மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காடாகிப் போகும் நாடு
வனவாசத்துக்குக் கிளம்பும்போது தருமபுத்திரன் வந்து பீஷ்மர், சோமதத்தன், பாஹ்லீகன், துரோணர், கிருபர், அசுவத்தாமா, திருதராஷ்டிரன், கௌரவ நூற்றுவர், சபையோர் என்று எல்லோரிடமும் விடைபெறுகிறான். விடைபெறுகையில், "பெரும் பாக்கியத்தையுடைய காந்தாரியையும், என் தாயாரான குந்தியையும் விடை கேட்டுக்கொள்கிறேன். விடைபெற்றுக்கொண்டு சென்று, திரும்பி வந்து உங்களெல்லோரையும் காண்பேன்" என்று சொன்னார். அவர்கள் எல்லோருமே வெட்கத்தினால் குன்றி எதுவும் பேசாமல் 'சிறந்த புத்தியுள்ள தர்மராஜாவினுடைய க்ஷேமத்தை' மனத்துக்குள் பிரார்த்தித்துக் கொண்டார்கள் என்று வியாசர் குறிப்பிடுகிறார்.

தருமன் விடைபெற்றுக்கொள்ளும் இந்தச் சமயத்தில் விதுரர் குறுக்கிடுகிறார். "ராஜபுத்ரியும் பூஜிக்கத்தக்கவளும் கஷ்டம் தாங்காதவளும் எப்போதும் சௌக்கியத்திலேயே பழகினவளும் வயது சென்றவளுமான குந்தி காட்டுக்குச் செல்லத் தகாதவள். மேன்மை பொருந்திய குந்தி இங்கேயே என் வீட்டில் மரியாதை செய்யப்பட்டு வசிப்பாள். பாண்டவர்களே! இதனை அறியுங்கள் உங்கள் எல்லோருக்கும் ஆரோக்கியம் உண்டாகட்டும் என்று சொன்னார்." (ஸபா பர்வம், அனுத்யூத பர்வம், அத். 100; பக். 328)

இதைக் கேட்கும் பலருக்கு ஆச்சரியம் உண்டானால் வியப்பில்லை. ஏனெனில் விதுரர் ஏதோ குடிசையில் எளிமையான முறையில் வாழ்ந்து வந்தவர் என்பது மாதிரியான சித்திரிப்புகளை நாம் கேட்டுப் பழகியிருக்கிறோம். குறிப்பாக உத்தியோக பர்வத்தில் அஸ்தினாபுரத்துக்குக் கண்ணன் தூதுபோனதையும் அங்கே அவன் விதுரன் மனையில் தங்கியிருந்ததையும் கண்ணன் விருந்துண்டதன் பிறகு வாழைப்பழத்தை உரித்துக் கொடுப்பதாய் நினைத்துக்கொண்டு, பழத்தைக் கீழே போட்டுவிட்டு தோலைக் கண்ணனுக்குத் தின்னக் கொடுத்த கதையைக் கேட்டிருக்கிறோம். உருக்கமும் நெகிழ்ச்சியும் நிறைந்த கதை இது. இந்தக் கதையைச் சொல்பவர்கள், விதுரர் ஏதோ ஒரு குடிசையில் குடியிருந்ததைப் போலச் சித்திரிப்பார்கள். வேடிக்கை என்னவென்றால் வியாச பாரதத்தின் உத்தியோக பர்வத்தில் கண்ணன் விதுரன் வீட்டில் தங்கியிருந்து விருந்துண்டதைப் போல ஒரு சம்பவம் சொல்லப்படவில்லை. இந்தச் சம்பவம் முழுக்க முழுக்க வில்லிபுத்தூராரின் படைப்பு. வில்லிபுத்தூரார்கூட கண்ணன் விதுரர் மாளிகையில் இருந்ததாய்த்தான் குறிப்பிடுகிறார். வில்லி பாரதத்தில் கண்ணன் விதுரர் வீட்டில் தங்கியிருப்பதை விவரிக்கின்ற ஒரு பாடலைப் பார்ப்போம்:

வேந்தர் யாரையும் விடைகொடுத்து அகன்றபின் விமலன்
வாய்ந்த மாளிகை நடுவணொர் மண்டபம் குறுகி
ஆய்ந்து வல்லவர் நவமணி அழுத்திய அரியேறு
ஏந்தும் ஆசனம் இடப்பொலிந்து அதன்மிசை இருந்தான்.


எதிர்கொண்டு அழைத்த எல்லா மன்னர்களுக்கும் விடைகொடுத்து அனுப்பியபின் கண்ணபிரான் விதுரருடைய மாளிகையில் ஒரு மண்டபத்துக்கு வந்து அங்கே போடப்பட்டிருந்த நவமணிகளும் பதிக்கப்பட்ட அரியாசனத்தில் அமர்ந்தான். அது மாளிகை, அந்த மாளிகையில் இருந்த மண்டபத்தில் போடப்பட்டிருந்த நவமணிகளும் பதிக்கப்பட்ட அரியாசனம் என்ற வருணனையே அந்த மாளிகையின் செல்வச் செழிப்பைச் சுட்டிக் காட்டுகிறது. பாண்டவர் வனவாச காலத்தில் குந்தி விதுரருடைய இந்த மாளிகையில்தான் தங்கியிருந்தாள். தங்கள் தாயை விதுரரிடம் ஒப்படைத்துவிட்டு பாண்டவர்கள் ஐவரும் விடைபெற்றனர்.

