செப்டம்பர் 2018: வாசகர்கடிதம்
ஆகஸ்ட் மாதத் தென்றல் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை அளித்தது. 'சுமைகூலி' சிறுகதை என் நெஞ்சைத் தொட்டு, கண்களில் கண்ணீரை வரவழைத்தது என்பது நூறு சதவீதம் உண்மை. குரு விஷால் ரமணி தன் வாழ்நாட்களை மிகவும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். 41 வருடங்களில் 250 அரங்கேற்றங்கள் என்பது மிகப்பெரிய சாதனை. 'கர்ம பலனும் கடவுளின் கருணையும்' என்ற சின்னக்கதையில் தீய கர்மாக்களின் சுவடுகளை, நல்ல எண்ணங்களும் புனிதமான உணர்வுகளும் முற்றிலும் துடைத்துவிடும் என்பதை பகவான் பாபா அருள்மொழியாகப் பகிர்ந்திருக்கிறார்.

'தென்றல் பேசுகிறது' என்ற தங்கள் கட்டுரையில் 'இந்தியாவில் பெருவெள்ளம்' என்று குறிப்பிட்டிருந்தீர்கள். மக்களின் துயரம் நீங்கக் கடவுள் அருளட்டும். வசுமதி கிருஷ்ண சுவாமி சுவைபட ஏப்ரிகாட் ஊறுகாய். பாகற்காய் ஊறுகாய் என்று ஜமாய்த்து விட்டார்கள். தண்ணீரில் ஊறப்போட்டுப் பிழிந்தெடுத்தால் சத்துகள் போய்விடும் என்ற விஞ்ஞான உண்மையைக் குறிப்பிட்டிருக்கிறார். சாய் ஷ்ரவணம், பாபாவின் அருள் பெற்று வளர்ந்த விதம் மனதிற்கு இதமாயிருந்தது. தென்றல் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

முனைவர் தியாகராஜன் சுப்ரமணியன்,
சாரடோகா, கலிஃபோர்னியா

*****


ஆகஸ்ட் மாதத் தென்றலில் 'சாய் ஷ்ரவணம்' நேர்காணல் படித்தேன். ஷ்ரவணம் என்பதற்கு இத்தனை சிறப்பான அர்த்தம் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்து போனேன். ஸ்ரீ சத்திய சாயிபாபா அவர்களின் 'கர்மபலனும் கடவுளின் கருணையும்' பற்றிய விளக்கம் நிறைந்த சின்னக் கதையும் மிகமிக அற்புதம்.

ரத்த சம்பந்தம் மட்டுமே உறவல்ல என்பதை அன்புள்ள சிநேகிதியே பகுதியில் எவ்வளவு அழகாக அன்பைப்பற்றி புரிய வைத்துள்ளார்! ஹரிமொழி, மகாபாரதத்தின் சம்பவங்களை, நிமிடத்திற்கு நிமிடம் என்ன நடந்தது அந்தச் சம்பவத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் மனநிலை, சூழ்நிலை என்ன, சாதாரணமாக நினைப்பது என்ன, உண்மையில் நடந்தது என்ன - என்பவற்றை, எந்தப் புத்தகத்தில் எந்தப் பக்கத்தில் எந்த வரியில் வருகிறது என்பது உட்பட விவரங்களை விளக்கமாகச் சொல்கிறது.

மறக்க முடியாத சம்பவங்களும் தியாகங்களும் நிறைந்த வ.வே.சு. ஐயர் அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், மகாத்மா காந்தியை சந்தித்த தருணங்கள் ஆகியவற்றைச் சுதந்திரம் கிடைத்த இந்த ஆகஸ்ட் மாதத்தில் நினைவுபடுத்தியதற்கு நன்றி. காலத்திற்கு ஏற்ற வித்தியாசமான சிறுகதை 'சுமைகூலி'.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

*****


தென்றல் ஜூலை இதழில் 'தேவனின் மர்மங்கள்' என்ற கட்டுரையைப் படித்தவுடன் எனது நினைவலைகள் கட்டுக்கடங்காமல் ஓடின. சுந்தரேசன் சுப்ரமணியனைப் போன்ற பல்லாயிரம் தேவனின் ரசிகர்கள் உலகெங்கும் உள்ளனர். சென்ற நூற்றாண்டில் தமிழ் மொழியில், சமூகக் கதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதியவர்களில் முதலிடம் தேவனுக்கு மட்டும் தான். மற்றவர்கள் அனைவரும் அவருக்குப் பின்னால்தான். தேவனின் கதைகள் மற்றும் நாவல்களில் ஒரு நீதி எப்பொழுதும் நிறைந்திருக்கும். தீமை செய்தவன் கதாநாயகனாக இருந்தாலும் தண்டனை பெற்றுத்தான் தீருவான் என்பதற்கு 'ஸ்ரீமான் சுதர்சனம்' ஓர் எடுத்துக்காட்டு.

