சாய் ஷ்ரவணம் (பகுதி - 1)
தங்கத்தை வடிவமைத்தால் சிலை, கல்லைச் செதுக்கினால் சிற்பம். ஒலியைச் செதுக்க முடியுமா? முடியும் என்கிறார் Sound Designer ஆகப் புகழ்பெற்றிருக்கும் சாயி ஷ்ரவணம். அந்தத் திறமையின் காரணமாக இவரைத் தேடி ஹாலிவுட் வருகிறது. சென்னையில் இவரது Resound India ஒலிப்பதிவுக் கூடத்தில் 'The Life of Pie' படத்துக்காக பாம்பே ஜெயஸ்ரீ பாட, அது லாஸ் ஏஞ்சலஸ் ஸ்டூடியோ ஒன்றில் பதிவானது! அந்தப் படத்தின் இசையமைப்பாளர் மைக்கல் டானாவுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததில் சாயி ஷ்ரவணத்துக்கும் பங்கு உண்டு. கணிதமேதை ராமானுஜம் குறித்த 'The Man Who Knew Infinity' என்ற படத்தின் இந்திய இசைக்கு இவரே முழுப் பொறுப்பேற்றார். லிங்கா, காவியத் தலைவன், கபாலி, மெர்சல், காலா எனப் பல தமிழ்ப் படங்களிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. வாருங்கள் சந்திக்கலாம் இசையமைப்பாளர், இசைக்கலைஞர், இசைத் தொழில்நுணுக்க வித்தகர், சங்கீத நாடக அகாடமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற சாயி ஷ்ரவணம் அவர்களை. பல ஆச்சரியமான தகவல்களைக் கேட்கத் தயாராக இருங்கள்....

இசைதான் மூச்சு!
என் அம்மா சொல்வார், நான் குழந்தையாக இருக்கும்போதே மூச்சிழுக்கும் 'வீசிங்' பிரச்சனை இருந்ததாம். மூச்சு விடமுடியாமல், அடிக்கடி ஆஸ்பத்திரி செல்லும் நிலைமை. அம்மா இரவில் சாய் பஜன் பாடுவார்கள். ஏனென்றால் குடும்பமே சாய் பக்தர்கள். அவர்கள் பாடும்போது மட்டும் சீராக மூச்சு விட்டுத் தூங்கிவிடுவேனாம். பாட்டை நிறுத்தினால் மீண்டும் மூச்சிழுப்பு. டாக்டர் "இந்தக் குழந்தைகாக நீங்கள் நாள் பூராவும் ரேடியோ மாதிரி பாடிக்கொண்டே இருக்கிறீர்களே" என்பாராம். பாட்டை நிறுத்தினால் வீசிங் ஜாஸ்தியாகி, ஸ்டெராய்ட் கொடுக்கும் அளவுக்கு நிலைமை இருந்திருக்கிறது. இப்படிச் சின்ன வயதிலேயே எனக்கு இசை இன்றியமையாததாக இருந்திருக்கிறது.



நான் மூன்றாவது படிக்கும்போது டி.வி.யில் ஜாகீர் ஹுசேன் தபலா வாசிக்கும் விளம்பரத்தைப் பார்த்ததும் எனக்குத் தபலா வாசிக்க ஆர்வம் வந்துவிட்டது. நான் அப்பாவிடம் தபலா வேண்டுமென்று கேட்டேன். ஒரு நண்பரிடமிருந்து அவர் வாங்கிக் கொடுத்தார். அதை வைத்து நானே மெல்ல மெல்ல வாசிக்கக் கற்றுக்கொண்டேன். எங்கள் வீட்டில் சாய் பஜன் நடக்கும். அதில் வாசித்தேன். பின் பள்ளி நிகழ்ச்சிகளில் வாசித்தேன். குரு என்று யாருமில்லாமல் நானே அதனை வாசிக்கக் கற்றுக்கொண்டேன். பின்னர் ஆர்வத்தால் படிப்படியாக பியானோ, கீ போர்ட் எல்லாம் வாசித்தேன். எல்லாமே இயற்கையாக வந்தவைதான்.

பள்ளியில் பாடல்களை நானே கீ போர்டில் கம்போஸ் செய்து, சொல்லித் தருவேன். பின்னர் நான் அதற்குத் தபலா வாசிப்பேன். பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நான் வாசிப்பதைப் பார்த்துவிட்டு நாட்டிய மேதை சித்ரா விஸ்வேஸ்ரன் என்னைத் தன் நிகழ்ச்சிக்கு வாசிக்க அழைத்தார். அப்போது எனக்கு 9 வயது. அவரது கணவர் விஸ்வேஸ்வரன் 'சந்தூர்' வாசிப்பார். எனது வாசிப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டு "என்னோடு தினமும் பிராக்டிஸ் செய்ய வா" என்று அழைத்தார். சிறுவனாக இருந்தபோதே அவருடைய கச்சேரிகளுக்கு நான் தபலா வாசித்திருக்கிறேன்.

