மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 7)
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தாள். என்ரிக்கே மரபணுவின் இரட்டைச் சுருள் வடிவம், மரபணுத் தொடர்கள் (chromosomes), இனப்பெருக்கத்தில் அவை இரண்டாகப் பிரிந்து தந்தை, தாயின் பாதிகள் சேர்ந்து குழந்தையின் குரோமசோமாக உருவாகின்றன என்பவற்றை விளக்கினார். எவ்வாறு இயற்கையிலும் மனிதர்களின் தேர்ச்சி இனப்பெருக்கத்தாலும் (selective breeding) மரபணு மாற்றங்கள் பரவுகின்றன என்பதை விளக்கினார். மேற்கொண்டு பார்ப்போம்!

முன்னரெல்லாம், வைரஸ்மூலம் மாற்று மரபணுக்களை உயிரணுவுக்குள் (cells) புகுத்தி முழு மரபணுக்களையே செருக அல்லது மாற்ற வேண்டியிருந்ததால் மிக நுண்ணிய அளவில், ஒரு சிறு மரபணுத் துண்டளவில், மரபணு மாற்றங்களைச் செய்ய இயலவில்லை. அது க்ரிஸ்பர் நுட்பத்தாலேயே இயலும் என்று என்ரிக்கே தெரிவித்தவுடன், அந்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்றறிய மிக ஆர்வமாக இருந்தார் சூர்யா.

என்ரிக்கே தொடர்ந்து விளக்கினார். "க்ரிஸ்பர் நுட்பம் எப்படி வேலை செய்யுதுன்னு சொல்றதுக்கு முன், அது தரக்கூடிய பலனுக்கு ஒரு உதாரணம் தர்றது நல்லதுன்னு எனக்குத் தோணுது... என்ன ஷாலினி சரியா?"

ஷாலினி "சரியா....வா? என்ன கேள்வி இது என்ரிக்கே? எனக்கே அதுபத்தி சரியா தெரியாதே? எதோ அரசல் புரசலாத்தான் தெரியும். நிச்சயமா ஒரு பலனைப்பத்தியாவது விளக்கிட்டு அப்புறம் நுட்பச்செயல்பாட்டு விவரங்களைச் சொன்னா சூர்யாவுக்கும் கிரணுக்கும் நல்லாப் புரியும். விவரமாவே சொல்லுங்க!" என்று ஊக்கினாள்.

என்ரிக்கே தொடர்ந்தார். "ஆல்ரைட் தென்! நல்ல உதாரணம் மலேரியாத் தடுப்புன்னு நினைக்கறேன்."

சூர்யா இடைமறித்தார். "ஒ! ஆமாம்! மரபணு மாற்றம் மூலம் மலேரியாத் தடுப்புபற்றி ஆராயறத்துக்கு நிதி உதவி தர்றதா பில் கேட்ஸ்கூட ஒரு வலைப்பூ கட்டுரை (blog article) எழுதியிருந்ததா நான் சமீபத்துல படிச்சேன்!"

என்ரிக்கே ஆமோதித்தார். "யெஸ், யெஸ், Gates Foundation அந்த முயற்சியில தீவிரமா இறங்கியிருக்கு. மலேரியாக் கொசுக்களின் மரபணுக்களை மாற்றினா பரப்பாத கொசுக்களை அதிகரிக்கும்படிச் செய்யலாம், அல்லது அவை மனிதர்களின் ரத்தத்தை உரிஞ்சறப்போ மலேரியா வைரஸைப் பரப்பாதபடி தடுக்கலாம். இந்த இரண்டு பலன்களையும் பெற மரபணு மாற்ற ஆராய்ச்சி மிக மும்முரமா நடக்குது. அதைத்தான் பில் கேட்ஸ் குறிப்பிட்டிருப்பார்."

சூர்யா தலையாட்டினார். "கரெக்ட். அதுக்கு ஏன் க்ரிஸ்பர் வேணும், இப்ப இருக்கற வைரஸ் வச்சு செய்யற மரபணு மாற்றம் ஏன் போதாது?"

ஷாலினி குறுக்கிட்டாள், "என்ரிக்கே, அதுபத்தி எனக்குத் தெரிஞ்சதை விளக்கறேன். தேவையானா நீங்க மேலே சொல்லுங்க."