அமரர் கோபுலுவுடன் ஒருமுறை மூன்று மணி நேரம் பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர்தான் தேவனின் எழுத்துக்கெல்லாம் சித்திரம் வரைந்தவர். அந்தச் சந்தர்ப்பத்தில் 'மிஸ்டர் வேதாந்தம்' நாவலில் வந்த 'வைரம் கோபால்ஸ்வாமி' படத்தைக் காட்டி. "எப்படி இவ்வளவு உன்னதமாக, உயிருள்ளதாக வரைந்தீர்கள்?" என்று கேட்டேன்.

மலர்ந்த புன்னகையுடன் அவர் சொன்னார், "தேவன் என்னை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்கையில் திடீரென்று ஓர் இடத்தில் நிறுத்தி, சாலையில் நடந்து செல்லும் ஒருவரைச் சுட்டிக்காட்டி இவர்போல் வரைந்தால் அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்துமா?" என்று கேட்பார். நான் ஏற்கனவே என் கற்பனையில் முடிவுசெய்த வடிவமாகவே தேவன் காட்டும் உருவமும் இருக்கும்" என்றார்.

'அப்பளக் கச்சேரி' என்ற தொடர் கட்டுரையில் கிராமத்துப் பெண்களின் மேதாவிலாசமும் மேன்மையான நாகரீகமும் பற்றி விளக்கியிருப்பார். நகைச்சுவை என்பது தேவன் தொட்ட இடமெல்லாம் நிறைந்திருக்கும். அந்தத் தொடரில் குடுமி வைத்த ஒரு சிறுவன் அப்பள உருண்டையை அள்ளிக்கொண்டு ஓடும்போது ஒரு கிழவி அவனைத் திட்டுவது நம்மை வாய்விட்டுச் சிரிக்கவைக்கும்.

தமிழ் வளர்ச்சியில் தங்களின் பங்கு மிகவும் உன்னதமானது. அதுபோல தென்றலின் கவிதை, கட்டுரைகளின் தரமும் மிகவும் சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள்.

ச. ஸ்ரீமூலநாதன்,
ஃபோல்ஸம், கலிஃபோர்னியா

*****


தென்றல் படித்தேன். மனம் மகிழ்ந்தேன். பயனுள்ளதாக இருந்தது. தரமான பதிவுகள், அனைத்தும் அருமை. ஆபாசம் இல்லை. நல்ல இதழ் வழங்கிவருவது பாராட்டுக்குரியது .

நா. உமாமகேஸ்வரி,
ரெட்மண்ட், வாஷிங்டன்

*****


தென்றல் ஆகஸ்ட் இதழில் 'மேலோர் வாழ்வில்' பகுதியில் வ.வே.சு. ஐயர் பற்றிய அருமையான கட்டுரையைப் படித்து மகிழ்ந்தேன். மறக்கப்பட்ட மகரிஷியின் வரலாற்றைத் தேடித் தந்தமைக்கு நன்றி. வரும் இதழ்களில் அவரது பன்முகத் தியாகங்களையும் தொகுத்து வழங்குவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மகரிஷியின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு, கம்பராமாயண ஆராய்ச்சி, தமிழ்ச் சிறுகதை முன்னோடி, தேசபக்தி, எழுதாத தலையங்கத்திற்காகச் சிறை சென்றது, பாண்டியில் பாரதியாருடனான தொடர்பு, பத்திரிகைப் பணி, லண்டன் கடிதங்கள், வாஞ்சிநாதனுக்குக் கொடுத்த பயிற்சி, சேரன்மாதேவி குருகுலம் அமைத்தது, ஐயர்மீது எழுப்பப்பட்ட அவதூறு, வரதராஜுலு நாயுடு அதற்காகப் பின்னர் வருந்தியது, ரா.அ. பத்மநாபன் மற்றும் சுத்தானந்த பாரதியின் மகரிஷி வரலாறு என அனைத்தையும் பற்றி விவரமாக எழுத வேண்டுகிறேன். அமெரிக்கத் தமிழர்கள் தெரிந்துகொள்ளட்டும்.

கே. வைத்யநாதேஸ்வரன்,
ஃபோல்ஸம், கலிஃபோர்னியா

*****


தென்றல் வாசித்தேன். சாய் ஷ்ரவணத்தின் நேர்காணல், ஐசக் அருமைராஜனின் கதை, அன்புள்ள சினேகிதியே எல்லாம் வாசித்து முடித்தபோது மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. காரணம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் 'தென்றலின்' பொலிவு குன்றாமல் இருக்கிறது. செம்மை கூடியிருக்கிறது. எல்லாத் தரப்பினருக்கும் தென்றல் சுகமளிக்கிறது.

இராம. வயிரவன்,
ஆல்பனி, நியூ யார்க்.

© TamilOnline.com