பாண்டவர்கள் வனவாசம் புகுந்த கோலத்துக்கான பொருளை திருதராஷ்டிரனிடத்திலே விதுரர் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்ததையும், அந்தச் சபையில் அப்போது நாரதர் பல முனிவர்கள் புடைசூழத் தோன்றி, "இதற்குப் பதினான்காவது வருடத்தில் துரியோதனன் செய்த கொடுமையாலும், பீம அர்ச்சுனர்களுடைய வலிமையாலும் கௌரவர்கள் அழியப் போகிறார்கள்" என்று சொன்னதையும் பார்த்தோம். இப்படிப்பட்ட ஒரு சொல்லை நாரதரே தோன்றிச் சொன்னதும் கௌரவர்கள் பக்கத்தில் அதுவரையில் தோன்றியிராத அச்சம் பிறந்தது. "பிறகு துரியோதனனும் கர்ணனும் சுபல புத்திரனான சகுனியும் துரோணரைத் தஞ்சமாக நினைத்தனர்; ராஜ்யத்தையே அவருக்கு ஒப்புவித்தனர்" என்கிறது பாரதம். (ஸபா பர்வம், அனுத்யூத பர்வம், அத். 102; பக். 337). "நீங்களே தஞ்சம். இந்த அரசையும் எங்களையும் உங்களிடத்தில் ஒப்புவிக்கிறோம்" என்று துரியோதனனும் கர்ணனும் சகுனியும் துரோணரிடத்தில் சொல்வார்களென்றால் அங்கே விளைந்திருந்த அச்சத்தின் அளவைப் புரிந்துகொள்ளலாம். இதுவரையில் அவர்கள் துரோணரிடத்திலே 'தஞ்சம்' என்று புகுந்ததில்லை. அதிகபட்சமாகப் போனால் பீஷ்மரை நாடுவார்கள். பீஷ்மரிடத்திலேயே அவர்கள் குறைந்தபட்சம், முறையிட்டதுகூடக் கிடையாது. அப்படியிருக்க இப்போது, 'தங்களுக்கு வித்தை கற்பித்த ஆசான்' என்ற அளவுக்குக்கூட மதித்திராத துரியோதனனும் கர்ணனும் இப்போது துரோணரிடத்தில் தஞ்சம் என்று புகுந்தனர்; அதற்கும் மேலே, "இந்த அரசையே உம்மிடத்தில் ஒப்புவிக்கிறோம்" என்று அவர்கள் சொன்னதாகப் பாரதம் சொல்கிறது.
பொதுவாக, 'பீஷ்மர் எந்தப் பக்கத்தில் இருக்கிறாரோ அந்தப் பக்கத்தில்தான் நானிருப்பேன்' என்ற நிலைப்பாட்டை உடையவர் துரோணர். இப்படி அவர் உத்தியோக பர்வத்தில் துரியோதனனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் சொல்லக் காண்கிறோம். ஆனால், அதற்குப் பதின்மூன்று வருடங்களுக்கு முற்பட்ட இந்தத் தருணத்தில் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: "அப்போது துரோணர் பொறாமைக்காரனான துரியோதனையும் துச்சாஸனனையும் கர்ணனையும் மற்றெல்லாப் பாரதர்களையும் பார்த்து, "பாண்டவர்கள் தேவர்களுடைய புத்திரர்களென்றும், கொல்லமுடியாதவர்களென்றும் பிராமணர்கள் சொல்லுகின்றனர். நானோ என்னைச் சரணமடைந்த திருதராஷ்டிர புத்திரர்களையும திருதராஷ்டிரனையும் என்னால் கூடியவரையில் அன்போடும் முழு மனதோடும் அனுசரித்திருப்பேன். விட மாட்டேன். ஆனால் தெய்வம் மிக்க வலிமையுடையது." ("Destiny is supreme") (வியாச பாரதம், மேற்படி இடம்.)
"நீங்கள் என்னைச் சரணடைந்திருக்கிற காரணத்தால் என்னால் உங்களைக் கைவிட முடியாது; அதற்குமேலே திருதராஷ்டிரர்வேறு இருக்கிறார். அவருக்கு மாறாகவும் என்னால் நடந்துகொள்ள முடியாது. ஆகவே உங்களுக்கு நான் அபயமளிக்கிறேன். உங்கள் பக்கத்திலேயே நிற்பேன். ஆனால் ஒன்று. பாண்டவர்கள் இப்போது தர்மத்தின் பேரிலே வனவாசத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிரமசரிய விரதம் முதலானவற்றை மேற்கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய வனவாச காலம் முடிந்ததும் பெருங்கோபத்துடனும் ஆற்றாமையுடனும் திரும்புவார்கள். அப்படித் திரும்பும் அவர்கள் தங்களுடைய பகையைத் தீர்த்துக்கொள்ளும் போது கௌரவர்களுக்குப் பெருந்துயரம் உண்டாகும்" என்று சொல்கின்ற துரோணர் இன்னொரு விஷயத்தையும் கவனத்துக்குக் கொண்டு வருகிறார். "துருபதனும் நானும் இளம்பருவத்தில் நட்புடன் இருந்தோம். அந்தச் சமயத்தில் அவன் சொன்ன வார்த்தைகளை நம்பி அவனிடத்தில் உதவிக்குப் போனபோது, அவன் அவமதித்துவிட்ட காரணத்தால் உங்களுக்குக் கற்பித்த வித்தைக்கு குருதட்சிணையாக, துருபதனை வென்று தரவேண்டும் என்று உங்களிடத்திலே சொன்னேன். பாண்டவர்கள் துருபதனை வெற்றிகொண்டார்கள். நானும் துருபதனுடைய அரசில் பாதியை எடுத்துக்கொண்டு, மீதிப் பாதியை அவனுக்குத் தந்து, 'இப்போது நாமிருவரும் சமம்' என்று சொன்னேன். இதைப் பெரிய அவமானமாகக் கருதிய துருபதன் யாகங்களைச் செய்தான். அதன் விளைவாக அவனுக்கு ஓமகுண்டத்திலிருந்து திரெளபதியும் திருஷ்டத்யும்னனும் மக்களாகத் தோன்றினார்கள்" என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வரும் துரோணர் சொல்கிறார்: "திருஷ்டத்யும்னன் மைத்துனன் என்ற சம்பந்தத்தினால் பாண்டவர்களால் கௌரவிக்கப் பெற்றவன். அவர்களுடைய விருப்பத்தைச் செய்ய ஊக்கமுள்ளவன்; அவனிடத்தில் எனக்குப் பயமுண்டாகி இருக்கிறது. அக்னி ஜ்வாலையின் நிறமுள்ளவனாகவும் வில்லையும் கவசத்தையும் அம்பையும் உடையவனாகவும் அக்னி பகவானால் அவன் கொடுக்கப்பட்டவன். எனக்கு மனிதத் தன்மை இருப்பதனால் அவனிடத்தில் இப்போது பெரிய பயம் இருக்கிறது." (மேற்படி இடம், பக். 338)
அதாவது, 'நான் உங்களுக்கு அபயம் அளிக்கிறேன். ஆனால் எனக்கே இங்கே திருஷ்டத்யும்னன் வடிவில் ஒரு எதிரி இருக்கிறான். என்னைக் கொல்லப் பிறந்தவன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அவனிடத்திலே எனக்கு அச்சமிருக்கிறது. ஏனென்றால் பாண்டவர்கள் எப்படி தேவர்களுடைய குமாரர்களோ அப்படியே இவன் அக்கினியின் குமாரன். இவனோ என்னைக் கொல்வதற்காகவே பிறந்தவன். போதாதற்கு, திரெளபதி இவனுடைய சகோதரி; இவன் பாண்டவர்களுடைய மைத்துனன். இப்படிப்பட்டவனோடு தேவ அம்சம் பொருந்தியவர்களான பாண்டவர்களும் சேர்ந்து யுத்தம் செய்யப் போகிறார்கள். இதெல்லாம் ஒருபுறமிருக்க, "ரதர்கள், அதிரதர்களின் எண்ணிக்கையில் முதல்வனும், இளமையிலிருப்பவனுமான அர்ஜுனனுடன் எனக்கு யுத்தம் நேருமாயின் என் பிராணன் போவது மிகவும் நிச்சயம்." (பாரதம், மேற்படி இடம்.) இந்த இடத்தில் துரோணருடைய பேச்சை 'என் பிரியத்துக்குரிய அர்ச்சுனனோடு எனக்குப் போர் உண்டாகுமாகில் நான் உயிரை விட்டுவிடுவேன்' என்று சொல்வதாகவும் கொள்ள இடமிருக்கிறது. ஆனால், இதே துரோணர்தான், அர்ச்சுனனுக்கு அஸ்திரப் பயிற்சியளித்த காலத்தில், "நீயும் நானும் எப்போதாவது போரில் எதிரெதிராக நிற்க நேரிட்டால், நீ என்மீது தயங்காமல் அம்பெய்யவேண்டும்" என்று சத்தியம் வாங்கியிருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொண்டால், 'எங்கள் இருவருக்கும் இடையில் போர் நேரிட்டால், நான் உயிரைவிடுவேன் என்பது நிச்சயம்’ என்ற பொருளிலேயே துரோணர் இங்கே சொல்கிறார் என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் கிசாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பின்படி, இங்கே துரோணர் அர்ச்சுனனுடனான போரைப் பற்றிப் பேசவில்லை; மாறாக திருஷ்டத்யும்னனுடன் போரிட்டால் 'நான் இறப்பது நிச்சயம்' என்று சொல்கிறார் என்றுதான் பொருள்படுகிறது. அதையும் பார்ப்போம்: Of celestial origin and resplendent as the fire, he was born with bow, arrows, and encased in mail. I am a being that is mortal. Therefore it is for him that I have great fear. That slayer of all foes, the son of Parshatta, hath taken the side of the Pandavas. I shall have to lose my life, if he and I ever encounter each other in battle.