என்ரிக்கே தொடருமாறு தூண்டவே, ஷாலினி விளக்கினாள், "வைரஸ் வழிமுறை மூலம் முழு மரபணு மாத்தறதுதான் சாத்தியம்னு ஏற்கனவே என்ரிக்கே சொன்னார் இல்லையா? அப்படியே முயன்றாலும் ஒவ்வொரு முறையும் பலனளிக்கறதில்லை. இந்த மலேரியா கொசுக்களின் மரபணுத் தொடர்களை மாத்தறத்துக்கு ஏற்கனவே நடந்த வைரஸ் முயற்சிகளில் ஓரளவுக்கு நம்பிக்கை தரும் பலன் இருக்கு. ஆனா மிக அதிக அளவில் முயற்சி செஞ்சு சிறிதளவுக்கே பலன் கிட்டியிருக்கு. இதைப் பெருமளவில், ஒவ்வொரு முறையும் வெற்றி தரும்படி செய்யணும்னா, நுணுக்கமான மாறுதல் செய்யணும். மரபணுவின் எழுத்தணுக்களான A, C, G, T என்னும் வேதியல் பொருட்கள் சேர்ந்து மரபணு வார்த்தைகளாகுதுன்னு சொன்னோம் இல்லையா, அதுல ஓரிரண்டு எழுத்துக்களை மட்டுமே மாத்தினா நமக்கு வேண்டிய மாற்றம் ஒவ்வொரு முறையும் சரியா கிடைக்கும். அது க்ரிஸ்பர் நுட்பத்தால மட்டுந்தான் முடியும். என்ன என்ரிக்கே, சரியா?"

என்ரிக்கே சொன்னார், "அப்ஸொல்யூட்லி கரெக்ட்! பிரமாதமா சொன்னே ஷாலினி. இன்னும் ஒரு அடிப்படை விவரம் நான் சொல்லணும்னா, இந்த எழுத்தணுக்களான A, C, G, T என்னும் வேதியல் பொருட்கள் மும்மூன்றாய்ச் சேர்ந்து மரபணு வார்த்தையின் எழுத்துக்களாகின்றன. முதல்ல சொல்லச்சே A-வோட T-யும், C-யோட G-யும் ஜோடிகளா இணைவதாக எளிமைக்காகவும் இரட்டைச் சுருளேணி வடிவம் புரியறத்துக்காகவும் சொன்னேன். ஆனா மரபணு எழுத்துக்கள் ஒவ்வொணிலும் மூணு எழுத்தணுக்கள், அதாவது, நாலில மூணு சேர்ந்திருக்கும். அந்தமாதிரி மரபணு மொழியில 64 மூணு அணுவுள்ள எழுத்துக்கள் இருக்கு."

"போச்சுடா! எதோ கொஞ்சம் ஓரமாப் புரிய ஆரம்பிச்சிருக்கேன்னு நினைச்சேன்! குழப்பிட்டாங்களேய்யா, குழப்பிட்டாங்க!" அங்கலாய்த்தான் கிரண்.

என்ரிக்கே முறுவலித்தார். "வாஸ்தவந்தான் கிரண். கொஞ்சம் சிக்கல்தான். ஆனாலும் விளக்க முயற்சிக்கிறேன். க்ரிஸ்பர் நுட்பத்தின் செயல்பாட்டுக்கு இது மிக முக்கியம். அதுனால கவனமாக் கேட்டு சந்தேகம் எதாவது இருந்தாலும் தயங்காம விசாரிச்சு, புரிஞ்சுக்குங்க. ஒரு உதாரணம் எடுத்துக்கலாம். நம்ம உடம்புல சிவப்பு ரத்த உயிரணுக்களில் உள்ள ஹீமோக்ளோபின் என்னும் முக்கியமான புரதத்தை உருவாக்க ஒரு மரபணு உள்ளது."

சூர்யா இடைமறித்தார். "ஆமாம், ஆக்ஸிஜன் எடுத்துச் செல்ல உதவும் புரதம்... அதானே?"

என்ரிக்கே தொடர்ந்தார், "ஆமாம். அது எப்படி உருவாக்கப் படுதுன்னு சொல்றேன். ஒவ்வொரு மரபணுவும் புரதங்களை உருவாக்க உயிரணுக்களுக்கு ஆணையிடுகின்றன. மரபணு மூன்றணு-எழுத்துக் கோவையில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு அமினோ அமிலத்தை உருவாக்குவதற்கான ஆணையிடும் விதி. அந்த மரபணுவின் எழுத்துக் கோவையில் 444 எழுத்தணுக்கள் அதாவது 148 எழுத்துக்கள் உள்ளன."

கிரண் வாய் பிளந்தான். "148 எழுத்து மரபணு வார்த்தையா! அம்மாடியோவ்! எனக்கு supercalifragilisticexpialidocious என்கிற வார்த்தைதான் ஆங்கிலத்துலயே ரொம்பப் பெரிசுன்னு தெரியும்! இது அதைத் தூக்கிச் சாப்பிட்றும் போலயே!"

