சென்னை நகரில் கோடையில்கூட ஒருநாள் மழை வரலாம்; ஆனால் தமிழக வளர்ச்சித் திட்டங்களில் நம் அரசியல் கட்சிகள் ஒரே அணியில் வருவது என்பது எட்டாத கனியாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் தமிழக மக்களின் நல்வாழ்வுக்கும், தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கும் தாங்கள் தாம் காரணம் என்று சொல்லும் பங்காளிச் சண்டை தமிழக மக்கள் அன்றாடம் காணும் காட்சி.
தமிழக மக்களின் 140 வருட கனவான 'சேது சமுத்திரத் திட்டத்திற்கு' மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து விழாவிற்கான ஏற்பாடுகள், மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் நடைபெற்றது.
தொடக்கவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கியவுடனேயே தி.மு.க. ஒட்டுமொத்த திட்டமும் தமிழகத்திற்கு கிடைப்பதற்குத் தாங்கள் தாம் முழுக் காரணம் என்கிற விதத்தில் தங்களை முன்னிறுத்திச் செயல்பட்டது ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சியினருக்கு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்திருக்கிறது.
ஆரம்பம் முதலே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சேது சமுத்திர திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்வாரா மாட்டாரா என்று பலரிடையே எழுந்த கேள்விகளுக்கு ஜெயலலிதா நீண்ட அறிக்கையின் மூலம் தன்நிலைப்பாட்டை அறிவித்துக் கேள்வி களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
'சேது சமுத்திர திட்டம் நிறைவேற வேண்டும் என்பதில் நான் முனைப்பாக உள்ளேன். அதே நேரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அனைத்து நியாயமான கவலைகளுக்கும் முறையாகத் தீர்வு காணப்பட்ட பின்னரே இதை நிறைவேற்ற வேண்டும் என்பதே என் நிலை...' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியதுமட்டு மல்லாமல் இத்திட்டத்திற்கு மாநில அரசிட மிருந்து 'தடையில்லா சான்றிதழ்' பெற வேண்டியது சட்டப்படி அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
சேது சமுத்திர திட்டத்துக்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை; முதல்வரின் குற்றச்சாட்டு தவறானது என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பதில் கூற, இப்பிரச்சனை அரசியலாக்கப்பட்டுவிட்டது.
தி.மு.கவின் பெரியண்ணன் போக்கு கூட்டணி கட்சியினரிடமும், தொண்டர்களிடமும் குமுறலை ஏற்படுத்தினாலும் சட்டப்பேரவைத் தேர்தல் வரை இந்த கூட்டணி தொடர்வதையே விரும்புகிறார்கள். தொடக்கவிழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், அன்புமணி, இளங்கோவன் மற்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க தலைவர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் போன்ற ஒட்டுமொத்த தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விழாவை பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புறக்கணித்தது கூட்டணிக் கட்சியினருக்குப் பெருத்த அதிர்ச்சியை அளித்தது.
இதற்கிடையில் மீனவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அரிய மீன்வகைகள் அழிக்கப்பட்டுவிடும், சுற்றுபுறச்சூழல் மாசுப்பட்டுவிடும் என்று எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் சேது சமுத்திர திட்டத்தினால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் இத்திட்டத்தை எதிர்த்து மீனவர்கள் யாரும் போராடவில்லை. ஆளும் கட்சியினர்தான் போராட்டம் நடத்துகின்றனர். இவர்களை ஆளும்கட்சிதான் தூண்டிவிடுகிறது என்று அ.தி.மு.வை குற்றம் கூறினார் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு.
சேது சமுத்திர திட்டத்தினால் சுற்றுப்புற சூழல் பாதிக்காது. இதை மீனவர்களிடத்தில் தெளிவுபடுத்தி உள்ளோம் என்று மேலும் கூறிய அவர் இத்திட்டத்தினால் தமிழகத்தில் மிகப் பெரிய பொருளதார வளர்ச்சி ஏற்படும் என்றார். இத்திட்டம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்றும், அதன் பின்பு தமிழகம் பொருளாதார ரீதியாக முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும் என்றும் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
விழா நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பே மதுரை நகரில் முக்கிய சாலைகளில் இருபுறங்களில் ஆயிரக்கணக்கான கட்சிக் கொடிகளும், பிரம்மாண்டமான கட்சித் தலைவர்களின் பேனர்களும் வைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு விழாவா தி.மு.க. விழாவா என்று சொல்கிற அளவுக்கு தி.மு.க.வினர் கூட்டணிக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்நிற்கின்றனர்.
தமிழக வரலாற்றில் முக்கிய நிகழ்வான சேதுசமுத்திர திட்டத் தொடக்கவிழாவில், மாநிலத்தின் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் எதிரெதிராக இருந்து ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டது மிகவும் நெருடலாக இருந்தது.
எது எப்படியிருந்தாலும் இருகழகங்களின் பரஸ்பர குற்றச்சாட்டுகளினால் பாதிக்கப் படுவது தமிழக மக்களின் நலன்கள்தாம் என்பதை தமிழக அரசியல் கட்சிகள் மறந்துவிடக்கூடாது!
தொகுப்பு:கேடிஸ்ரீ |