அரங்கேற்றம்: வந்தனா ராமகிருஷ்ணன்
திருமதி வந்தனா ராமகிருஷ்ணன் வித்தியாசமானவர். திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிவிட்ட இவர் தனது கலையார்வத்தை அணையாமல் பார்த்துக்கொண்டார். முந்தைய ஆண்டு நடந்த இவரது மகளின் நடன அரங்கேற்றம் இவரது ஆர்வத்தைக் கொழுந்து விட்டெரியச் செய்தது. லயத்வனி அகடமியின் கலை இயக்குனர் குரு ஸ்னிக்தா ரமணி இவரை மேலும் ஊக்கினார். விளைவு? ஆகஸ்ட் 19, 2018 அன்று ஃப்ரீமான்ட், ஓலோனி கல்லூரி அரங்கில் இவரது பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது!

நிகழ்ச்சி கணேச வந்தனத்துடன் தொடங்கியது. அடுத்து வந்தது சங்கீர்ணசாபு அலாரிப்பு. அன்றைய மாலைப்பொழுதின் மகுடமாகச் சொல்ல வேண்டுமென்றால் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் கம்பீரநாட்டையில் அமைந்த "அம்மா ஆனந்ததாயினி" வர்ணம்தான். வழக்கமாகப் பாடலில் தெய்வங்களின் லீலைகள் சித்திரிக்கப்படும். ஆனால் இந்தப் பாடலுக்கு குரு ஸ்னிக்தா மிகச் சுவையான அணுகுமுறையுடன் நடனம் அமைத்திருந்தார். ஒரு பெண்ணின் சக்தியை எப்படி அகத்திலும் புறத்திலுமுள்ள எதிரிகளை அழிக்கப் பயன்படுத்தலாம் என்பதை நடனமாக வடித்திருந்தார். அடுத்து பேகடாவில் அமைந்த நகைச்சுவை செறிந்த உருப்படி மிகவும் சுவைபட அமைந்திருந்தது.

ஆதிசங்கரரின் "உமா மஹேஸ்வரம்" மற்றும் "அர்த்தநாரீஸ்வரா" சுலோகங்களுக்கான நடனம் சிவ-சக்தி ஸ்வரூபங்கள் இணைபிரியாதவை என்பதைக் காட்டியது. சுருட்டி ராகத்தில் நிந்தாஸ்துதியாக அமைந்த பாடலில் கொப்பளித்த கேலிக்கு வந்தனாவின் அபிநயம் வெகு அழகு. மகாராஜபுரம் சந்தானம் எழுதிய சிவரஞ்சனி ராகத் தில்லானாவுக்கு முருகனின் அழகையும் வீரத்தையும் கண்முன் கொண்டுவந்தார். "மாதா காளிகா" என்ற பண்டிட் ஜஸ்ராஜின் அடாணா ராகப் பாடல் மங்களமாக அமைந்தது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com