அரங்கேற்றம்: மாதவ் பார்த்தசாரதி
ஆகஸ்ட் 11, 2018 அன்று சிகாகோ நகரில் மாதவ் பார்த்தசாரதியின் மிருதங்க அரங்கேற்றம் குரு திருவாரூர் வைத்தியநாதன் முன்னிலையில், அருணா சாய்ராமின் முழுநேரக் கச்சேரியுடன் சிறப்பாக நடந்தேறியது. திருமதி உமா ஐயர் வரவேற்புரை நல்கினார். சிறப்பு விருந்தினர்களான திரு ராஜா கிருஷ்ணமூர்த்தி, (US Congress), டாக்டர் திருச்சி சங்கரன், திருமதி மாலதி வைத்தியநாதன் (ஏர் இந்தியா), ரகு ரகுராமன் (RR இன்டர்நேஷனல்) ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார்.

திருமதி அருணா சாய்ராம் முதலில் கம்பீரநாட்டை ராகத்தில் "அம்மா ஆனந்த தாயினி" என்ற வர்ணத்தைக் கம்பீரமாக ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து தியாகராஜரின் "ஞானமூர்த்தே", ஆபோகியில் கோபாலகிருஷ்ண பாரதியின் "சபாபதிக்கு", கதனகுதூல ராக "பிரியே" போன்ற தெவிட்டாத பாடல்களைப் பாடி ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தார். பைரவி ராகத்தில் அமைந்த "உபசாரமுலு" என்ற தியாகராஜ கீர்த்தனை, நிகழ்ச்சியின் முக்கியப் பாடலாக அமைந்தது. இந்தப் பாடலின் நிரவலும், பின்னே வந்த மாதவ் பார்த்தசாரதியின் தனியாவர்த்தனமும் சிறப்பாக விளங்கின. அரங்கம் எழுந்து நின்று கரவொலி செய்தது.

தொடர்ந்து அஹிர்பைரவி ராக அபங்கம். நீலமணி ராகத்தில் "என்ன கவி பாடினாலும்", "மாடு மேய்க்கும் கண்ணா" போன்ற பாடல்களைப் பாடினார். காளிங்கநர்த்தனத் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

திருமதி அருணா சாய்ராமுக்குப் பக்கம் வாசித்த திரு. விட்டல் ராமமூர்த்தி (வயலின்), குருபிரசாத் (கடம்), என். சுந்தர் (மோர்சிங்), குமாரி அக்ஷயா (தம்புரா) அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். அரங்கேற்றக் கச்சேரியை மறக்கமுடியாத நிகழ்ச்சியாக அமையப் பாடுபட்ட பெற்றோர் விஜி மற்றும் ரவி பார்த்தசாரதிக்கும், மாதவ் பார்த்தசாரதியின் குரு திருவாரூர் வைத்தியநாதனுக்கும் பாராட்டுக்கள் குவிந்ததில் வியப்பில்லை.

சிகாகோ ரகு,
இல்லினாய்

© TamilOnline.com