மு.எ.ச. மிக முனைப்போடு ஒவ்வொரு சனிக்கிழமையும் கூட்டங்கள் நடத்துகிறார்கள். ஒன்றுக்கு இரண்டு கம்பன் கழகங்கள் போட்டி போட்டுக் கூட்டங்கள் நடத்துகின்றன. திருக்குறள் பேரவை, சிலம்புப் பேரவை என மரபிலக்கியங்களுக்குப் பல்வேறு அமைப்புகள் உள்ளன. இன்றும்கூட செட்டிநாட்டு சாந்தி விழாக்களில் 'மணிவிழா மலர்கள்' அச்சாக்கி அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். ஆனால், தஞ்சை எழுத்தாளர்கள், கரிசல் எழுத்தாளர்கள், தாமிரபரணி எழுத்தாளர்கள், கொங்கு எழுத்தாளர்கள் என்று சொல்வதுபோல் செட்டிநாட்டு எழுத்தாளர்கள் என்றொரு வரிசை உருவாகவில்லை. இது ஒரு வினோத நிலைதான். இதற்கான காரணத்தை என்னாலும் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

- டாக்டர் சுனில் கிருஷ்ணன்

*****

© TamilOnline.com