சி.ஆர். ரவீந்திரன்
எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், விமர்சகர் என பல திறக்குகளிலும் இயங்கி வருபவர் சி.ஆர். ரவீந்திரன். இவர், கோவையை அடுத்த பேரூர் செட்டிபாளையத்தில், 1945 நவம்பர் 20 அன்று ரங்கசாமி-லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். விவசாயக் குடும்பம். பள்ளிப்படிப்பை பேரூரில் முடித்து, புகுமுக வகுப்பை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பயின்றார். அதே கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றார். முதுகலைப் படிப்பை கோவை அரசு கலைக் கல்லூரியில் நிறைவு செய்தார். கல்லூரி ஆசிரியர்கள் இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தினர். மு.வ., கல்கி, ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன் ஆகியோரது நூல்கள் எழுத்தார்வத்தை விதைத்தன. ஆங்கில இலக்கிய நுால்கள் பல சிந்தனைத் திறனை விரிவாக்கின. பேராசிரியர் டாக்டர் குழந்தைவேலுவின் தூண்டுதலால் மலையாள இலக்கிய அறிமுகம் ஏற்பட்டது. தகழி சிவசங்கரப் பிள்ளையின் படைப்புகள் இவரைக் கவர்ந்தன. நேரடியாக அம்மொழியிலேயே வாசிக்க விரும்பி மலையாளம் கற்றுக்கொண்டார். தொடர்ந்த வாசிப்பு எழுதத் தூண்டியது. கல்லூரி மாணவனாக இருக்கும்போதே எழுதத் துவங்கிவிட்டார். முதல் சிறுகதை, 'இரவின் பூக்கள்' இலங்கை 'வீரகேசரி' நாளிதழின் வாரமலரில் பிரசுரமானது. தொடர்ந்து தீபம், கணையாழி உள்ளிட்ட பல இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின.

அடிப்படையில் கவிஞரான ரவீந்திரன், வானம்பாடி கவிதா மண்டலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். வானம்பாடி இயக்கத்தைத் தொடங்கியவர்களில் இவரும் ஒருவர். அதில் பல கவிதைகளை எழுதியிருக்கிறார். கணையாழி, தீபம், கண்ணதாசன், சதங்கை, ழ, விடியல் எனப் பல இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகின. என்றாலும் கவிதையைவிடக் கதைகளில்தான் வாழ்க்கை அனுபவங்களை விரிவாகப் பதியமுடியும் என்பதாலும், விசாலமான தளத்தில் நிகழ்வுகளாக, வரலாறாக ஆவணப்படுத்த முடியும் என்பதாலும் சிறுகதை மற்றும் நாவல் வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார். ஜெயகாந்தன் இவரை மிகவும் கவர்ந்த எழுத்தாளர். அவரைப்போல் சமூக அக்கறை கொண்ட எழுத்துக்களையே தாமும் தர உறுதி பூண்டார். நண்பர்களுடனான தொடர்பும் விவாதங்களும் எழுத்துப்பணிக்கு உரமாயின. ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதி வந்தவர், தனக்குப் பிடித்த படைப்புகள் சிலவற்றை மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்து வெளியிட்டார். இலங்கையிலிருந்து வெளியான விவேகி, பூரணி, அஞ்சலி, மல்லிகை போன்ற இதழ்களில் இவரது மொழிபெயர்ப்புக் கதை, கவிதை, கட்டுரைகள் வெளியாகின.

சில வருடங்கள் டியூட்டராக அரசினர் கலைக்கல்லூரியில் பணியாற்றினார். பின் 'மேம்பாலம்', 'விழிப்பு' உள்ளிட்ட இதழ்களில் பணி புரிந்தார். சக்தி சர்க்கரை ஆலை வெளியிட்ட செய்திமடலில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவமும் இவருக்கு உண்டு. நிருபர், அச்சகர், பத்திரிகை ஆசிரியர் என்று பல பொறுப்புக்களில் இயங்கினார். 'ஆல்', விழிப்பு' போன்ற சிற்றிதழ்களையும் நடத்தி வந்தார். 'பழைய வானத்தின் கீழே' என்பது இவருடைய முதல் நாவல். முதல் சிறுகதைத் தொகுப்பு 'ரிவோல்ட்' 1988ல் வெளியானது. அதே ஆண்டில் 'பசியின் நிறம்' சிறுகதைத் தொகுப்பும் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களில் இவரது சிறுகதை, கட்டுரைகள் வெளியாகின. இவரது படைப்புகளில் 'ஈரம் கசிந்த நிலம்' என்ற நாவல் முக்கியமானதும் பலரால் பாராட்டப்பட்டதும் ஆகும். கொங்குப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கையை விரிவாகப் பதிவு செய்த நாவல் என்று இதனைச் சொல்லலாம். விவசாயச் சமூகத்தின் வர்க்க முரண்பாடுகளை, நிலத்திற்காகவும், குத்தகைக்காகவும் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை, சந்திக்கும் அவமானங்களை, அவல வாழ்க்கையை விரிவாக இந்நாவலில் காட்சிப் படுத்தியிருக்கிறார் ரவீந்திரன். இப்படைப்பிற்காக இவருக்கு 'பாரதிய பாஷா பரிஷத்' விருது கிடைத்தது. இதே படைப்பிற்குக் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருதும், தங்கம்மாள் நினைவுப் பரிசும் கிடைத்தன.

