பாரதி சுராஜ்
பாரதி ரசிகர்களால் அன்போடு 'பாரதி சுராஜ்' என அழைக்கப்படும் சௌந்தர்ராஜன் (92) சென்னை நங்கநல்லூரில் காலமானார். வறிய குடும்பத்தில் பிறந்த இவர் துவக்கக் கல்வியை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பயின்றார். உயர்நிலைக் கல்வியை முடித்ததும் சென்னை லயோலா கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். அரசு பதிவுத் துறையில் வேலை கிடைத்தது. இளவயதிலேயே எழுத்தார்வம் கொண்டிருந்தார். சுதேசமித்திரன், சிவாஜி, வெள்ளிமணி, தினமணிகதிர் எனப் பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. நகைச்சுவை உணர்வு மிக்கவர். தமிழின் மீதும் பாரதியின் மீதும் அளவற்ற பற்றுக்கொண்டு இயங்கி வந்த சௌந்தர்ராஜனுக்கு 'பாரதி சுராஜ்' என்று பெயர் சூட்டியவர் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு. திருலோக சீதாராமின் சிவாஜி இதழ் நடத்திய பரிசுப் போட்டியில் பங்கேற்றுச் சிறப்புப் பரிசு பெற்றார். அதில் தொடர்ந்து பல நகைச்சுவைத் தொடர்களை எழுதியிருக்கிறார். பின்னர் இவரது ஆர்வம் முழுக்க பாரதியின் மீது திரும்பியது. நண்பர்களுடன் இணைந்து சென்னை சைதாப்பேட்டையில் 'பாரதி கலைக்கழகம்' அமைப்பைத் தொடங்கினார். பரலி சு. நெல்லையப்பர், நாரண. துரைக்கண்ணன் உள்ளிட்டோர் பாரதி கலைக்கழகத்திற்குத் துணை நின்றனர். பதவி உயர்வு அல்லது பணி மாறுதல் காரணமாக வேறெங்கும் சென்றுவிட நேருமோ, பாரதி பணிகளைத் தொடர முடியாதோ என்றெண்ணி இவை எதுவுமே வேண்டாமென்று எழுதிக் கொடுத்துத் தன் பணியைத் தொடர்ந்தார். அந்த அளவுக்குப் பாரதியின் மீது இவர் பற்றுக் கொண்டிருந்தார்.

பாரதி கலைக்கழகம் மூலம் நூற்றுக்கணக்கான கவிஞர்களை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இளையவன், இலந்தை சு. ராமசாமி, க. ரவி, சுகி. சிவம், தேவநாராயணன், இளங்கார்வண்ணன், ஹரிகிருஷ்ணன், மதுரபாரதி, வ.வே.சு., இசைக்கவி ரமணன், குமரிச் செழியன், நங்கை சிவன் என பாரதி கலைக்கழகத்தில் அரங்கேறிய, பட்டை தீட்டப்பட்ட கவிஞர்களின் பட்டியல் வெகு நீளமானது. அவர்களில் பலருக்கு 'கவிமாமணி' பட்டம் அளித்தும் சிறப்பித்தார். மாதந்தோறும் கவியரங்குகளை இல்லங்களில் அறுசுவை விருந்தோடு ஒரு விழாவைப் போல நடத்தினார். கவியரங்கங்களில் நல்ல கவிதை வரிகள் வாசிக்கப்படும்போது, கண்மூடி, கையை உயர்த்தி “ஆஹா, ஆஹா” என்று சிலாகிக்கும் இவரது ரசனை காணற்கரிய ஒன்றாகும்.

தினமணியில் இவர் எழுதிய நூல் மதிப்புரைகள் மிகவும் குறிப்பிடத்தகுந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களுக்கு மதிப்புரை எழுதியுள்ளார். கவிதை நூல்கள் சிலவற்றையும் எழுதியுள்ளார். வானவில் பண்பாட்டு மையத்தின் முதல் 'பாரதி விருது' இவருக்குத்தான் வழங்கப்பட்டது. பாரதி இளைஞர் சங்கத்தாரின் 'பாரதி பைந்தமிழ்ச் செல்வர்' விருது, கம்பன் அடிப்பொடி சா. கணேசன் விருது உட்படப் பல விருதுகளும், கௌரவங்களும் பெற்றவர். தன் வாழ்நாள் முழுவதும் எண்ணம், செயல், சிந்தனை என அனைத்தும் பாரதிக்கே அர்ப்பணித்து வாழ்ந்த பாரதி சுராஜ், பாரதி அன்பர்களால் என்றும் மறக்கப்படக் கூடாதவர்.

© TamilOnline.com