காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் ஆலயம்
தமிழ் நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது காரைக்குடி. திருச்சியில் இருந்து 90 கி.மீ. தூரத்திலும் மதுரையில் இருந்து 55 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

தலப்பெருமை
ஆதிசங்கரர் இத்தலம் வந்து கொப்புடை அம்மனை வழிபட்டார் எனக் கூறப்படுகிறது. 'கொப்பு'என்றால் 'கிளை' என்பது பொருள். மூலவர், உற்சவர் கொப்புடைய நாயகி அம்மன். தீர்த்தம், கல்லுக்கட்டி. தலவிருட்சம் வில்வமரம். ஒரு காலத்தில் இந்த இடம் முழுவதும் காரை மரங்கள் அடர்ந்து செழித்த வனப்பகுதியாக இருந்தது. இதைச் சீர்படுத்தி மக்கள் குடியேற வசதியாக நகர் அமைத்ததால் 'காரைக்குடி' எனப் பெயர் ஏற்பட்டது. இத்தலத்திற்குரிய கிராம தேவதையே கொப்புடைய நாயகி என்னும் கொப்புடையம்மன்.

செஞ்சை காட்டுப்பகுதியில், இக்கோயிலின் உபகோயிலான காட்டம்மன் கோவில் உள்ளது. இந்தக் காட்டம்மனின் தங்கையே கொப்புடை நாயகி. இக்கோயில் வரலாற்றின்படி கொப்புடையம்மனுக்குப் பிள்ளைகள் இல்லை. காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள். கொப்புடையம்மன் வரும்போது கொழுக்கட்டை முதலான உணவுப் பண்டங்களைத் தானே செய்து குழந்தைகளுக்குக் கொடுக்க எடுத்து வருவாள். ஆனால், காட்டம்மன் தனது சகோதரி மலடி, அதனால் குழந்தைகளைப் பார்க்கக்கூடாது என நினைத்து, அவர்களை ஒளித்துவைத்து விடுகிறாள். இதனை அறிந்த கொப்புடையம்மன் ஒளித்துவைத்த குழந்தைகளைக் கல்லாக்கி, பின்னர் கோபத்தோடு அங்கிருந்து காரைக்குடி வந்து தெய்வமாக அமர்ந்து விட்டாள் என்று கூறப்படுகிறது.

கொப்புடையம்மன் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன், ஜ்வாலை கிரீடத்துடன் பஞ்சலோக உற்சவத் திருமேனியில் காட்சி தருகிறாள். அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாகவும் இருப்பது கொப்புடை நாயகி கோயிலில் மட்டும்தான். அம்மனின் வலது கை அபயக் கரமாக, சூலம் தாங்கியும், இடது மேல்கை பாசமேந்தியும், இடது கீழ்க்கை கபாலம் தாங்கியும் அமைந்துள்ளன.

அம்மன் கிழக்குப் பார்த்த துர்க்கையாக ஸ்ரீசக்கரத்தின் மீது இருப்பதால் மிகவும் சக்தியுள்ளவளாக இருக்கிறாள். காளி, துர்க்கை போன்ற தெய்வங்கள் வடக்கு நோக்கி வீற்றிருப்பர். ஆனால், இங்கு அம்மன் துர்க்கை அம்சத்துடன், கிழக்குப்பார்த்து அமர்ந்து அருள்பாலிக்கிறாள். எனவே இவள் கல்வி, செல்வம், வீரம் என மூன்றையும் வாரி வழங்கும் வரப்பிரசாதியாய் இருக்கிறாள். கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் செவ்வாய் பெருந்திருவிழா, தேரோட்டம் மிகவும் விசேஷமானது. சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை தொடங்கி வைகாசி முதல் வாரம் முடிய பத்து நாட்கள் வெகு சிறப்புடன் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது சித்திரை மாதம் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளில், மூன்றாவது செவ்வாயன்று கொப்புடையம்மனுக்குப் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.

தேர்த் திருவிழாவில் எட்டாம் நாள் திருவிழாவில் காலையில் அம்மன் தேரில் ஏறி, பிற்பகலில் புறப்பாடு நடக்கிறது. தேர் புறப்பட்டு கண்மாய் வழியாகச் சென்று மாலையில் காட்டம்மன் கோவிலில் எழுந்தருளும். ஒன்பதாம் நாள் திருவிழாவில் அங்கிருந்து புறப்பட்டு ஆலய நிலைக்குத் தேர் வந்து சேரும். தேர் வரும் பாதையில் கண்மாய் இருப்பதால், சில சமயம் கண்மாயில் நீர் இருந்தால், நீரில் செல்லவேண்டி வரும் என்பதால் முன்னோர்கள் வைரத்தேர் செய்யாமல் சட்டத் தேராகச் செய்துள்ளனர்.

சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரித் திருவிழா, ஆடிச் செவ்வாய், மார்கழித் திருப்பள்ளியெழுச்சி, பங்குனி தாராபிஷேகம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திரளாக வந்து பக்தர்கள் அம்மனை தரிசிக்கின்றனர். கொப்புடையம்மனை நம்பிக்கையோடு வணங்கினால் தீராத நோய்களைத் தீர்த்து வைக்கிறாள். விவசாயம் செழிக்கவும், தொழில் விருத்திக்காகவும், கல்யாண வரம், குழந்தை பாக்கியம் வேண்டியும் பிரார்த்தித்தால் அது நிச்சயம் நிறைவேறுகிறது எனப் பலனடைந்தவர்கள் சொல்கின்றனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் மரம் ஒன்றும் உள்ளது. சப்தகன்னிகைகளை முருகன், வள்ளி, தெய்வானையுடன் தரிசிக்கலாம்.

சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com