ராமன் வனம் புகுந்தபோது 'உடன் வருவோம்' என்று வலியுறுத்திக் கூறிய லக்ஷ்மணனையும் சீதையையும் உடனழைத்துச் சென்றான். அவர்களோடு கூடவே வருவோம் என்று சொன்னபடி அயோத்தி மக்கள் பலரும் கூட்டங் கூட்டமாகக் கிளம்பினர். அவர்களில் பலர் சொன்னதைக் கம்பன் பாடுகிறான்.

'பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து, பிறந்து உலகம்
முற்று உடைய கோவைப் பிரியாது மொய்த்து ஈண்டி,
உற்று உறைதும்; யாரும் உறையவே, சில் நாளில்.
புற்று உடைய காடு எல்லாம் நாடாகிப் போம்'
என்பார்.

வரத்தால் பெற்று தனதாக்கிக்கொண்ட நாட்டைக் கைகேயியின் மகனுக்கே கொடுத்துவிட்டு, காட்டுக்குக் கிளம்புகின்றவனும் இப்போதும் உலகம் அனைத்தையும் தனக்கு உரிமையாகக் கொண்டவனுமான ராமனைப் பிரியாதபடி எப்போதும் நாம் கூடவே வாழ்வோம். அப்படி வாழ்ந்தால் சிலகாலத்தில் பாம்புப் புற்றுகள் நிறைந்த காடு முழுவதுமே நாடாகிப் போகும். ஏனென்றால் மக்கள் எங்கே வாழ்கிறார்களோ அதுதான் நாடு. ராமனுடன் காட்டில் வாழ்ந்தால் அது விரைவிலேயே நாடாகிப் போகும் என்றார்கள்.

கம்பராமாயணத்தில் காணப்படும் அதே சொற்களை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த மக்களும் பேசியிருக்கிறார்கள் என்பது வியாச பாரதத்தில் தெரிய வருகிறது. பாண்டவர்கள் மரவுரியுடுத்து வனவாசத்துக்குக் கிளம்பியபோது மக்கள் தமக்குள் பேசிக்கொண்டதை வியாசர் குறிப்பிடுகிறார்: "ஆதலால் நாமும் அங்கே அவர் சகோதரர்கள் போலவே புத்திரர்களோடும் சுற்றத்தாரோடுங்கூடத் தர்மராஜா போகுமிடத்திற்கே செல்வோம். தோட்டங்களையும் நிலங்களையும் வீடுகளையும் விட்டு இன்ப துன்பங்களை ஒன்றாக அனுபவித்துக்கொண்டு மிக்க தர்மிஷ்டரான தர்மராஜர் பின்செல்வோம் .... ... யாகங்கள் மந்திர ஜபங்கள், ஹோமங்கள் அழிந்தும் பாத்திரங்கள் உடைந்தும் கெட்ட காலத்தினால் கெடுக்கப்பட்டவை போன்ற, நம்மால் விடப்பட்ட வீடுகளைச் சகுனி ஆளட்டும். பாண்டவர்கள் போகும் வனமே நகரமாகட்டும்; நம்மால் விடப்பட்ட நகரம் வனமாகட்டும்." (ஸபா பர்வம். அனுத்யூத பர்வம், அத். 101; பக். 331). மக்கள் வசிக்குமிடமே நாடு. நாம் வசிப்பதால் காடும் நாடாக மாறிப்போகும் என்று கம்பன் பேசியிருக்கும் சொற்கள், மகாபாரதத்தின் இந்தக் கட்டத்தை அப்படியே பிரதிபலிக்கக் காணலாம்.

ஒருபுறம் இப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்க, மறுபுறத்தில் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கேட்டு நூற்றுவர்களுடைய மனைவியர்களே கலங்கினார்கள். "திருதராஷ்டிர புத்திரர்களின் மனைவிகள் அனைவரும் சூதாடின சபையில் திரெளபதியைக் கொண்டு வந்ததையும் வஸ்திரத்தை இழுத்ததையும் முழுதும் கேட்டுக் கௌரவர்களை மிகவும் திட்டிக் குரல்விட்டு அழுதனர்" என்கிறார் வியாசர். (அத். 101; பக். 334)

