மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 8)
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தாள். என்ரிக்கே மரபணுவின் இரட்டைச் சுருள் வடிவம், மரபணுத் தொடர்கள் (chromosomes), இனப்பெருக்கத்தில் அவை இரண்டாகப் பிரிந்து தந்தை, தாயின் பாதிகள் சேர்ந்து குழந்தையின் குரோமசோமாக உருவாகின்றன என்பவற்றை விளக்கினார். க்ரிஸ்பருக்கு முந்திய மரபணுப் பொறியியல் நுட்பங்களையும் அவற்றின் வரம்புக் குறைபாடுகளையும் (limitations) விளக்கினார். மரபணுக்கள் எவ்வாறு புரதங்களைத் தயாரிக்க உயிரணுக்களுக்கு ஆணையிடுகின்றன, அதில் உண்டாகும் ஓரெழுத்தைக் கூட மாற்றி பரம்பரை நோய்களையும் நிவர்த்திக்க முடியும் என்றார். மேலே பார்க்கலாம்.....

*****


வைரஸ்கள் வழியே செய்யும் மரபணு மாற்றங்கள் பெருமளவில் ஒவ்வொரு முறையும் சரியாகச் செய்யமுடியாத நிலையில் க்ரிஸ்பர் நுட்பம் ஒரு மரபணுவின் தவறிய ஒரு மூன்றணு-எழுத்தை மட்டுமே கூட பெருமளவில் மாற்றி ஒவ்வொரு முறையும் சரிசெய்யக் கூடியது, அதனால் பரம்பரை (genetically inherited) நோய்களைக் கூட நிவர்த்திக்கக் கூடும் என்று என்ரிக்கே கூறியதும், அந்த நுட்பத்தின் செயல்பாட்டு விவரங்களை விளக்குமாறு சூர்யா கேட்டுக்கொண்டார்.

என்ரிக்கே உற்சாகமாகத் தொடர்ந்தார். "முதல்ல க்ரிஸ்பர்னா என்னன்னு தெரியணும். அது ஒரு வார்த்தையில்லை. அது Clustered Regularly Interspaced Short Palindromic Repeats என்ற உயிர்வேதியியல் (BioChemistry) பெயரின் முதலெழுத்துச் சுருக்கம்."

கிரண் துள்ளினான். "ஓ! ஓ! எனக்குப் புரியுது. ரேடார், லேஸர் கூட வார்த்தைகள் இல்லை, எழுத்துச் சுருக்கங்கள்தானே? அதே போலத்தான் போலிருக்கு!"

"ரொம்பச் சரி கிரண். கரெக்டா புடிச்சே! அது சில பாக்டீரியா உயிரணுக்களில் கண்டுபிடிக்கப் பட்ட முன்னும் பின்னும் படித்தால் ஒரே மாதிரி வரக்கூடிய எழுத்துத் தொடர்கள். இத்தகைய தொடர்களைக் கொண்ட மரபணுக்களுக்கு CRISPR associated Systems (CAS) என்று பெயரிட்டார்கள். அவற்றில் ஒருவகை CAS9 என்பது.

இந்த க்ரிஸ்பர்-CAS9 மரபணுக்களுக்கு ஒரு சிறப்புப் பண்பு உள்ளது. இந்த வகையால், உயிரணுக்களுக்குள் புகுந்து, ஒரு குறிப்பிட்ட மரபணு வார்த்தையைக் கண்டுபிடித்து, நுண்ணிய மாற்றங்களைச் செய்ய இயலும். நான் எளிமைக்காக இனிமேல் இந்த க்ரிஸ்பர்-CAS9 வகையைக் க்ரிஸ்பர் என்று மட்டுமே சுருக்கிக் குறிப்பிடுகிறேன்."

ஷாலினி குறுக்கிட்டாள். "ஓ, எனக்கு இப்போ புரியுது. நான் படிச்சதையும் நீங்க சொன்னதையும் வச்சுப் பார்த்தா, இந்தவகை க்ரிஸ்பர் மரபணுக்களுக்கு மற்ற மரபணுக்களை வெட்டவும், திரும்பி ஒட்டவும், மேலும் மரபணு எழுத்துக்களை ஒவ்வொன்றைக் கூட மாற்றவும், இடைசேர்க்கவும் முடியும். அதானே?!"