இவர் எழுதிய, 'ஓடைப்புல்' நாவலுக்கு 2014ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது கிடைத்தது. 1960ல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து அதை எழுதியிருந்தார். கோவை மதுக்கரை பகுதியில் வாழ்ந்த தலித் மக்களை, அப்பகுதியில் இருந்த ஒரு பண்ணையார் அடிமைப்படுத்தி, அவர்களின் நிலம் மற்றும் உடைமைகளைப் பறித்துக்கொண்டார். அதைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய ராக்கியண்ணன் என்ற தொழிற்சங்கத் தலைவர் கொல்லப்பட்டார். அதை மையமாக வைத்து எழுதப்பட்டது 'ஓடைப்புல்'. 'மஞ்சு வெளி' குறவர் சமூகத்தின் வாழ்க்கையைச் சொல்லும் நாவலாகும். இந்நாவல் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது. சுரங்கத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைக் கூறுவது 'வெயில் மழை'. 'மணியபேரா' இவரது முக்கியமான படைப்பாகும். இருளர்களின் வாழ்க்கையைப்பற்றிப் பேசுகிறது இப்படைப்பு. இயற்கையோடு இயைந்து வாழும் இருளர்களுக்கு நகர நாகரிகம் சார்ந்த மனிதர்களால் எவ்வகைப் பாதிப்புகள் ஏற்படுகின்றன, உலகமயமாக்கலின் தாக்கம் எந்தெந்த விதமான பாதிப்புகளை உண்டாக்குகின்றன, எப்படி அவர்கள் தங்கள் இயற்கையைத் தொலைத்து மற்றவர்களைப் போலவே செயற்கை மனிதர்கள் ஆகிறார்கள் என்பதை மிகவும் விரிவாக, அழுத்தமாகப் பேசுகிறது.

ரவீந்திரனின் படைப்புகள் கொங்கு வட்டார மக்களின் வாழ்வியலைப் பேசுகின்றன. நேரடியான மொழி இவருடையது. பாசாங்கோ, சிடுக்குகளோ, வார்த்தை ஜாலங்களோ இல்லாத இயல்பான நடை. கொங்கு நாட்டில் வசிக்கும் விவசாயிகள், உழைப்பாளிகள், பழங்குடியினரின் வாழ்க்கையை மையமாக கொண்டவை. கலை மக்களுக்காகவே என்ற எண்ணம் கொண்டவர். தமிழில் எழுதப்படாத வாழ்க்கையை, பேசப்படாத மனிதர்களை அவர்களின் வாழ்க்கையை எழுத்தில் வடிக்க இவர் ஆசைப்பட்டார். அந்த ஆர்வமே இன்றுவரை அவரை எழுத வைத்துக் கொண்டிருக்கிறது.

'அங்குத்தாய்', 'காக்கைப் பொன்', 'காற்றே கனலே', 'செந்தூரச் சாரல்', 'காலம்', 'தேயிலைக் கொழுந்து' போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த நாவல்களாகும். 'அங்குத்தாய்' நாவல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இடம்பெற்றது. 'எதிரீடுகள்', 'பசியின் நிறம்', 'வானம் பார்த்த வனம்', 'ஒவ்வொரு நாளில் ஒரு நாள்', 'நாளை வரும் முன்', 'கருக்கலில் ஒருத்தி', 'மகாகவியின் மயக்கம்', 'இன்னொருத்தர்' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். 'பசியின் நிறம்' சிறுகதைத் தொகுப்பு கேரளப் பல்கலையில் பாடநூலாக இருந்தது. 'ஒவ்வொரு நாளில் ஒரு நாள்' சிறுகதைத் தொகுப்புக்கு லில்லி தேவசிகாமணி நினைவுப் பரிசு கிடைத்தது. 'பசு', 'இளிச்சவாயன்' என்பவை இவர் எழுதிய நாடகங்கள். 'கோபுரத்தில் ஒரு குயில்', 'கண்ணனைக் கண்ட கவிஞன்' போன்றவை இவரது விமர்சனக் கட்டுரை நூல்கள். கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளைச் சாகித்ய அகாதமிக்காக தொகுத்திருக்கிறார். மொழிபெயர்ப்பிலும் தேர்ந்தவர். ஜேம்ஸ் ஆலன், கலீல் ஜிப்ரான், வால்டர் டோயல், ஸ்டேபிள்ஸ், ஓஷோ போன்றோரது நூல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இவரது படைப்புகள் பாட நூல்களாக இருந்திருக்கின்றன. இவரது படைப்புகளை ஆராய்ந்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். ஆங்கிலத்திலும் இவரது சிறுகதைகள் சில வெளியாகியுள்ளன. தேர்ந்தெடுத்த சில சிறுகதைகள் மலையாளம், ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தன்னை முன் நிறுத்திச் செயல்படாத இலக்கியவாதியான ரவீந்திரன், நாவல், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இதுவரை 50க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாதமியின் மாநிலக் குழு உறுப்பினராகப் பணிபுரிந்திருக்கிறார். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இலக்கியப் பங்களிப்புச் செய்துவரும் ரவீந்திரனை 'சங்கமம்' கருத்துப் பரிமாற்றக் களம் பாராட்டி விருதளித்துச் சிறப்பித்துள்ளது. 72 வயது கடந்தாலும் தற்போதும் இலக்கியக் கருத்தரங்குகளில் பேசியும், எழுதியும் இளம் படைப்பாளிகளுக்கு உற்சாகமூட்டி வருகிறார். வானம்பாடி காலத்துக் கவிஞராக அறிமுகமாகி எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், பத்திரிகையாளராகவும் பரிணமித்த ரவீந்திரன், தமிழ் இலக்கிய உலகின் முற்போக்கு, வட்டார வழக்குப் படைப்பாளிகளில் முக்கியமானவர்.

அரவிந்த்

© TamilOnline.com