பாண்டவர்கள் மரவுரியைத் தரித்துக்கொண்டு வனவாசத்துக்குக் கிளம்பிய கோலத்தை திருதராஷ்டிரனிடத்திலே விதுரர் வந்து சொன்னார்: "குந்தி புத்திரனான யுதிஷ்டிரன் வஸ்திரத்தினால் முகத்தை மூடிக்கொண்டு போகிறான். பீமன் தனது பெருங்கைகள் இரண்டையும் பார்த்துக்கொண்டு போகிறான். ஸவ்யஸாசி (அர்ச்சுனன்) மணல்களை இறைத்துக்கொண்டே தர்மராஜாவின் பின் செல்லுகின்றான். மாத்ரியின் புத்திரனான சகதேவன் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டு போகிறான். உலகத்தில் மிக அழகான நகுலன் மனஞ்சோர்ந்து உடம்பெல்லாம் புழுதியைப் பூசிக்கொண்டு தர்மராஜாவின் பின் செல்லுகிறான். நீண்ட கண்களையுடையவளும் அழகியவளுமான திரெளபதி கூந்தல்களினால் முகத்தை மறைத்துக்கொண்டும் அழுதுகொண்டும் ராஜாவின் பின்செல்லுகிறாள். ராஜனே! தௌமியர் மார்க்கங்களிலுள்ள தர்ப்பங்களைக் கையினால் எடுத்து ருத்திரையும் யமனையும் பற்றின சாமங்களை ஸ்வரத்துடன் சொல்லிக்கொண்டு செல்கிறார்." (அத். 102; பக் 335) இவர்களில் தௌமியர் என்பவர் பாண்டவர்களுடைய புரோகிதராக விளங்குபவர். பாஞ்சாலியின் திருமணத்துக்கு முன்னால் அவர்கள் ஏகசக்ரபுரத்திலிருந்து கங்கையைக் கடக்கின்ற சமயத்தில், 'எப்போதும் ஒரு அந்தணரை முன்னிட்டுக்கொண்டு செல்லுங்கள்' என்று சித்திரரதன் முதலானவர்கள் சொன்னதன் பேரில் தங்களோடு இருத்திக் கொண்ட அந்தணர்.

இவர்கள் இப்படிச் செல்வதன் பொருள் என்ன என்று திருதராஷ்ரன் விதுரரைக் கேட்க, "தன்னுடைய கோபம் மிகுந்த பார்வை இந்த ஊரில் படுவதால் மக்களுக்குத் துன்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று யுதிஷ்டிரன் தன் முகத்தை மூடிக்கொண்டு செல்கிறான்; கைகளின் வன்மையில் எனக்கு ஈடானவன் இல்லை என்பதை உணர்த்தும்படியாக பீமன் கைகளைப் பார்த்தபடியும் அகல விரித்தபடியும் செல்கிறான்; வனவாசத்துக்குப் பிறகு என் அம்புகள் இப்படித்தான் இறையப் போகின்றன என்பதை உணர்த்தும் வண்ணமாக அர்ச்சுனன் மணலை வாரி இறைத்தபடி செல்கிறான். இப்படிப்பட்டதொரு சமயத்தில் என் முகத்தை யாரும் தெரிந்துகொள்ளல் ஆகாது என்று நினைத்த சகதேவன் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டு போகின்றான்; போகும் வழியில் பெண்களின் மனத்தைக் கவரலாகாது என்று நினைத்து நகுலன் உடலெங்கும் புழுதியைப் பூசிக்கொண்டு செல்கிறான்; வீட்டு விலக்காக இருந்த பாஞ்சாலி ஒற்றை வஸ்திரத்தோடும் விரிந்த கூந்தலோடும் ஏன் செல்கிறாள் என்றால், 'எவரால் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதோ அவர்களுடைய மனைவியர்கள், பதினான்காவது வருடத்தில் கணவர்களும் மைந்தர்களும் உறவினர்களும் கொல்லப்பட்டு, உடலெல்லாம் தூசி படிய, தர்ப்பணம் செய்துவிட்டு அஸ்தினாபுரத்தில் பிரவேசிப்பார்கள்' என்பதை உணர்த்துகிறாள்" என்றார். பாஞ்சாலி செய்த சபதமாக நாம் அறிகின்ற ஒன்று, விதுரர் திருதராஷ்டிரனுக்கு விவரித்துச் சொன்ன வருணனைக்குள்ளே கலந்து வெளிப்படுகின்றது.

ஐவரின் செய்கைக்குப் பொருள் இதுவென்றால், அவர்களுடைய புரோகிதரான தௌமியர் தன்னுடைய செய்கையால் உணர்த்தியது எதுவென்றால் "யுத்தத்தில் பரத வம்சத்தவர்கள் கொல்லப்பட்ட பிறகு கௌரவர்களின் புரோகிதர்கள் இப்படிப்பட்ட சாமவேத மந்திரங்களையே சொல்லப் போகின்றார்கள் என்று விதுரர் விளக்கினார். அப்போது சபையிலே பல முனிவர்கள் புடைசூழ நாரதர் தோன்றினார். "இதற்குப் பதினாலாவது வருஷத்தில் கௌரவர்கள் தாங்கள் செய்த பிழையினாலும் பீமார்ஜுனர்களுடைய பலத்தினாலும் அழியப் போகின்றனர்" என்று உரைத்தார். துரியோதனனும் சகுனியும் கர்ணனும் துரோணரையே தஞ்சமென்று நினைத்தார்கள். அவரிடத்திலே தஞ்சம் புகுந்தார்கள்.

துரோணருடைய நிலைப்பாடு என்னவாக இருந்தது? பார்க்கலாம்...
(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com