தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும், ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்தவரும், இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் முத்திரை பதித்தவருமான திரு. மு. கருணாநிதி (94) அவர்கள் சென்னையில் காலமானார். இவர், திருவாரூரை அடுத்த திருக்குவளையில் ஜூன் 3, 1924ல் முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. பெற்றோர் இருவருமே யோகி கருணையானந்த பூபதியின் சீடர்கள். பெரியநாயகம், சண்முகசுந்தரம் என்ற இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே ஆண் குழந்தைக்கு தங்கள் குருவின் நினைவாகக் கருணாநிதி என்று பெயர் சூட்டினர். இளவயதில் கருணாநிதியும் ஆன்மிகச் சூழலிலேயே வளர்ந்தார். திருவாரூர் பள்ளியில் சேர்ந்து உயர்நிலைக் கல்வி பயின்றார். ஆனால், வளரும் பருவத்தில் அவருக்கு நாத்திகச் சிந்தனை பிறந்தது. அப்போது பிரபலமாக இருந்த நீதிக்கட்சியின் கொள்கைகள் மீது ஆர்வம் வளர்ந்தது. பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சால் மிகவும் ஈர்க்கப்பட்டார். தன்னையொத்த மாணவர்களை இணைத்து 'மாணவர் மன்றம்' என்ற ஒன்றை உருவாக்கி அதன்மூலம் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார். பள்ளி நாட்களிலேயே ஹிந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடினார். அப்போது இவருக்கு வயது 13.
அக்காலகட்டத்திலேயே அறிஞர் அண்ணா நடத்திய 'திராவிட நாடு' போன்ற பத்திரிகைகளுக்கும் எழுதத் துவங்கிவிட்டார். 'மாணவநேசன்' என்ற இதழையும் நடத்தினார். அதுவே பின்னர் 'முரசொலி' ஆனது. கருணை ஜமால் அதனை அச்சிட உதவினார். 'முரசொலி' மாத இதழ்மூலம் 'கருணாநிதி' என்ற பெயர் பிரபலமானது. தமிழ்நாடு மாணவர் மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதுதான் அவரது முதல் தலைமைப் பதவி. தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் அறிமுகம் ஆகினர். அண்ணா போன்றோரது ஊக்குவிப்பால் தமது சமூகப் பணிகளை மிகத் தீவிரமாகத் தொடர்ந்தார். பெரியார் ஈ.வெ.ரா. காங்கிரஸிலிருந்து விலகி திராவிடர் கழகம் துவங்கியபோது அண்ணா, கருணாநிதி போன்றோர் அதில் இணைந்து பணியாற்றினர். பின்னர் அண்ணா அதிலிருந்து விலகி 'திராவிட முன்னேற்றக் கழகம்' ஆரம்பித்தபோது கருணாநிதியும் அதில் தன்னை இணைத்துக் கொண்டார். அண்ணாவின் மனதிற்குகந்த தம்பியாக இருந்தார்.
தமிழகம் முழுவதும் பயணம் செய்து கழகப் பணிகளை முன்னெடுத்தார். கூடவே தனது திரைப்பட வசனங்களாலும் மக்களிடையே சமூக சிந்தனைகளை மேலோங்கச் செய்தார். 1952ல் வெளிவந்த 'பராசக்தி' திரைப்படம் இவரை நாடறியச் செய்தது. இவரது படைப்புகள் மக்களிடையே இவர் 'கலைஞர்' என அன்போடு அழைக்கப்படக் காரணமாக அமைந்தன.
1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1967ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தி.மு.க. 138 இடங்களைக் கைப்பற்றி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரானார். அதுவரை தனியார் வசம் இருந்த பேருந்துகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அண்ணாவின் மறைவிற்குப் பின் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், முதல்வராகவும் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 45. அதுமுதல் அவருக்கு அரசியலில் ஏறுமுகமே.
மனிதர்களை மனிதர்களே வைத்திழுக்கும் கைரிக்ஷா ஒழிப்பு, குடிநீர் வடிகால் வாரியம், குடிசை மாற்று வாரியம், கிராமங்களுக்கு முழுமையான மின்சார வசதி, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம், காவல்துறை ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு தனித்துறை, விவசாயக் கல்லூரி, அரசு ஊழியர்கள் குடும்பநலத் திட்டம், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம், விதவைப் பெண்களுக்கு மறுமண உதவித்திட்டம், பெண்கள் சுய உதவிக்குழு, சமத்துவபுரம், உழவர் சந்தை எனப் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து தமிழகம் உயரக் காரணமாக அமைந்தார். தானும் ஓர் எழுத்தாளர் என்பதால் வறுமையில் வாடிய எழுத்தாளர்கள் சிலரது நூல்களை நாட்டுடைமையாக்கி அவர்களின் குடும்பத்தினருக்கு உதவினார்.
தனது வாழ்நாளில் பல போராட்டங்களையும் கடும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்ட கருணாநிதி, பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் செயல்படக் கூடிய தலைவராகவே இருந்தார். ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தபோதும் மக்களுக்கென உழைத்தார். திரைப்படக் கதாசிரியர், நாவலாசிரியர் மட்டுமல்லாது சிறந்த எழுத்தாளராகவும் அறியப்பட்டவர். 'புதையல்', 'வான்கோழி'. 'சுருளிமலை', 'ஒரு மரம் பூத்தது', 'ஒரே ரத்தம்', 'ரோமாபுரிப் பாண்டியன்', 'தென்பாண்டிச் சிங்கம்', 'பாயும்புலி பண்டாரக வன்னியன்', 'பொன்னர் சங்கர்' போன்றவை இவரது நாவல்கள். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். 'சங்கத்தமிழ், 'குறளோவியம்', 'தொல்காப்பிய உரை', 'இனியவை இருபது' எனப் பல இலக்கியப் படைப்புகளையும் தந்துள்ளார். 'முரசொலி'யில் இவர் எழுதிவந்த கட்டுரைகள், எதிர்க் கட்சியினராலும் வாசிக்கப்படுபவையாக இருந்தன. தன் வாழ்க்கை நிகழ்வுகளை 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக எழுதி வெளியிட்டிருக்கிறார். இறுதிக் காலத்தில் 'ராமாநுஜர்' தொலைக்காட்சித் தொடருக்கு வசனம் எழுதினார். அதுவே அவரது இறுதிப் படைப்பானது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, தொண்டைத் தொற்று காரணமாக மருத்துவமனையில் காலமானார்.
தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் கலைஞர் மு. கருணாநிதி என்பதில் சற்றும் ஐயமில்லை. |