நாதலயா: 'Beyond Oceans'
செப்டம்பர் 8, 2018 அன்று மாலை 5 மணிக்கு சன்னிவேல், ஃப்ரீமான்ட் உயர்நிலைப் பள்ளி, ஷானன் அரங்கத்தில் தனித்தன்மை வாய்ந்த இசைக் கச்சேரி ஒன்று நடைபெற உள்ளது. 'Beyond Oceans' என்ற பெயர்கொண்ட இந்த இசைநிகழ்ச்சியை விரிகுடாப் பகுதியின் நாதலயா இசைப்பள்ளி மற்றும் Around the World இசைக்குழுவும் இணைந்து வழங்குகின்றன.

'Inclusive World' என்கிற சேவை நிறுவனத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், கணினிப் பயிற்சி தரவும் இந்நிறுவனம் பல செயல்பாடுகளை மேற்கொள்கிறது.

நிகழ்ச்சியில் பிரதானமாகக் கர்நாடக சங்கீதம் இருக்கும். அதற்கு மெருகூட்டச் சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற பல்வேறு நாடுகளின் இசைக்கருவிகள் பின்னணி வழங்க உள்ளன. நிகழ்ச்சியை இயக்கி வடிவமைத்து நடத்துபவர்கள் நாதலயா இசைப்பள்ளி ஆசிரியர்களான திருமதி சாந்தி ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீராம் பிரம்மானந்தம். 'அரௌண்ட் தி வேர்ல்ட்' அமைப்பின் நிறுவனரான இளங்கலைஞர் அருண் ஸ்ரீராம் ஆசிரியர்களுக்கு வழிநடத்தத் துணை புரிகிறார்.

விரிகுடாப் பகுதியின் இசைக்கருவி வல்லுநர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர். நீண்டகாலஅனுபவமுள்ள சீனத் தாளவாத்திய வல்லுநர் வாங் வேய் அவர்கள் இதில் பங்கேற்கிறார். இதில் நாதலயா பள்ளியின் வாய்ப்பாட்டு மற்றும் மிருதங்க மாணவ மாணவியர் கர்நாடக சங்கீதம் இசைப்பர்.

அனைவரும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்து, அரிய இசை அனுபவத்தைப் பெற்று, இன்க்ளூசிவ் வேர்ல்டு நிறுவனத்தின் சேவைக்கு ஆதரவளிக்கும்படி நாதலயா பள்ளி அன்புடன் வேண்டிக்கொள்கிறது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com