அடல் பிஹாரி வாஜ்பாயி
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயி (94) டெல்லியில் காலமானார். இவர், டிசம்பர் 25, 1924 அன்று, குவாலியரில், கிருஷ்ணா தேவி - கிருஷ்ண பிஹாரி வாஜ்பாயி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை பள்ளி ஆசிரியர். ஆரம்பக் கல்வியை உள்ளூரில் பயின்ற வாஜ்பாயி, விக்டோரியா கல்லூரியில் இளங்கலை பயின்றார். ஹிந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் மூன்றிலும் தேர்ந்தவரானார். சிறு வயதிலிருந்தே பேச்சுத்திறன் மிக்கவரான வாஜ்பாயி, கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில், அரசியலில் முதுகலைப் படிப்பை முடித்தார். ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகளில் இணைந்து சமூகப் பணிகளை முன்னெடுத்தார். 1939ல் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் உறுப்பினரானார். சமூக சேவையிலும் மக்கள்நலப் பணிகளிலும் முழுமூச்சாக ஈடுபட்டார். அதற்குத் திருமணம் தடையாக இருக்கும் எனக் கருதி மணம் செய்து கொள்ளவில்லை. நண்பர் தீன்தயாள் உபாத்யாயாவின் ஆலோசனையின் படி சில பத்திரிகைகளிலும் சில காலம் பணியாற்றினார்.

1942ல் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். சில வாரங்கள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். பின் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். அப்போது இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி நடந்த கலவரத்தினால் சட்டப்படிப்பு பாதியில் நின்று போனது. 1948ல் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடைசெய்யப்பட்டது. தீன்தயாள் உபாத்யாயாவின் ஆலோசனைப்படி 1951ம் ஆண்டு சியாம பிரசாத் முகர்ஜி தொடங்கிய பாரதீய ஜனசங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். (அதுவே பின்னர் பாரதிய ஜனதா கட்சியாக உருப்பெற்றது). ஜனசங்கத்தின் வடக்கு மண்டலத் தேசியப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். சியாம பிரசாத் முகர்ஜி மறைந்தபின், ஜனசங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை தீன்தயாள் உபாத்யாயா ஏற்றுக்கொண்டார். 1957ம் ஆண்டு நடந்த தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் பல்ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் வாஜ்பாயி. மக்களவை உறுப்பினராகத் திறம்படப் பணியாற்றினார். தனது பேச்சாலும், பணியாலும் பலமுறை நேருவால் பாராட்டப் பெற்றார். தீன்தயாள் உபாத்யாயாவின் மறைவுக்குப் பின் 1968ம் ஆண்டில் ஜனசங்கத்தின் தலைமை ஏற்றார். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சி வென்று ஆட்சி அமைத்தபோது, மொரார்ஜி தேசாய் பிரதமரானார். வாஜ்பாயி வெளியுறவுத்துறை அமைச்சரானார். ஆனால், அந்த ஆட்சி இரண்டாண்டுக் காலமே நீடித்தது.

1980ல் ஜனசங்கம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை ஒருங்கிணைத்து பாரதீய ஜனதா கட்சியைத் தோற்றுவித்தார். அதன் முதல் தலைவரும் அவரே! 1996ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆனால், 13 நாட்களே அந்த ஆட்சி நீடித்தது. 1998ல் நடந்த தேர்தலிலும் வென்று பிரதமரானார். அந்த ஆட்சியும் 13 மாதங்களே நீடித்தது. 1999ல் நடந்த தேர்தலில் பா.ஜ.க. வென்றது. வலிமையான பிரதமராகப் பதவியில் அமர்ந்தார் வாஜ்பாயி. அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் எனப் பல மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்தார். இந்தியாவை இன்று குறுக்கும் நெடுக்குமாய் இணைக்கும் 'தங்க நாற்கரம்' எனப்படும் அதிவேக விரைவு வழித்தடங்களுக்கு வித்திட்டவர் அவரே! அண்டை நாடுகளுடன் நல்லிணக்கம், சர்வதேச உறவுகளை மேம்படுத்துவது, தனியார் நிறுவனங்கள் மற்றும் அன்னிய முதலீடு ஊக்குவிப்பு போன்ற பல திட்டங்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார். இந்திய ராணுவத்தை முழுமையாக பலப்படுத்தினார். அவர் ஆட்சிக்காலத்தில்தான் செயற்கைக் கோள்களின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு 'பொக்ரான் அணுகுண்டு சோதனை' நடத்தப்பட்டது. கார்கில் போரின் வெற்றிக்கு இவரது ராஜதந்திரமே காரணம். விஞ்ஞான வளர்ச்சியிலும் மிகுந்த ஆர்வம் காட்டிப் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். இந்தியாவின் இன்றைய வெற்றிகரமான விஞ்ஞான வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் வாஜ்பாயி.

கலைகளின் மீது பேரார்வம் கொண்டிருந்த வாஜ்பாயி சிறந்த கவிஞரும் கூட. 1988ல் நோயுற்றபோது அவர் எழுதினார்: “என் முயற்சி காவியம் ஆகாமல் போகலாம், ஆனால் அது என் வாழ்க்கையின் ஆவணம்” என்று. அவர் கேட்ட கவிதைக் கேள்வி ஒன்று மறக்கமுடியாதது: “மரணத்தின் வாழ்நாள் என்ன? சில கணங்கள் கூடக் கிடையாது”. எமர்ஜன்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டபோது அவர் எழுதிய கவிதைகளில் தன்னைக் 'கைதிக் கவிராயர்' என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுக் கொண்டார்.

அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வெளியாகியுள்ளன. ஹிந்தியில் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்சனை போன்றவற்றால் 2005ம் ஆண்டுக்குப் பின் அரசியலிலிருந்து விலகி ஓய்வெடுத்து வந்த வாஜ்பாயி, ஆகஸ்ட் 16, 2018 அன்று காலமானார்.

வலிமைமிக்க இந்திய தேசத்தை உருவாக்கப் பாடுபட்ட சிற்பியான வாஜ்பாயிக்கு தென்றல் அஞ்சலி செலுத்துகிறது.

© TamilOnline.com