அரங்கேற்றம்: சம்யுக்தா லோகாநந்தி
ஜூன் 23, 2018 அன்று ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியாவின் ஸ்ரீ லலித கான வித்யாலயாவின் மாணவி செல்வி.. சம்யுக்தாவின் அரங்கேற்றம் சான் ரமோனின் டோகர்ட்டி வேலி அரங்கில் நடைபெற்றது. இவர் குரு ஸ்ரீமதி லதா ஸ்ரீராமிடம் 11 வருடங்களாகக் கர்நாடக சங்கீதம் கற்றுவருகிறார். திரு. ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்) மற்றும் திரு. விக்ரம் ரகுகுமார் (வயலின்) சிறப்பாகப் பக்கம் வாசித்தனர்.

மனம்புச்சாவடி வெங்கடசுப்பையரின் ஹம்சத்வனி வர்ணத்தில் தொடங்கி, கல்யாணி ராகத்தில் "கணபதே மஹாமதே" என்ற முத்துஸ்வாமி தீக்ஷிதர் கிருதியுடன் தொடர்ந்தார். அடுத்து பஞ்சரத்தினத்தில் முதல் ரத்தினமான, நாட்டை ராகத்தில் அமைந்த "ஜகதாநந்த காரகா" என்ற தியாகராஜ கீர்த்தனையைப் பாடினார். தொடர்ந்து வந்த நான்கு பாடல்களும் தியாகராஜரின் கிருதிகள். "ராமா நின்னு நம்மினா"வை மோஹனத்திலும், "பண்டு ரீதி"யை ஹம்சநாதத்திலும் பாடினார். "சீதம்மா மாயம்மா" என்ற வசந்தா ராகப் பாடலை கல்பனா ஸ்வரத்துடன் எடுப்பாகப் பாடினார். "ராம நீ சமானமெவரு" என்ற கரஹரப்ரியா கிருதியை ராக ஆலாபனையுடன் தொடங்கி கல்பனா ஸ்வரங்களுடன் நிறைவாகப் பாடினார்.

நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியில் சிம்மேந்திர மத்தியமத்தில் ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் "அசைந்தாடும் மயிலொன்று", ஆனந்த பைரவியில் பத்ராசல ராமதாஸரின் "பலுக்கே பங்காரமாயேன", தீர சங்கராபரணத்தில் தியாகராஜரின் "சீதா கல்யாண", அருணகிரிநாதரின் திருப்புகழ் என்று அருமையான பாடல் தேர்வு. "ஓம்கார ஸ்வரூபா" என்ற ரேவதிராகத்தில் அமைந்த அபங்கம், "பாயோ பாயோஜி" என்ற மீரா பஜன் இரண்டையும் அழகாகப் பாடினார்.

டாக்டர். பாலமுரளி கிருஷ்ணாவின் பிருந்தாவனி தில்லானாவும், பாக்யாத லட்சுமி மங்களமும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின. குரு லதா ஸ்ரீராம் பள்ளியின் சார்பாக வெள்ளித்தட்டை சம்யுக்தாவுக்கு அளித்துப் பாராட்டினார்.

ரமாதேவி கேசவன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com