சுமைகூலி
மிகவும் ஏழ்மை. உயிரையே பணயம் வைத்து ஒரே மகனை இஞ்சினியரிங் படிக்கவைத்தோம். இன்று அவன் நல்ல வேலையில் இருக்கிறான். நாங்களும் ஒரு வழியாக நடுத்தர வர்க்க நிலையை அடைந்தோம். வயது காத்திருக்குமா என்ன? எனக்கு ஐம்பத்தைந்து ஆகிவிட்டது, என் கணவரோ அறுபதைத் தொட்டுவிட்டார்.

வாழ்க்கையில் கஷ்டம் தவிர வேறெதையும் அனுபவித்தறியாத தன் பெற்றோரை வற்புறுத்தி ஒருவாரம் உல்லாசமாக கோவா சுற்றிப்பார்க்க அனுப்பிவைத்தான் அருமை மகன். நல்ல ஹோட்டலில் தங்கி, முதலில் மர்மகோவா பீச்சுக்குச் சென்றோம். கடல்கரையில் கால் எடுத்து வைத்ததும் வயதுக்கு ஒவ்வாத குதூகலமும் இளமை வேகமும் தோன்றியது நியாயம்தானே?

கடல் அலையில் கால்களை நனைக்க ஆசைப்பட்டு கணவரின் கையைப் பிடித்துக்கொண்டு இறங்கினேன். காலை அலை தொட்டவுடன் இன்னும் சிறிது உள்சென்று அனுபவிக்க சிறு குழந்தைபோல் துடித்தேன். பாண்ட், ஷர்ட், பர்ஸ், வாட்ச் எல்லாம் கரையில் சற்று தூரத்தில் வைத்துவிட்டு வருவதாகக் கூறி அவர் சென்றார்.

திடீர் பேரலை ஒன்று என்னை உருட்டிக் கடலுக்குள் இழுத்துச் செல்ல, தத்தளித்து, நான் கத்தி கதறினேன். அவர் திகைத்து நிற்க, கரையில் அமர்ந்திருந்த அயல்நாட்டு வாலிபன் ஒருவன் மின்னல் வேகத்தில் கடலில் குதித்து என்னைப் பிடித்து, கட்டிக்கொண்டு மிகச் சிரமப்பட்டு கரைக்குக் கொண்டுசேர்த்தான். நான் உயிர் பிழைத்தேன்.

அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு உணர்ச்சிபொங்கக் கண்ணீருடன் நன்றிகூறி விடைபெற்றார் அவர். அதிக வெளியுலகப் பழக்கமில்லாத நாங்கள் அந்த நிலையில் அந்த வாலிபனின் ஊர், பேர்கூடக் கேட்கவில்லை.

"நாம் எல்லாம் சந்தோஷம் அனுபவிக்கக் கொடுத்துவைக்காத பிறவிகள், உயிர் பிழைத்தது மறுபிறவி" என்று அஹமதாபாதில் எங்கள் வீட்டுக்குத் திரும்பியதும் மகனிடம் நடந்ததை கூறினோம்.

ஒரு மாதம் கடந்திருக்கும். ஒருநாள் மதிய உணவு முடித்தவுடன் அழைப்புமணி ஓசை கேட்டது. கதவைத் திறந்த என் கணவர் ஓர் அயல்நாட்டு வாலிபன் நிற்பதைப் பார்த்து திடுக்கிட்டார். வந்தவர், "நீங்கள் மிஸ்டர் கபாடியாதானே? உங்களைப் பார்க்க வந்துள்ளேன்" என்றான். தயங்கியபடியே உள்ளே வந்து அமரச் சொன்னார்.

வந்த வாலிபர் "நான் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மைக்கல் தம்பதியின் மகன். என் பெயர் ஜான். இருபத்தைந்து வருடத்துக்கு முன் என் பெற்றோர்கள் குஜராத்தின் ஆனந்த் நகரில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு வருடம் தங்கி இருந்தார்கள். நான் அங்கேதான் பிறந்தேனாம். அப்பொழுது கபாடியா தம்பதிகள் கூடவே இருந்து என் பெற்றோருக்கு மிகவும் உதவினார்களாம். சாஃப்ட்வேர் பயிற்சிக்காக பெங்களூரு வந்த என்னைக் கட்டாயம் ஆனந்த் சென்று அவர்களை பார்த்து அவர் கொடுத்த கிஃப்ட்டையும் கொடுக்கும்படிக் கூறியுள்ளார்.

