2018 ஜூன் 29 முதல் ஜூலை 1 தேதிவரை, கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ அருகிலுள்ள சான்டா க்ளாராவில் ஶ்ரீ ராஜராஜேஸ்வரி திருக்கோவிலில் சுமார் 5 அடி உயர மூலமூர்த்தி பிரதிஷ்டையும் கும்பாபிஷேகமும் விமர்சையாக நடைபெற்றன.
ஜூன் 29ம் தேதியன்று காலை பூஜையில் புற்றுமண் எடுத்து பாலிகைகள் ஆவாஹனம் செய்து ஹோமசாலையில் 27 கலசங்கள் ஆவாஹனம் செய்யப்பட்டன. அன்று கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், வாஸ்து ஹோமம் மற்றும் பஞ்சசூக்த ஹோமம் ஆகியவை பக்தகோடிகளின் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றன.
ஜூன் 30ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், மூலமந்திர ஹோமமும் செய்யப்பட்டன. மதியம் அம்பாள் மூல விக்ரஹத்துக்குத் தைலக்காப்பும், 48 நாள் தான்யாதி வாசம், ஜலவாசம், க்ஷீராப்தி வாசம் முடிந்து அம்பாள் பீடத்தில் யந்திர ஸ்தாபனம், நவரத்ன ஸ்தாபனம் செய்து தங்கம், வெள்ளி முதலியவை பக்தர்களால் சமர்ப்பிக்கப்பட்டன. ஶ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் ப்ரதிஷ்டையும், அஷ்டபந்தனமும் செய்யப்பட்டன. மாலையில் 3ம் கால யாக பூஜையில் 108 மூலிகைகளால் சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.
ஜூலை 1ம் தேதி காலை 10 மணி அளவில் மஹாபூர்ணாஹுதி முடிந்தவுடன் பிரதான கலசம் குடை, சாமரத்துடன் புறப்பட்டு, செண்டை மேளம், மற்றும் வேத கோஷத்துடன் புஷ்பமழை பொழியச் சன்னிதி பிரகாரம் சுற்றி வலம்வந்து அம்பாளுக்குப் பூர்ண கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. மூன்று நாட்களும் இன்னிசைக் கச்சேரி, நடனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தற்பொழுது 48 நாள் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது.
T.S. ராம், சான் ஹோசே, கலிஃபோர்னியா |