தென்றல் பேசுகிறது
அத்தியாவசியப் பொருளோ, வேறு பொருட்களோ - எதுவானாலும் விலைவாசி ஏறிக்கொண்டே போவது சராசரி மனிதனுக்கு அவநம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. இந்த விலையேற்றத்துக்கான காரணங்களில் ஒன்று, சில நாடுகளிலிருந்து வரும் சில பொருட்களுக்கு இறக்குமதி வரி விகிதத்தை அதிகரித்திருப்பதுதான். ஒரேயொரு உதாரணத்தைப் பார்க்கலாம். கனடாவிலிருந்து வருகிற காகிதத்துக்கு வரியை ஏற்றிவிட்டார்கள். அதற்குச் சொல்லப்படும் காரணம்: உள்நாட்டுக் காகிதத் தொழிலைப் பாதுகாப்பது! ஆனால் நடந்தது என்ன? போட்டி போட ஆளில்லாத காரணத்தால், இங்கிருக்கும் காகிதக் கம்பெனிகள் தமது உற்பத்திப் பொருளின் விலையை ஏற்றிவிட்டன. அதாவது இறக்குமதி செய்தால், அந்த வரி உட்பட அதன் விலை எவ்வளவோ, அந்த விலையை உள்ளூர்க் காகிதத்துக்கு நிர்ணயித்துவிட்டார்கள். அதிக லாபம் அவர்கள் கையில். அது மட்டுமல்லாமல் எந்திரப் பராமரிப்பு என்பது போல வெவ்வேறு காரணங்களைக் காட்டி உற்பத்தியையும் குறைத்துவிட்டார்கள். இதனால் செயற்கையான காகிதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தென்றல் பாதிக்கப்பட்டுள்ளது என்றால் நம்புவீர்களா? மிட்வெஸ்ட் மற்றும் கிழக்குக் கடற்கரை நகரங்களில் வழக்கமான இடங்களில் போய்ப் பார்த்தால் அண்மைக் காலத்தில் தென்றல் கிடைக்காமல் வாசகர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தால் அதன் பின்னணியில் இருப்பது இதுதான். காகித விலையேற்றத்தைச் சமாளிப்பதற்கு நாங்கள் பிரதிகளைக் குறைக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டோம்.

இதை இன்னொரு வகையிலும் பார்க்கலாம். பிற நாடுகளில் மலிவாகக் கிடைக்கும் ஒரு சரக்குக்கு, அமெரிக்கப் பொதுஜனம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அரசின் தவறான கொள்கையால் மக்களுக்கு ஏற்படும் இன்னலும் இழப்பும் ஆகும் இது. ஏனென்றால், போதிய உற்பத்தி, உற்பத்தியாளரிடையே ஆரோக்கியமான போட்டி என்பவற்றை ஊக்குவிக்காமல், இப்படி இறக்குமதிக்குத் தடைகளை ஏற்படுத்தினால், உள்ளூர்க் குழுமங்கள் அநியாய லாபம் சம்பாதிக்கத்தான் அது உதவும். இரும்பு, உடல்நலப் பராமரிப்புத் துறை, மருந்து விலை, செல்பேசியில் டேட்டா பயன்படுத்த நாம் தரும் விலை என்பதாகப் பல அம்சங்களிலும் இன்றைக்கு இந்த அவலநிலை ஏற்பட்டிருக்கக் காண்கிறோம். ஆக்குவது கடினம், அழிப்பது எளிது. "குயவனுக்குப் பலநாள் வேலை, குண்டனுக்குச் சில நிமிட வேலை" என்று சரியாகத்தான் சொன்னார்கள்.

*****


ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக இருந்த கோஃபி அன்னான் தமது 80வயதில் அண்மையில் மறைந்திருக்கிறார். ஆகஸ்டு மாதத்தில் மட்டும் ஜான் மக்கெய்ன், முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி என்று ஒவ்வொருவராக நம்மிடையே இருந்து அகன்றிருக்கிறார்கள். ஒவ்வொருவருமே ஒவ்வொரு வகையில் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் அனைவருக்கும் தென்றலின் அஞ்சலி.

*****


சென்ற இதழில் வியப்பூட்டிய, பல வாசகர்களை உடனடியாகக் கடிதம் எழுதத் தூண்டிய அம்சங்கள் இரண்டு: ஒன்று, சாய் ஷ்ரவணத்தின் நேர்காணல்; இரண்டு, சுதந்திரப் போராட்ட வீரர் வ.வே.சு. ஐயர் அவர்களின் சாகச வாழ்க்கை. அவை இந்த இதழிலும் தொடர்கின்றன. வித்தியாசமான சிறுகதைகள், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் வாழ்க்கைக் குறிப்புகள், நாவில் எச்சிலூற வைக்கும் சமையல் குறிப்புகள் எனத் தென்றல் உங்களைத் தீண்டுகிறது. இன்னும் பலர் எங்களுக்கு எழுதுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் பணியைத் தொடர்கிறோம்.

வாசகர்களுக்குக் கிருஷ்ண ஜயந்தி, விநாயக சதுர்த்தி, மொஹர்ரம் பண்டிகை வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

செப்டம்பர் 2018

© TamilOnline.com