என்ரிக்கே கை தட்டினார். "அஃப் கோர்ஸ் ஷாலினி! கச்சிதமா சொல்லிட்டீங்க!"

சூர்யா, "ரொம்ப நன்றி என்ரிக்கே. இப்ப எனக்கும் புரியுது. இந்தக் குறிப்பிட்ட க்ரிஸ்பர் வகையின் முக்கியத்துவத்தை ரொம்ப எளிதாப் புரியறா மாதிரி விளக்கிட்டீங்க. இப்போ இந்த வழிமுறையால என்ன மாதிரி மாற்றங்களை உருவாக்க முடியுதுன்னு விவரியுங்களேன்" என்றார்.

கிரண் இடைபுகுந்தான். "ஆஹாஹா! அந்த க்ரிஸ்பர் மரபணு வார்த்தைகளை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு வெட்டுது போலிருக்கு. சரியான ஜப்பானிய மீன் வெட்டற பெனிஹானா ஹோட்டல் சமையல்காரன் மாதிரி!" என்று கூறிவிட்டு, ஒரு மீனை மேலே தூக்கிப் போட்டுவிட்டு இரண்டு கைகளிலும் கத்திகளை ஏந்தி வெகுவேகமாக சுழற்றி சுழற்றி வீசி அந்த மீனைத் மெல்லிய துண்டுகளாக வெட்டியதுபோல் காட்டிவிட்டு, பவ்யமாகப் பலமுறை குனிந்து நிமிர்ந்தான்!

என்ரிக்கே கலகலவென சிரித்தார். ஷாலினியும் அடக்கமுடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கவே, சூர்யா முறுவலுடன் வினாவினார். "என்ன ஷாலு, என்ன அப்படி அடக்க முடியாமல் சிரிப்பு?"

தன் நேசத்துக்குரிய சூர்யா தன் செல்லப் பெயரால் கூப்பிட்டதால் தன்னுடன் மிக நெருங்கிவிட்டதாகக் கிளுகிளுப்படைந்த ஷாலினி கையை உயர்த்தி ஒரு கணம் பொறுத்திருக்குமாறு சைகை செய்துவிட்டு, சிரிப்பை அடக்கிக்கொண்டு, "அது ஒண்ணுமில்லை, கிரணுடைய ஆக்‌ஷனைப் பார்த்ததும், ஒரு க்ரிஸ்பர் உயரமான சமையல் தொப்பி போட்டுக்கிட்டு உயிரணுக்கும் புகுந்து மரபணு வாக்கியங்களை அந்த மீன்மாதிரி தூக்கிப் போட்டு கண்ட துண்டமா வெட்டினது மட்டுமில்லாமல் திரும்பி மாத்தி ஒட்டி வச்சுட்டு, பவ்யமா குனிஞ்சு வணங்கினா மாதிரி தோணிடுச்சு அதான்!" என்றாள்.

என்ரிக்கேயும், சூர்யாவும் பலமாகச் சிரித்து, கைதட்டிப் பாராட்டினர். சுதாரித்துக்கொண்ட சூர்யா வினவினார், "என்ரிக்கே, விஷயத்துக்கு வருவோம். இந்த நுண்ணிய மாற்றங்களால என்ன மரபணு நுட்ப முன்னேற்றங்கள் செய்ய முடியுதுன்னு விளக்குங்க."

என்ரிக்கே தலையாட்டி ஆமோதித்து விவரிக்கலானார். "நான் ஒரு உதாரணம் குடுத்தேன் இல்லையா, அந்த சிக்கிள் ஸெல் அனீமியா என்று? அது ஒருத்தருக்கு இருந்தா, அவருக்குச் சரிசெய்வது மட்டுமில்லாமல், அவருடைய சந்ததிகளுக்கும் வரக்கூடிய வாய்ப்பைக் குறைக்க அவரது உயிரணுக்களில் உள்ள மரபணுக்களில் அந்த மாறிய தவறான எழுத்தை சரிசெய்ய இந்தக் க்ரிஸ்பர் வழிமுறையைப் பயன்படுத்தலாம் அல்லவா?"