ஆனந்த் போனால், நீங்கள் அஹமதாபாதில் இருப்பதாகச் சொல்லி இந்த அட்ரஸைக் கொடுத்தார்கள்" என்றான். பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அடிக்கடி என்னை உற்று உற்றுப் பார்த்தான்.

அவன் கூறிக்கொண்டிருக்கையிலே என் மனம் ஏதோ முற்பிறவியில் நடந்ததுபோல் இருபத்தைந்து வருடம் பின்னோக்கிப் போனது.

அப்போது என் குடும்பத்தைக் காப்பாற்றவும், ஒரே மகனை நன்றாகப் படிக்கவைக்கவும் பணம் தேவைப்பட்டது. பிரேசிலைச் சேர்ந்த மைக்கல் தம்பதிகளுக்கு ஆனந்தில் உள்ள மருத்துவமனையில் வாடகைத் தாயாகச் சம்மதித்தேன். ஓராண்டு அவர்களுடன் தங்கி, ஒரு அருமையான ஆண்குழந்தையைப் பெற்றுக் கொடுத்தேன். பிரிய மனமின்றித்தான் கொடுத்தேன். அவர்கள் ஒத்துக்கொண்டதைவிடப் பலமடங்கு அதிகப் பணத்தையும் பரிசுகளையும் கொடுத்தனர். பிற்காலத்தில் எக்காரணத்தைக் கொண்டும் அக்குழந்தைக்கு உரிமை கொண்டாடவோ, அதனுடன் தொடர்போ வைத்துக்கொள்ளவோ கூடாது என்று ஒப்புதலும் சத்தியமும் வாங்கிக்கொண்டனர்.

அந்தப் பணத்தை வைத்து என் மகனை இஞ்சினியரிங் படிக்க வைத்தோம். வெளியே கூறப்படாமல் மறைந்த என் கடந்தகாலம் இது.

வந்த வாலிபன் "மன்னிக்கவும், கடந்தமாதம் நீங்கள் கோவாக்குப் போயிருந்தீர்களா?" என்றதும் அதிர்ந்துபோய் "ஆம்" என்றேன்.

"கடல் அலையில் அகப்பட்டுக் கொண்டீர்களா?"

"ஆம்" என்றேன்.

"உங்களைத் தூக்கிக் கரைசேர்த்தது நான்தான். நீங்கள் அன்றிருந்த நிலையில் என்னை உங்களுக்கு அடையாளம் தெரிய வாய்ப்பில்லைதான். வாட் எ சர்ப்ரைஸ்! ஓ மை காட்! ஐ கேன் நாட் பிலீவ்" என்று சொல்லிக்கொண்டே தன் தந்தை, தாய் நலன் பற்றிக் கூறினான். அவர்கள் கொடுத்த கடிதத்தையும் இரண்டாயிரம் டாலர் செக்கையும் கொடுத்துவிட்டு விடைபெற்றான்.

கட்டுக்கடங்காத தாய்மை உணர்ச்சியில், கடல் அலையில் என்னை அவன் கட்டிப் பிடித்ததைவிட இன்னும் அதிகமாக இறுக அவனைக் கட்டி, உச்சந்தலையில் முத்தமழை பொழிந்தபோது குமுறிவந்த கண்ணீரை அவன் அறியாவண்ணம் துடைத்துக்கொண்டு அவனுக்கு விடை கொடுத்தனுப்பினேன்.

நான் சுமந்து பெற்ற சிசு எங்கிருந்தோ வந்து என்னைச் சுமந்து காப்பாற்றி எனக்குச் சுமைகூலியைக் கொடுத்துவிட்டதே, என்ன ஆச்சரியம் என்று தேம்பி அழுதேன். அவர் என்னை அணைத்து ஆறுதல் கூறினார்.

கோபாலன் ராமன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com