என்ரிக்கே தொடர்ந்தார். "நல்ல ஜோக் இது! இதைவிட நீளமான மரபணுவெல்லாம் நிறைய இருக்கு. சரி அதை விடு! ஹீமோக்ளோபின் உருவாக்கும் மரபணுவுக்கு வருவோம். அதுல இருக்கற 148 எழுத்துக்கள் ATG GTG CAT CTG ACT CCT GAG GAG – ன்னு ஆரம்பிக்குது. அது 144 அமினோ அமிலங்களைத் தயாரிக்க ஆணையிட்டு ஹீமோக்ளோபின் புரதத்தை உருவாக்குது."

"சரி, அதுக்கு எதுக்கு அவ்வளவு எழுத்து நீட்டி முழக்கறீங்க? முதல் மூணு சொன்னாப் போதாதா?" என்றான் கிரண்.

சூர்யா ஒரு யூகத்தை உதிர்த்தார். "கிரண், எனக்கென்னெவோ அதுக்கு முக்கியமான காரணம் இருக்குன்னு தோணுது. அவர் சொன்ன அந்த எட்டு மூன்றணு-எழுத்துக்கள்ள கடைசில இருக்கற ஒண்ணுல எதோ மாற்றம் இருந்தா அது அந்தப் பரம்பரைக்கே தொடரும் மரபணுப் பிரச்சனை எதாவது ஒண்ணு உருவாக்கும்னு தோணுது."

என்ரிக்கே கை தட்டினார். "அடி சக்கை. பிளந்து கட்டிட்டீங்க சூர்யா! ஷாலினி சரியான ஆளைத்தான் பரிந்துரைச்சிருக்கே. எக்ஸாக்ட்லி ரைட் சூர்யா. அதுல ஏழாவது மூன்றணு-எழுத்து GAG; அது GTG-ன்னு ஒரே ஒரு எழுத்தணு மட்டும் மாறினா, அதாவது A-க்கு பதிலா T வந்தா வேற அமினோ அமிலம் தயாரிக்கப்பட்டு சிதைந்த புரதம் உருவாகி சிக்கிள் ஸெல் அனீமியா என்னும் நோய் பரம்பரை பரம்பரையாக வருகிறது. அந்த நோய் இருந்தால் ஒவ்வொரு சிவப்பு உயிரணுவிலும் சரியான அளவு ஆக்ஸிஜன் உடலில் எடுத்துச் செல்லப்படாமல், உபாதைகள் உண்டாகின்றன."

சூர்யா இடைமறித்தார். "அது ஆப்பிரிக்காவில் நிறைய இருப்பதாகவும் அதனால், அமெரிக்காவுக்கு அடிமைகளாக இழுத்துவரப் பட்டவர்களின் பரம்பரைகளுக்கு அமெரிக்காவிலும் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்."

என்ரிக்கே கை தட்டினார். "பிரமாதம். அப்படித்தான். அப்படி அந்த மரபணுவின் ஒரே ஒரு எழுத்தில் ஒரே ஒரு எழுத்தணு மாற்றத்தால் எப்படி ஒரு விபரீத விளைவு ஏற்படுகிறது பார்த்தீர்களா? அப்படியானால், அந்த ஒரே ஒரு எழுத்தை மட்டும் சரிசெய்தால் அந்த நோயை ஒருவருக்கு மட்டுமல்லாமல் வருங்காலப் பரம்பரைக்கே குணப்படுத்தலாம் அல்லவா! ஆனால் அப்படிச் செய்ய வேண்டுமானால் க்ரிஸ்பரின் நுணுக்கமான செயல்முறை நுட்பம் தேவை."

ஷாலினி சிலாகித்தாள். "ஆஹா, பிரமாதமான விளக்கம். சூர்யா, இன்னும் விளக்கம் தேவையா?"

சூர்யா ஆனந்தப் புன்னகை பூத்தார். "இல்லை ஷாலினி. க்ரிஸ்பர் மூலமா ஒரு முழு மரபணு மாத்தாம, அந்த ஒரே ஒரு எழுத்தைப் பிசகாமல் ஒவ்வொரு உயிரணுவிலும் மாற்ற முடியும்னு புரியுது. என்ரிக்கே, இப்போ க்ரிஸ்பர் எப்படி அந்த அளவுக்கு நுணுக்கமா உயிரணுக்களுக்குள்ள செயல்படுதுன்னு விளக்குங்களேன்!"

"சூர்யா, கனகச்சிதமா சுருக்கிக் கூறிட்டீங்க! சரி இப்ப அந்த செயல்பாட்டு முறை பற்றிய விவரங்களைப் பார்ப்போம்" என்று என்ரிக்கே விளக்க ஆரம்பித்தார்....

(இக்கதையில் உள்ள மரபணு விவரங்கள் பல விக்கிபீடியா (Wikipedia) கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. விக்கிபீடியாவுக்கு மனமார்ந்த நன்றி)

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com