சூர்யா தலையாட்டி ஆமோதித்துத் தொடருமாறு சைகை செய்யவே என்ரிக்கே தொடர்ந்தார். "இம்மாதிரி, க்ரிஸ்பர் வழிமுறையில் மரபணுக்களை மாற்றுவதால், நம் மானிட குலத்துக்கே பலப்பல நற்பலன்களை அளிக்க முடியும். முதலாவதாக உணவுத் துறையைப் பார்ப்போம். மக்கள்தொகை உலகில் பெருமளவு வளர்ந்து வருகிறது. 2050 வருடத்தில் உலகில் ஒன்பது பில்லியனுக்கு மேல் இருக்கக்கூடும் என்பது நிபுணர்களின் கருத்து."

"அத்தனை பேருக்கும் உணவளிக்கணும்னா, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டியுள்ளது. உதாரணத்துக்குப் பால் உற்பத்தியைப் பார்ப்போம். ஆப்பிரிக்காவில் வெப்பப் பகுதியில் உள்ள பசுக்கள் மெல்லியதானவை; நிறையப் பால் கொடுப்பதில்லை. மேலை நாடுகளில் உள்ள ஹோல்ஸ்டீன் வகைப் பசுக்கள் புஷ்டியாக உள்ளன, நிறையப் பால் கொடுக்கின்றன. அதனால்..."

கிரண் இடைபுகுந்தான். "அதுக்கென்ன, ஹோல்ஸ்டீன் பசுக்களை நிறைய வளர்த்து ஆயிரக் கணக்குல ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினா சரியாப் போச்சு. இதுக்கெல்லாம் எதுக்கு மரபணு மாற்றம், ஆராய்ச்சின்னு குடைய வேண்டியிருக்கு?!"

என்ரிக்கே மறுத்துத் தலையாட்டினார். "அது அவ்வளவு எளிதல்ல கிரண். ஆப்பிரிக்க தட்பவெப்ப நிலை ஹோல்ஸ்டீன் பசுக்களுக்கு உகந்ததல்ல. மேலை நாடுகளிலிலிருந்து, ஆப்பிரிக்க மக்கள் தொகைக்குத் தேவையான அளவு அதிகம் பால் கறந்து அனுப்ப முடியாது. அதுனாலதான் மரபணு முயற்சி. ஸ்காட்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளுடன் கூட்டுமுயற்சி செய்து, ஆப்பிரிக்க பசுக்களின் பால் சுரக்கும் மரபணுக்களை ஹோல்ஸ்டீன் மரபணுக்களுக்கு இணையாகவும் மாற்றமுனைந்து அதற்கான மரபணு எழுத்து மாற்றங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். அதற்கு இணையாக, ஹோல்ஸ்டீன் பசுக்களின் தோலையும் ரோமத்தையும் ஆப்பிரிக்கப் பசுக்களைப் போல் மாற்றி அங்கு பிழைத்திருக்கும் மாதிரி உருவாக்கத் தேவையான மரபணு மாற்றங்களையும் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த இரண்டு மரபணு மாற்றங்களையும் க்ரிஸ்பர் முறையில் செய்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். கூடிய சீக்கிரமே அதற்குப் பலன் கிடைக்கும் என்று அதிக எதிர்பார்ப்பு உள்ளது."

கிரண் விரல் சொடுக்கிச் சிலாகித்தான். "அடி சக்கை! நான் சொன்ன மாதிரி ஹோல்ஸ்டீன் பசுக்களை அனுப்ப முயற்சிக்கிறாங்க, ஆனா அதுக்கு மரபணு மாற்றம் தேவைப்படுது. ஓகே, இப்ப புரியுது!"

என்ரிக்கே கூறினார். "நீ சொல்றது பாதி சரி, அவங்க ரெண்டு வகை பசுக்களையும் மாத்தறாங்க. இருந்தாலும் பரவாயில்லை உனக்கு B நிலை மதிப்பெண் குடுத்துடறேன்!"

ஷாலினி வினாவினாள். "அது சரி என்ரிக்கே, நோய் அகற்றல், உணவு உற்பத்தி அதிகரித்தல் ரெண்டு பத்தியும் சொன்னீங்க. ரொம்ப முக்கியமான விஷயங்கள்தான். ஆனா க்ரிஸ்பர் நுட்பம் இன்னும் பல பிரமாதமான முன்னேற்றங்களை அளிக்கும்னு சொல்றாங்களே அதுக்கு எதாவது உதாரணம் சொல்லமுடியுமா?"

என்ரிக்கே அதற்குக் கொடுத்த விடையை மேலே பார்க்கலாம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com