அரங்கேற்றம்: காவ்யா ராஜு
ஜூலை 8, 2018 ஞாயிறன்று, ஏம்ஸ், அயோவாவின் சுதாலயா நாட்டியப்பள்ளி மாணவி செல்வி. காவ்யா ராஜுவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கில்பர்ட் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சி மோகனத்தில் அமைந்த "மூஷிகவாஹன" என்னும் ஸ்லோகத்துடன் துவங்கியது. தொடர்ந்தது புஷ்பாஞ்சலி. காவ்யா தன்னம்பிக்கையுடன் ஆரம்பித்தார். கணேச கவுத்துவத்தில் சபையினரை வணங்கி, கணேசரை அபிநயத்தில் வர்ணித்தது சிறப்பு.

சப்தம் நிகழ்ச்சியில் தேவி வந்தனத்தில், கவி காளிதாஸனுக்கு சரஸ்வதி அருளியது, குசேலர், கிருஷ்ணனை சந்திக்கச் சென்றது, பார்வதி குழந்தை ஞானசம்பந்தருக்குப் பாலமுது ஊட்டியது யாவையும் அபிநயத்தில் காண்பித்தது கனகச்சிதம். "உனை நாடும்போது" என்ற சக்தியின் பாடலில், "துன்பமே உருவாகுதே" என்னும் நிமிடத்தில் முகபாவம் தத்ரூபம். கண், முகபாவம், உடல் அசைவுகளை நன்கு வெளிப்படுத்தி, "அரவிந்த பாத நமஸ்தே" என பாடலை முடித்து, தாள கதியைக் காண்பித்தது சிறப்பு.

வர்ணம் நிகழ்ச்சியில் பாபநாசம் சிவனின் "நீ இந்த மாயம் செய்தாய் நியாயம்தானா" எனக் கேட்குமிடத்தில் காவ்யாவின் அபிநயம் அபாரம். "ஆயர்குல தீபமே அருள் தாராய்" எனுமிடத்தில் வயலின், புல்லாங்குழலின் இனிமை, தன்யாசி ராகத்தின் உருக்கமான பிடிகளை வாசித்தது, அபாரமான மிருதங்க வாசிப்பு, நாட்டிய ஆசிரியையின் சிறந்த நட்டுவாங்கம் மாணவி சிறந்த தாளகதியில் ஆடியது யாவும் மிக எடுப்பாக அமைந்திருந்தது. சபையினர் வெகுநேரம் கைதட்டினர். நீலகண்ட சிவனின் "ஆனந்த நடமாடுவார் தில்லை" என்னும் பாடலில் "பாதி மதி ஜோதி பளீர் பளீர் என பாதச் சிலம்பொலி" என்னுமிடத்தில் தத்ரூபமாக ஆடினார். அருணாசலக் கவிராயரின் ராமநாடகப் பாடலின் அர்த்தத்தில் மூழ்கி, வில்லேந்திய ராமனை அபிநயித்து நிறுத்தியது மறக்கமுடியாதது.

மதுரை கிருஷ்ணன் தில்லானாவின் துரிதகதிக்கு ஏற்ப விறுவிறுப்புடன் ஆடியது, "ஆதி அந்தமில்லாத ஜோதி வடிவான அண்ணாமலை" என்னுமிடத்தில் அபிநயம் அருமை. கடைசியாகக் குறத்தி நடனத்தில், "எங்கள் மலை பவழ மலை, சொந்த மலை அம்மே! வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் வாழும் மலை" என ஒற்றுமையைப் பற்றிச் சொல்லி ஆடியது எடுப்பாக அமைந்தது.

ஏம்ஸ் நகரின் சுதாலயா நாட்டியப் பள்ளி நிறுவனர் சுமனா ஸ்ரீராம், சென்னை, பெங்களூரு நகரங்களில் நாட்டியம் பயின்றவர். சென்னை ஸ்ரீ பரதாலயா டைரக்டர் சுதாராணி ரகுபதி அவர்களின் மூத்த மாணவி ஸ்மிதா மகல் டப்ளின் ஓஹையோவில் நடத்திவரும் சிலம்பம் நாட்டியப் பள்ளியில் பரதம் கற்று, மாணவிகளுக்குப் பரதநாட்டியப் பயிற்சி அளித்துவருகிறார்.

பக்க வாத்தியக்காரர்களின் சிறந்த ஒத்துழைப்பாலும், நாட்டிய ஆசிரியர், மாணவியின் கடின உழைப்பினாலும் நிகழ்ச்சி சிறந்த முறையில் பரிமளித்தது.

சீதா துரைராஜ்,
அயோவா

© TamilOnline.com