அழுகிய தக்காளியில் அன்பு!
அன்புள்ள சிநேகிதியே,

(இது வாசகர் கடிதம் அல்ல. இரண்டு வாரங்களுக்கு முன்பு என்னைப் பார்க்கவந்த தோழியின் வசைபாடல்.)

போன இதழில், ஒரு கணவன் ஏமாற்றிய பிறகு, வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறிய பெண்ணிற்கு, அந்தக் கணவனை எப்படிக் கண்டுபிடித்துப் பழிவாங்குவது என்று ஆலோசனை வழங்கி இருக்கவேண்டும். "எப்போதும் நாமேதான் அனுசரித்துக் கொண்டு போகவேண்டுமா? இந்தக் கெட்ட, கேடுகெட்ட மனிதர்களை ஏன் சும்மா விடுகிறோம்? உன்னுடைய ஆலோசனையே எனக்குப் பிடிப்பதில்லை. நாம் ஏன் பிறருக்கு மண்டியிட வேண்டும்? இது ஒரு அடிமை மனப்பான்மை. இப்படிப் பெண்கள் பொறுத்துப் பொறுத்தே இந்த ஆண்கள், பொறுப்பில்லாமல் பெண்களின் மனதைப் புரிந்துகொள்ளாமல் தங்கள் இஷ்டத்திற்கு இருக்கிறார்கள்" என்று பொரிந்து தள்ளினாள்.

நான் பொறுமையாகச் சிரித்துக்கொண்டே அத்தனை திட்டுக்களையும் வாங்கிக்கொண்டேன். உரிமை இருந்தால்தான் உண்மையைப் பேசமுடியும். உரிமை கொடுத்தால்தான், நமக்கு அந்த உண்மை கசந்தாலும் இனித்தாலும் ஜீரணித்து அனுபவிக்க முடியும். உண்மையான உறவு ஒரு அருமையான உணர்வு.

"உன் கணவருடன் பெரிதாகச் சண்டை போட்டுவிட்டாயா? இன்றைக்கு. மிகவும் எமோஷனல் ஆக இருக்கிறாய்?" என்று கேட்டேன். "ஆமாம். பின்ன என்ன? அந்தக் காலத்தில் அப்படி என்னைப் பைத்தியமாகக் காதலித்தான். சுற்றிச்சுற்றி வந்தான். என் மனிதர்களைப் பகைத்துக்கொண்டு இவனைத் திருமணம் செய்துகொண்டேன். என்னை நிறையப் பேர் விரும்பினார்கள். அன்புதான் முக்கியம் என்று இவனுக்குச் சம்மதித்தேன். அப்புறம் ஒரு வருடத்தில் மாறிப் போய்விட்டான். வேலை போய்விட்டது. குடிக்க ஆரம்பித்தான். நான் கருவுற்றபோது கூட எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எப்போதும் ஏதாவது வாக்குவாதம் செய்து கொண்டிருப்பான்.

"பிசினஸில் பணம் போடாதே" என்று சொன்னேன். பெரிய நஷ்டம். "கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து நல்ல வேலையைத் தேடிக்கொள்" என்று கெஞ்சினேன். குழந்தைகள் பிறந்து, வீடு, வேலை என்றே வாழ்க்கையை ஓட்டிவிட்டேன். என்னுடன் பேசுவதையே விட்டுவிட்டான். இப்போது எல்லாரும் ஏதோ படித்து ஒரு நிலைக்கு வந்துவிட்டார்கள். மூன்று மாதங்களுக்கு முன்னால் எனக்கு ஒரு சர்ஜரி நடந்தது. அடிக்கடி செக்-அப் போய்வந்து கொண்டிருக்கிறேன். இப்போது கொஞ்சம் பாசமாக இருக்கிறான். என்ன பிரயோஜனம்? வாழ்க்கை முடிந்து போகும் நிலையில் இவன் காட்டும் பரிவு எனக்கு இதமாக இல்லை.

உன்னிடம் நிறைய விஷயம் சொன்னதில்லை. அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன். நேற்று என்னுடன் "டாக்டர் அப்பாயின்ட்மென்டுக்கு வரட்டுமா?" என்று கேட்டான். "இத்தனை நாள் இல்லாத கடமை உணர்வு, பாசம் இப்போது வேண்டாம்" என்றேன். உன்னைப் பார்க்கக் கிளம்பிய போதுகூட, "எப்படி அவ்வளவு தூரம் டிரைவ் செய்துகொண்டு போவாய்? நான் வருகிறேன்" என்றான். எனக்கு ஒரே வெறுப்பு. நான் நன்றாகக் கத்திவிட்டேன். அவன் கோபித்துக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டான். என்னால் கீழே இறங்கி பறங்கிக்காய் பறித்து எடுத்துக் கொண்டுவர முடியவில்லை. புதினா பறித்துக் கொண்டுவர முடியவில்லை. வீட்டில் இருந்த தக்காளியை மட்டும் கொண்டுவந்தேன். நான் உன்னைப் பார்க்க, கறிகாய் பறிக்கப் போகிறேன் என்று அவனுக்குத் தெரியும். இருந்தும் பார், கவலைப்படவில்லை. உன் நட்பைப் பெரிதாக மதிப்பவன் என்று பேர். பார் இப்படி இருக்கிறான். நான் உடம்பாலும் மனதாலும் நொந்து போயிருக்கிறேன். உன்னிடம் எல்லாவற்றையும் கொட்டிவிட்டேன். இப்பொழுது உன்னைப்பற்றிக் கேட்கிறேன், எப்படி இந்த இழப்பைத் தாங்கிக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டாள்

"என்னைப்பற்றிக் கவலைப்படாதே. கடவுள் என் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கவில்லை. கையில் குழந்தைபோல் ஏந்திக்கொண்டு போகிறார். அதனால் சிரிக்கிறேன்; சிணுங்குகிறேன்; அழுகிறேன்; எல்லாம் செய்கிறேன். மனதில் வலியால் ஏற்படும் குப்பைகளை அவ்வப்போது குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறேன்" என்றேன்.

அவள் கொண்டு வந்திருந்த தக்காளிகளை அந்த காகிதப் பையிலிருந்து வெளியில் எடுத்தேன். "அடடே ரெண்டு மூணு அழுகிப் போய்விட்டது. நான் உனக்காக எடுத்து வைக்கும்போது சரியாகப் பார்க்கவில்லை. இதோ பார், இந்த மஞ்சள் தக்காளி அவ்வளவு இனிப்பாக இருக்கும். இந்தப் பச்சைத் தக்காளிகளை இரண்டு, மூன்று நாள் கழித்து பயன்படுத்து" என்று அழுகிய தக்காளிகளைப் பொறுக்கிக் குப்பைக்கூடையில் போட்டாள். நான் சிரித்தேன். "எதற்குச் சிரிக்கிறாய், நான் பைத்தியம் போல் தக்காளிகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன் என்றா?" என்று கேட்டாள். "உன்னைப்போல் என்னால் சிரிக்க முடிவதில்லையே. ஆனால், உன் அட்வைஸ் எனக்குத் தேவையில்லை. உன் அன்பு இருந்தால் போதும்" என்றாள்

நான் பதில் சொன்னேன். "மனித உணர்ச்சிகளும் நீ கொண்டுவந்த தக்காளி போலத்தான். அழுகியதைக் குப்பையில் போடு. பழுத்திருப்பதை அருமையாக ருசி பார். பச்சையாக இருப்பதைப் பழுக்க வை" என்று நீதான் எனக்கு அட்வைஸ் செய்தாய். நான் செய்யவில்லை. கவலைப்படாதே" என்று சிரித்தேன்.

"சிரிக்காதே" என்று திட்டினாள்.

அந்த அழுகிய தக்காளியில் அவள் அன்பைப் பார்த்தேன்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com