இங்கே குறிக்கப்பட்டுள்ள Parshatta என்பது துருபதனுடைய இன்னொரு பெயர்தான். ஆகவே அவர் திருஷ்டத்யும்னனோடு நடக்கப் போகும் போரைத்தான் குறிப்பிடுகிறார் என்று புலனாகிறது. இதுவே பொருத்தமாகவும் இருக்கிறது. துரோணர் 'திருஷ்டத்யும்னன் தெய்வ அம்சம் கொண்டவன்; நானோ வெறும் மனிதன்' என்று சொல்வதை கவனத்தில் கொள்ளவேண்டும். He was born with bow, arrows, and encased in mail என்று ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகள் இரண்டிலும் சொல்லப்பட்டிருப்பதை கவனித்திருக்கலாம். கர்ணனைப் போலவே பிறக்கும்போதே இயற்கையான கவசத்துடன் பிறந்தவன்தான் திருஷ்டத்யும்னன்.
இதைத் தொடர்ந்து பின்வருமாறும் சொல்கின்றார்: "கௌரவர்களே! பூமியில் இதைக் காட்டிலும் பெருந்துயரம் வேறு என்ன இருக்கிறது? 'திருஷ்டத்யும்னன் துரோணருக்கு மிருத்யு' என்னும் சொல் எங்கும் பரவியிருக்கிறது. என்னைக் கொல்வதற்காகவே அவன் பாண்டவர்களால் ஆசிரயிக்கப்பட்டிருக்கிறான் என்று உலகத்தில் பிரசித்தி அதிகமாயிருக்கிறது. எனக்கு அந்த விபரீத காலம் உன் நிமித்தமாக வந்திருப்பது நிச்சயம். நீங்கள் உங்களுக்கான நன்மையைச் சீக்கிரம் செய்துகொள்ளுங்கள் இவ்வளவு செய்ததனால் ஒன்றும் செய்ததாகவில்லை. பனிக்காலத்திய பனைமர நிழல்போல இது சிறிதுநேரமுள்ள சுகந்தான். பெரிய யாகங்களைச் செய்யுங்கள். சௌக்கியங்களை அனுபவியுங்கள்; தானங்களை கொடுங்கள். இதற்குப் பதினான்காவது வருஷத்தில் பெரிய ஆபத்தை அடையப் போகிறீர்கள். துரியோதனா! இதைக் கேட்ட பிறகு உன் விருப்பம்போலச் செய். உனக்கு இஷ்டமிருந்தால் தர்மபுத்திரனோடு சந்தி செய்துகொள்." (மேற்படி இடம்.)
இதைக் கேட்ட திருதராஷ்டிரனுக்குப் பெருத்த அச்சம் ஏற்பட்டது. "விதுரா! போய்ப் பாண்டவர்களைத் திருப்பி அழைத்து வா. அவர்களுக்கு ஆயுதங்களும் தேர், காலாள் முதலிய படைகளைக் கொடுத்து சிறப்பித்து அனுப்புவோம்" என்றான். மறுசூதாடுவதற்குப் பாண்டவர்களைத் திருப்பி அழைத்துவர பிராதிகாமியை அனுப்பிய இவன், இப்போது விதுரரைப் போகச் சொல்கிறான்! விதுரர் போகவில்லை.
இது ஒருபுறமிருக்கட்டும். இனி நாம் வனவாசத்துக்குப் போயிருக்கும் பாண்டவர்களைத் தொடர்வோம். 'துரியோதனன் தனக்காகச் சகுனியைச் சூதாடச் சொன்னதைப் போல, தருமபுத்திரன் மட்டும் என்னைத் தனக்கு பதிலாகச் சூதாடச் சொல்லியிருந்தால், நான் ஜெயித்துக் கொடுத்திருப்பேன். அவன்தான் நான் சூதாட்ட மண்டபத்துக்குள்ளேயே வரக்கூடாது என்று பிரார்த்தித்துக் கொண்டு என்னைக் கட்டிப் போட்டுவிட்டானே" என்று ஒரு செய்தி Whatsapp-ல் அடிக்கடி வந்துகொண்டிருக்கிறது. இது உண்மைதானா, இதைப்பற்றிக் கிருஷ்ணன் என்னதான் சொன்னான் என்பதைப் பார்ப்போம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |