தெரியுமா?: டெலிஃபிலிம் ஆகிறது 'பொன்னியின் செல்வன்'
ஆழ்வார்க்கடியானையும் வந்தியத்தேவனையும் நந்தினியையும் பூங்குழலியையும், ஏன், பொன்னியின் செல்வரையும் தான் - ரத்தமும் சதையுமாகப் பார்க்க யாரே ஆசைப்பட மாட்டார். இந்த பிரம்மாண்டமான காவியத்தைத் திரைப்படமாக எடுக்க ஆசைப்பட்ட பிரபலங்கள் பின்வாங்கியதுண்டு. ஆனால் அமெரிக்காவில் பாகீரதி சேஷப்பன் துணிந்து மேடையேற்றினார். தமிழகத்திலும் சில குழுக்கள் மேடையேற்றின.

கல்கியின் காவியத்தை 78 மணிநேர ஒலிப்புத்தகமாக வெளியிட்ட C.K. வெங்கட்ராமன் (தயாரிப்பாளர், பெங்களூரு) மற்றும் பாம்பே கண்ணன் (இயக்குனர்) இணைந்து இதை டெலிஃபிலிம் ஆக்க முனைந்துள்ளனர். "இந்தப் புதினத்தைச் சிதைக்காமல், கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றமளிக்காமல், பல முக்கியமான காட்சிகள் விட்டுப் போகாமல், சிறப்பாகச் செய்ய விரும்புகிறோம்" என்கிறார் பாம்பே கண்ணன். சுமார் 8லிருந்து 10 மணிநேர தொலைப்படமாக இதனைத் தயாரிக்க 2 கோடி ரூபாய் செலவாகுமாம். இதற்கென 50 லட்சம் ரூபாயைத் தயாரிப்பாளர் ஒதுக்கியிருக்கிறார். இந்தத் தொகை ஐந்து பாகங்களில் முதல் இரண்டு பாகங்களைப் படமாக்க மட்டுமே போதுமானது.

"எஞ்சியதைப் புரவலர்களும், ரசிகர்களும் கொடுத்து உதவுவார்கள் என்பது எங்கள் நம்பிக்கை" என்கிறார். கொடுக்கும் தொகைக்கேற்ப DVD-யில் பெயர் வெளியிடுவது, விளம்பர நேரம் தருவது, முக்கியமான நடிக, நடிகையரோடு கலந்துரையாடுவது போன்ற பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. "இந்த முயற்சியே ஒரு சரித்திரம் படைக்கும் முயற்சிதான். இதில் கல்கியின் ரசிகர் ஒவ்வொருவரும் பங்கேற்கலாம். இதுவொரு அரிய வாய்ப்பு" என நம்பிக்கையோடு சொல்கிறார் பாம்பே கண்ணன்.

மேலும் விவரங்களுக்கு: www.wishberry.in

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com