ஒருமுறை நாரதர் வைகுண்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு யோகி தீவிர யோகப்பயிற்சி செய்துகொண்டிருந்ததைப் பார்த்தார். நாரதரைப் பார்த்ததும் யோகி, "நாரதரே! நான் எப்போது வைகுண்டத்தை அடையத் தகுதியுள்ளவன் ஆவேன் என்று பிரபுவைக் கேட்டுச் சொல்லுங்கள்" என்று வேண்டினார். நாரதரும் ஒப்புக்கொண்டார்.
ஸ்ரீமன் நாராயணரின் சன்னிதியை அடைந்த நாரதர், யோகி என்றைக்கு வைகுண்டத்தை அடையும் தகுதிபெறுவார் எனக் கூறும்படி மன்றாடினார். "எந்த மரத்தின்கீழ் யோகி அமர்ந்து தவம் செய்கிறாரோ அந்த மரத்தில் எத்தனை இலைகள் இருக்கின்றனவோ, அத்தனை ஜன்மங்களில் அவர் என்னை வந்தடைவார்" என்றார் பிரபு. இதைக் கேட்டால் அந்த யோகி எத்தனை மனத்தளர்ச்சி அடைவார் என்று சிந்தித்த நாரதருக்கு வருத்தமாகிவிட்டது. ஆனாலும், யோகியாரின் வற்புறுத்தலுக்கு இணங்கி நாரதர் அதனை அவரிடம் கூறவேண்டியதாகி விட்டது.
அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக யோகியார் அதைக் கேட்டுப் பேரானந்தம் அடைந்தார்; சிறிதும் மனக்கலக்கம் அடையவில்லை. துள்ளிக்குதித்து ஆடினார். உண்மையில் தனது கனவு நனவாகப் போகிறதே என்று புளகாங்கிதம் அடைந்தார். அவர் பகவானைத் தியானித்துத் தனது நன்றியைக் கூறி, அந்தப் பேரானந்தத்தில் உலகையே மறந்துபோனார்.
யோகியின் ஆனந்தத்தைப் பார்த்த பகவான் மகிழ்ச்சியுற்றார். அவர்முன்னே தோன்றி உடனடியாக வைகுண்டத்தைத் தர முன்வந்தார். ஆனால் "பிரபுவின் திருவாக்காக நாரதர் கொண்டுவந்த சொற்கள் பொய்யாகிவிடக் கூடாது, அதனால் நான் எனக்கான காலம் வரும்வரை காத்திருக்கிறேன்" என்றார் யோகி.
தீய கர்மாக்களின் சுவடுகளை நல்லெண்ணங்களும் புனிதமான உணர்வுகளும் முற்றிலும் துடைத்துவிடும் என்பதையும், பகவானின் சங்கல்பத்தை உற்சாகமாக வரவேற்ற காரணத்தால் யோகியின் கர்மபலன்கள் அழிவுற்றன என்பதையும் பிரபுவே யோகிக்கு விளக்க வேண்டியதாகி விட்டது.
கர்மா என்பது ஒரு இரும்புச் சிறையல்ல; அர்ப்பணிப்பும் தன்னைத் தூய்மை செய்துகொள்வதும் இறைவனின் கருணையைப் பெற்றுத் தருகின்றன. அந்தப் பேரருள் கர்மபலனை மாற்றியமைத்து, அதன் கடுமையை அகற்றிவிடும். மனம் தளராதீர்கள்; நம்பிக்கை இழக்காதீர்கள். உங்கள் இதயத்தை தீமை ஆக்கிரமிக்கும்போது அதன் புகையால் இதயம் பொலிவிழக்கும்; காமம், குரோதம், பேராசை ஆகியவற்றின் அழலில் இதயம் கருகிப்போகும். இறைவனின் கருணை ஒன்றே இந்த நெருப்பைத் தணிக்க வல்லது. இறைவனின் கருணை ஒன்றே ஆனந்தத்தைத் தருமேயல்லாது தீச்செயல்கள் அல்ல.
நன்றி: சனாதன சாரதி, செப்டம்பர் 2016
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |