வ.வே.சு. ஐயர்
அது 1908ம் வருடம். லண்டனில் ஒரு இந்திய விடுதி. அதில் இந்தியாவிலிருந்து மேற்படிப்பிற்காகச் சென்றிருந்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் தங்கியிருந்தார்கள். கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள விடுதி என்பதால் அதில் பத்துப் பேர்தான் தங்கியிருந்தனர். மாணவர் அல்லாதவர்களும் சிலர் இருந்தனர். அவர்களில் சிலர் புரட்சிக் குழுவில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்களும்கூட.

மறுவாரம் தீபாவளி. அந்த விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கு அது பெரிய கொண்டாட்டம் அல்ல என்றாலும், ஒரே ஒருவருக்கு மட்டும் லண்டனில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரையும் சேர்த்து அதைச் சிறப்பாகக் கொண்டாடினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. "இந்த லண்டன் மாநகரில் இருக்கும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். சிலர் செல்வந்தர்களின் பிள்ளைகள். இந்த நாட்டில் இன்பமாகக் காலம் கழிப்பதைத் தவிர இந்திய நாட்டைப் பற்றியோ, அங்கு நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியோ பெரும்பாலானவர்களுக்கு அக்கறை இல்லை. அவர்களுக்கு அதில் கவனம் ஏற்படுத்த வேண்டும்; அதன்மூலம் தேசபக்தி ஊட்ட வேண்டும். இந்தியாவைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்" என்று அவர் முடிவு செய்தார். நகரின் சிறிய விடுதி ஒன்றில் விருந்துடன் சிறப்புச் சொற்பொழிவு ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். சுமார் 120 பேர் கலந்து கொள்ளச் சம்மதித்திருந்தனர்.

அந்த நாளும் வந்தது.
இரவு ஏழு மணிக்கு விருந்து. அசைவமில்லாத இந்தியச் சமையல்தான். அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளரின் சிறப்புச் சொற்பொழிவு. அதனால் மாலை 1.00 மணி முதலே ஆறுபேர்கள் அடங்கிய ஒரு குழு சமையல் வேலையில் இறங்கியிருந்தது. 120 பேருக்கு, அதுவும் அன்னிய மண்ணில் சமைப்பதென்றால் சும்மாவா? பாத்திரம் கழுவுவதில் ஆரம்பித்து, காய்கறி நறுக்குவது, குடி தண்ணீர் நிரப்பி வைப்பது, சமைப்பது, மேசை-நாற்காலிகளை ஒழுங்குபடுத்துவது என்று நிறைய வேலைகள் இருந்தன.

வேலை தொடங்கி அரைமணி நேரம் இருக்கும். அங்கே வேகவேகமாக வந்து சேர்ந்தார் ஒருவர். "இங்கேதானே விருந்தும், சொற்பொழிவும் நடக்க இருக்கிறது?" என்று கேட்டார். அங்கே உள்ளவர்களும் "ஆமாம்" என்று சொல்லவே, "சரி" என்று தலையசைத்தவராய், தானே இழுத்துப் போட்டு பலவேலைகளைச் செய்தார். உதவிக்கு ஒரு ஆள் கிடைத்ததே என்ற சந்தோஷத்தில் அவரிடம் செமத்தியாக வேலை வாங்கினார்கள். தட்டு கழுவுவது, தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்வது, காய்கறி நறுக்குவது என்று அந்த மனிதர் முகம் சுளிக்காமல் எல்லா வேலையும் செய்தார்.

மணி ஆறு ஆகிவிட்டது. விருந்து தயாராகி விட்டது. அங்கே வந்து சேர்ந்தார் அந்த விருந்தையும், சொற்பொழிவையும் ஏற்பாடு செய்த மனிதர். "என்ன எல்லாம் தயாராகிவிட்டதா?" என்றபடி மேற்பார்வை செய்தவர், அந்தப் புதிய நபரைப் பார்த்ததும் அதிர்ந்தார். அவரோ வேர்க்க விறுவிறுக்க தண்ணீர்த் தொட்டியை நிரப்பிக் கொண்டிருந்தார். "என்ன இது, இவரைப் போய் வேலை வாங்கிக் கொண்டிருக்கின்றீர்களே, இவர் யார் என்று தெரியாதா உங்களுக்கு?" என்று கோபமாகக் கேட்டார். அவர்களும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"இன்று சிறப்புச் சொற்பொழிவு ஆற்றப்போவதாக ஒருவரைப் பற்றி நான் சொல்லியிருந்தேனே, அவர்தான் இவர். தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் பாரிஸ்டர். மிஸ்டர் எம்.கே. காந்தி இவர்தான்" என்றார்.

கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி. சிறப்புச் சொற்பொழிவாளரையே யார், என்ன என்றுகூட விசாரிக்காமல் கடுமையாக வேலை வாங்கி விட்டோமே என்று வெட்கமும் கூட. அவர்கள் 'மிஸ்டர்' காந்தியிடம் மன்னிப்புக் கேட்டனர். உடனே காந்தி, "நான் யாரை, எதற்காக மன்னிக்க வேண்டும்? இப்போது என்ன நடந்துவிட்டது என்று மன்னிப்புக் கேட்கிறீர்கள்! நாம் சாப்பிடப் போகும் விருந்துக்கான உணவை நாம் சேர்ந்து தயாரித்தோம். நான் மகிழ்ச்சியுடன்தான் இதைச் செய்தேன். யாரும் இதற்காக மனம் வருந்த வேண்டியதில்லை" என்றார். மட்டுமல்ல; விருந்து ஆரம்பித்ததும் அனைவருக்கும் பரிமாறிவிட்டு, கடைசியாகத்தான் தனது இருக்கையில் சென்று அமர்ந்து உண்டார். அதன் பின் மிகச்சிறந்த சொற்பொழிவை ஆற்றியபின் விடைபெற்றார்.

ஐயரும் காந்தியும்
சரி, வ.வே.சு. ஐயர் பற்றிய கட்டுரையில் காந்தி எப்படி வந்தார் என்கிறீர்களா? அந்த நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சொற்பொழிவாளரை ஏற்பாடு செய்தவரே வ.வே.சு. ஐயர்தான். மட்டுமல்ல; தான் தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டிருந்தாலும், புரட்சிக்காரர்களான சாவர்க்கர் போன்றோரின் நண்பராக இருந்தாலும் நாடு சுதந்திரம் பெற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஐயருக்கு இருந்தது. அதனாலேயே அகிம்சாவாதியான காந்தியை அவர் தலைமை தாங்கிச் சிறப்புச் சொற்பொழிவாற்ற அழைத்தார்.

வ.வே.சு. ஐயருக்கு காந்தியுடன் முதல் சந்திப்பு லண்டனில் நிகழ்ந்தது. அப்போது ஐயர் புரட்சிக்குழுவில் ஒருவர். தீவிரவாதத்தைப் பயன்படுத்தியாவது இந்தியாவிற்கு விடுதலை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணமுடையவர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் சேரன்மாதேவி குருகுலப் பிரச்சனைக்காக அவர் காந்தியை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அது காந்தியுடனான அவரது நான்காவது சந்திப்பு. அப்போது ஐயர் முழுக்க முழுக்க மிதவாதியாக மாறி இருந்தார். அதற்குக் காரணம் காந்தியுடன் அந்த லண்டன் சந்திப்பில் விழுந்த விதைதான்.

சுதந்திரப் போராட்டத்தின் புரட்சி வீரராக ஆரம்பித்த வ.வே.சு. ஐயரது வாழ்க்கை எழுத்தாளராக, கட்டுரையாளராக, பத்திரிகையாளராக, குருகுல நிறுவனராக, ஆசிரியராகப் பரிணமித்து இறுதியில் பாபநாசம் அருவியில் முடிந்து போனது.

இளமைக் காலம்
திருச்சி கரூரை அடுத்த சின்னாளப்பட்டி வ.வே.சு. ஐயரின் பிறந்த ஊர். ஏப்ரல் 2, 1881ல் பிறந்தார். தந்தையின் பூர்வீகம் திருச்சிக்கு அருகே இருந்த வரகனேரி. வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்பதன் சுருக்கம் தான் வ.வே.சு. ஐயர் என்பது. தாயாரின் பெயர் காமாட்சி அம்மாள். வரகனேரியில் பள்ளிப்படிப்பை முடித்தார். வீட்டிலேயே தனியாக ஆங்கிலமும் அவருக்குக் கற்பிக்கப்பட்டது. மெட்ரிகுலேஷன் படிப்பில் மாவட்டத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பி.ஏ. பயின்றார். அங்கு லத்தீன் மொழியை சிறப்புப் பாடமாக எடுத்திருந்தார். பி.ஏ.விலும் மாவட்டத்தின் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். ஓய்வுநேரத்தில் ஆங்கில இலக்கியத்தை ஆர்வத்துடன் படித்தார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும், எழுதும் ஆற்றல் கைவந்தது. தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். இது போக, குடும்ப வழக்கப்படி சம்ஸ்கிருதமும், வேதமும் கற்றார். இளவயதிலேயே அத்தைமகள் பாக்கியலட்சுமியுடன் திருமணம் நிகழ்ந்தது. இல்லறம் தொடர்ந்தது. தந்தையின் விருப்பப்படி வழக்குரைஞர் ஆவதற்காகச் சென்னைக்குச் சென்று பி.எல். பட்டப்படிப்பை முடித்தார்.

லண்டனில் ஓர் உளவாளி
திருச்சியில் வழக்குரைஞராகச் சில காலம் பணியாற்றியவர், மைத்துனரின் அழைப்பை ஏற்று ரங்கூனுக்குச் சென்றார். அங்கு வழக்குரைஞராகப் பணியாற்றினார். ஆனால் அவரால் கீழ்நீதி மன்றங்களில் மட்டுமே பணியாற்ற முடிந்தது. உயர்நீதி மன்றங்களில் பணியாற்ற வேண்டுமானால் லண்டனுக்குச் சென்று பார்-அட்-லா படித்து பாரிஸ்டர் ஆனால் மட்டுமே முடியும் என்று அன்று பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் வைத்திருந்தது. பாரிஸ்டர் பட்டப் படிப்பிற்காக லண்டனுக்குச் சென்றார் ஐயர். ஆபிரகாம் லிங்கன் சட்டக் கல்லூரியில் பயிலத் துவங்கினார். அக்கால கட்டத்திலேயே அவருக்கு சுதந்திர தாகம் மிகுந்திருந்தது. "போராடியாவது, புரட்சி செய்தாவது சுதந்திரம் பெற்றே தீருவது" என்ற எண்ணத்தில் இருந்தார். லண்டன் வாசம் அவரை தீவிரப் புரட்சியாளர் ஆக்கியது. கல்லூரியில் உடன் படித்த விநாயக தாமோதர சாவர்க்கரின் நட்பு அதற்கு அடிப்படைக் காரணமாய் அமைந்தது. இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக ஆயினர். நாட்டு விடுதலைக்காகப் பல்வேறு ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டனர். நண்பர்களை ஒருங்கிணைத்து 'சுதந்திர இந்தியச் சங்கம்' என்னும் ரகசிய சங்கம் ஒன்றையும் அவர்கள் நடத்தி வந்தனர். லண்டனிலிருந்தபடியே, சென்னை மற்றும் புதுச்சேரியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த 'இந்தியா' போன்ற தமிழ் இதழ்களுக்குப் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார் ஐயர். சாவர்க்கரும் அவ்வாறே வட இந்திய இதழ்களில் புரட்சிக் கருத்துக் கொண்ட கட்டுரைகளை எழுதினார்.

ஆனாலும் அவர்களுக்கு அங்கே மிகப்பெரிய தொல்லையாக இருந்தது பிரிட்டிஷ் உளவாளிகள் தாம். உளவாளி ஒருவரையே தன் ஆளாக ஆக்கி அவர்மூலம் தவறான செய்திகளை பிரிட்டிஷ் உளவுத் தலைமைக்கு அனுப்பி வந்தார் ஐயர். இந்நிலையில் பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்றார். என்றாலும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பதாக ராஜப் பிரமாணம் எடுத்துக்கொள்ள விரும்பாமல், அந்தப் பட்டத்தைத் துறந்தார். உறுதிமொழி எடுத்துக்கொள்ளாததால் அவர்மீது சந்தேகப்பட்டு உளவாளிகள் எப்போதும் அவரைச் சுற்றி வந்தனர். அவர்களைப் போக்குக்காட்டி ஏமாற்றி எப்போதும் போலத் தனது பணிகளை லண்டனில் தொடர்ந்தார் ஐயர். சாவர்க்கருடனான நட்பும் உரையாடலும் அவரை எப்போதும் உற்சாகமாகச் செயலாற்றும்படி வைத்தன. அது வெகுகாலம் நீடிக்கவில்லை

லண்டனில் மாணவர் வேடத்தில் வந்து தங்கியிருந்தார் மதன்லால் திங்க்ரா என்னும் இளைஞர். அவருக்கு வங்காளத்தை இரண்டாகப் பிரித்த கர்சன் பிரபுவின் மீது தீராத கோபம் இருந்தது. கர்சனுக்கு அந்தத் தவறான ஆலோசனைகளை வழங்கிய கர்ஸான் வில்லி, லால்காக்கா இருவரும் பணி ஓய்வுபெற்று லண்டனுக்குத் திரும்பியிருந்தனர். அதனை அறிந்த மதன்லால் திங்க்ரா திட்டமிட்டு அவர்கள் இருவரையும் ஒருநாள் சுட்டுக் கொன்றுவிட்டார். தங்கள் நாட்டிலேயே தங்கள் அதிகாரி ஒருவர் இந்திய இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டது காவல்துறையினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது. ஸ்காட்லாண்ட் போலீசாரைக் கைவசம் வைத்திருந்த அவர்கள் தங்கள் உளவுப்பணிகளை முடுக்கிவிட்டனர். இதனால் சாவர்க்கர் ரகசியமாக பாரீஸ் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பாரிசுக்குப் போ...
இந்நிலையில் இந்தியாவின் நாசிக்கில் ஜாக்ஸன் என்ற ஆங்கிலேய உயரதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு ஆலோசனை வழங்கியதாகவும், அவரைக் கொல்ல லண்டனிலிருந்து துப்பாக்கியை அனுப்பி வைத்ததாகவும் சாவர்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரைக் கைது செய்யவும் ஏற்பாடுகள் நடந்தன. அவர் லண்டனில் இல்லாத காரணத்தால் அவரை ஒன்றும் செய்ய இயலவில்லை. மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் தான்மட்டும் தனித்துப் பாரீஸில் வசிக்க மனம் விரும்பாத சாவர்க்கர் ஒரு கப்பலில் லண்டனுக்குப் புறப்பட்டு வந்தார். இது ரகசியப் போலீசாரின் கவனத்துக்கு வந்தது. கப்பலில் இருந்து லண்டன் மாநகரில் கால்வைத்த சாவர்க்கர் உடனே கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் மிகவும் வருத்தமுற்றார் வ.வே.சு. ஐயர். இந்தச் சமயத்தில் அவரது தாயார் அகால மரணமடைந்ததாக வந்த செய்தி அவருக்கு மேலும் துயரத்தைத் தந்தது. ஆனாலும் தன் லட்சியத்தைக் கைவிடவில்லை. தேம்ஸ் நதிக்கரையில் தாயாருக்கான காரியங்களைச் செய்து மனம் தேறினார். பின் அடிக்கடி சிறைக்கூடத்துக்குச் சென்று சாவர்க்கரைச் சந்தித்து ஆலோசனை நடத்திவந்தார். இது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்களது குறி வ.வே.சு. ஐயரின் மீது திரும்பியது. அவரையும் கைது செய்ய நினைத்துக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடத் துவங்கினர். அந்தத் தகவல் ஐயருக்குத் தெரியவந்தது. அவர் தலைமறைவானார்.

காவல்துறையினர் லண்டனில் இருந்த இந்திய விடுதிகள், இந்தியர் வசிக்கும் பகுதிகளில் தீவிரமாகத் தேடியும் ஐயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறுவேடத்தில் அவர் லண்டனை விட்டு வெளியேறினார். கப்பலில் ஃபிரான்ஸுக்கு அவர் சென்று கொண்டிருந்தபோது அவர் வைத்திருந்த கைப்பெட்டியில் இருந்த 'வி.வி.எஸ்' என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தேகப்பட்டு விசாரித்தார் ஒரு காவல்துறை உளவாளி. சரளமாக ஆங்கிலத்தில் பேசியும் தன் பெட்டியைத் திறந்து காண்பித்தும் (அதில் நீண்ட டர்பனும், ஷாலும், கம்பராமாயண நூலும் இருந்தன) தன் பெயர் 'வீர விக்ரம் சிங்' என்று நம்பவைத்தார். இவ்வாறாக பிரிட்டிஷாரை ஏமாற்றி அவர் பாரிஸை அடைந்தது ஒரு சாகஸக் கதை.

சதியும் விதியும்
அங்கே காமா அம்மையார் ஐயரை ஆதரித்தார். அங்கும் தனது சுதந்திரப் போராட்டப் பணிகளை ரகசியமாகச் செய்துவந்தார் ஐயர். சாவர்க்கரை விடுதலை செய்வதற்கான பணிகளிலும் ஈடுபட்டார். சதித் திட்டங்களைத் தீட்டினார். சில மாதங்களுக்குப் பிறகு பிரிட்டிஷார் சாவர்க்கரை விசாரிக்கக் கப்பலில் இந்தியா அழைத்துச் சென்றனர். ஃபிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள மார்சேல் துறைமுகத்தைக் கப்பல் அடைந்தபோது ரகசியத் திட்டத்தின்படி சாவர்க்கர் கப்பலில் இருந்து கீழே குதித்தார். கடலில் நீந்தித் தப்பிக்க முயற்சித்தார். பிரிட்டிஷ் வீரர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். ஐயர், காமா அம்மையாருடன் சாவர்க்கரை அழைத்துச் செல்லக் கரையிலேயே காத்திருந்தார். சாவர்க்கரும் நீந்திக் கரை சேர்ந்தார். ஐயர், அவரை அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது ஃபிரெஞ்சுப் போலீசார் சுற்றி வளைத்தனர். மறுபுறம் பிரிட்டிஷ் போலீசார் சாவர்க்கரை தங்களிடம் ஒப்படைத்துவிடும்படிக் கெஞ்சினர். ஃபிரான்ஸ் தேசச் சட்டப்படி அடைக்கலம் புகுந்தவரைக் காப்பற்றுவது அவசியம். ஆனால், போலீசார் அதற்கு மாறாகச் சாவர்க்கரை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தனர். சட்டப்படி அது தவறு என்று ஐயர் வாதிட்டும் பயனில்லை. முயற்சி தோல்வியுற்றது. ஐயர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

பாரிஸிலும் அவருக்கு ரகசியப் போலீசாரால் தொல்லைகள் தொடர்ந்தன. சாவர்க்கர் நாடுகடத்தப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற செய்தி வந்து சேர்ந்தது. சாவர்க்கருக்கு ஐம்பதாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் மிகவும் மனம் வருந்தினார் ஐயர். அதே காலத்தில் அவரது குழந்தையான பட்டம்மாள் நோயுற்றுக் காலமான தகவல் வந்து அவரது மன உளைச்சலை மேலும் அதிகமாக்கியது. இனியும் லண்டனிலிருந்து பயனில்லை என்று முடிவுசெய்த ஐயர், அங்கிருந்து புறப்படத் தீர்மானித்தார். ஆனால் வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியும்படியாகச் சென்றால் நிச்சயம் கைது செய்யப்படுவோம் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே, ரகசியமாக இந்தியா புறப்பட்டுச் செல்ல முடிவு செய்தார்.

மாறுவேட மன்னர்
காமா அம்மையார் ஒரு பார்ஸி என்பதால் அவரிடமிருந்து பார்ஸி மக்களின் நடையுடை பாவனைகளையும், வழிபாட்டு முறைகளையும் கற்றுக்கொண்டார். பார்ஸி மொழியில் சரளமாகப் பேசவும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டார் .வேறு சில நண்பர்களிடமிருந்து முஸ்லிம் வியாபாரிகளின் பேச்சு, நடவடிக்கை, பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டார். ஏற்கனவே அவர் உருது அறிந்தவர் என்பதால் அதில் ஏதும் பிரச்சனை இருக்கவில்லை. பின், விரைவில் தான் பிரேசில் நகருக்குச் செல்ல இருப்பதாக ஒரு கடிதத்தைத் தன் குடும்பத்தாருக்கு அனுப்பி வைத்தார். அது வழக்கம்போல் உளவாளிகளின் பார்வைக்குக் கிடைத்தது. ஆகவே, அவர்கள், ஐயர் தப்பிப் போகாத வண்ணம் பிரேசில் செல்லும் கப்பல்களைத் தீவிரமாகக் கண்காணித்தனர். ஐயரோ அவர்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு, பார்ஸி கனவான் வேடத்தில் ரயில்மூலம் தப்பி ரோமாபுரியை அடைந்தார்.

ரோமில் சிலகாலம் வசித்தார். அதே சமயம், தான் பாரிஸில் இருப்பதாகப் பிரிட்டிஷ் அரசை நம்ப வைப்பதற்காக, பின் தேதியிட்ட பல கடிதங்களை எழுதி அவர் காமா அம்மையாரிடம் கொடுத்திருந்தார். காமாவும் லண்டனின் பல்வேறு இடங்களில் இருந்து அவ்வப்போது அதனைத் தபாலில் சேர்த்து வந்தார். அந்தக் கடிதங்கள் உளவாளிகளின் கைகளுக்குப் போய், ஐயர் லண்டனில் எங்கோ தலைமறைவாக இருக்கிறார் என்று அவர்களை நம்பவைத்தன.

ஐயர் ரோமிலிருந்து புறப்படும் போது தன்னை 'ருஸ்தும் சேட்' என்பவராக உருமாற்றிக் கொண்டு, அதற்கான ஆதாரங்களையும் (முகவரி அட்டைஉள்பட) தன் கைவசம் வைத்துக்கொண்டு எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்குச் சென்றார். அங்கு சில வாரங்கள் வசித்தவர், தன் உருவத்தில் சில மாற்றங்களைச் செய்து, ஒரு முஸ்லிம் ஆகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். பாரஸீக மொழியில் அச்சிடப்பட்ட முகவரி அட்டை ஒன்றையும் அச்சிட்டுக் கைவசம் வைத்திருந்தார். சில நாட்கள் அங்கும் இங்குமாகச் சுற்றியபின், ஹஜ் யாத்திரை முடித்துத் திரும்பும் பயணிகள் கூட்டத்துடன் சேர்ந்துகொண்டு இந்தியாவுக்குப் புறப்படும் கப்பலில் ஏறினார். அப்போது அவருக்கு வயது 29.

(தொடரும்)

பா.சு.ரமணன்

© TamilOnline.com