அது இண்டர்நெட் இல்லாத காலம். பாம்பே போனால்தான் 'தபலா' கற்றுக்கொள்ள முடியும். நான் விஸ்வேஸ்வரன் சாருக்கு வாசித்ததைப் பார்த்து என்னைப் பலபேர் கூப்பிட்டார்கள். பல பிரபலங்களுடன் மேடைகளில் தபலா வாசித்தேன்.

நான் 11ம் வகுப்பு படிக்கும்போது, 1996ல், இளம்மேதை (Child Prodigy) எனத் தெலுகு அகாடமி எனக்கு 'யுகாதி புரஸ்கார்' விருதை அளித்தது. அப்போது அது மிகப் பிரசித்தமான விருது. அப்படி ஆரம்பித்து, அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ என்று பலருடைய ஆல்பங்களுக்கு நான் தபலா வாசித்திருக்கிறேன்.

சித்ரா விஸ்வேஸ்வரன் மூலம் ஜாகீர் ஹுசேனின் சகோதரர் சென்னை வரும்போதெல்லாம் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. பாம்பே போனால் ஜாகீர் ஹுசேன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவார்கள். அவரது தந்தை அல்லா ரக்கா அவர்களிடம் கொஞ்சம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கொல்கத்தாவில் அனிந்தோ சட்டர்ஜி என்று மிகப்பெரிய தபலா வித்தகர் முன் வாசித்துக் காட்டியபோது அவர், "நீ மெட்ராஸில் யாரிடம் கற்றுக் கொண்டாய்?" என்று கேட்டார். நான் "யாரிடமும் கற்கவில்லை" என்றேன். "அப்படியா, சரி, நான் சொல்லித் தருகிறேன்" என்றார். நேரம் கிடைத்த போதெல்லாம் சொல்லிக் கொடுத்தார். அதை 'சங்கீதப் பிச்சை' என்றுதான் சொல்ல வேண்டும். அது எனக்குக் கிடைத்தது. இப்படிப் பல பேரிடம் சிறிது சிறிது கற்றுக் கொண்டிருக்கிறேன். என்றாலும் எனக்கு குரு என்று சொன்னால் அது பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாதான்.

பெயரிடப்படாத குழந்தை...
நான்கைந்து வயசாகும் வரை பெற்றோர் எனக்குப் பெயர் சூட்டவில்லை. எனது இரண்டு அக்காக்களுக்கும் சுஜனா, சுமனா என்று பெயர் வைத்தது பாபாதான். எனக்கும் அவரேதான் பெயர் வைக்கவேண்டும் என்று என் அம்மாவுக்கு ஆசை. என்னை 'பின்ட்டு' என்றுதான் கூப்பிடுவார்கள். எல்.கே.ஜி. சேர்க்கும்போது 'சாய்நாத்' என்ற பேரைத் தற்காலிகமாகச் சூட்டினார்கள்.



எனக்கு ஐந்து வயதானபோது குடும்பத்துடன் பாபாவிடம் சென்றோம். அவர் சூட்டிய பெயர்தான் "ஷ்ரவணம்". அன்றைக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. 2007ல் இந்த ஸ்டூடியோவுக்கு பாபா வந்தபோது, "உன் பேருக்கு அர்த்தம் என்ன?" என்று என்னிடம் கேட்டார். "ஷ்ரவணம் என்றால் கேட்பது; அது நவவித பக்தியில் ஒன்று" என்று பதில் சொன்னேன். "ஷ்ரவணம் என்றால் காதால் கேட்பது. மியூசிக், சவுண்டு ஸ்டூடியோ என்று எல்லாவற்றிற்கும் காது வேண்டும். அதை வைத்துத்தான் உன் வாழ்க்கையே. அதனால்தான் உனக்கு அப்போதே அந்தப் பெயரை வைத்தேன். இனி உன் வாழ்க்கை முழுக்க ஷ்ரவணம்தான்" என்றார். சுவாமி சொன்ன பிறகுதான், இந்தப் பெயருக்குள் இவ்வளவு இருக்கிறது என்பது தெரியவந்தது.

இசை கற்றுக்கொண்டதும் காதால்தான். சவுண்டு எஞ்சினியரிங் படித்ததும் (அதுவும் நானாகக் கற்றுக் கொண்டதுதான்) காதால்தான். இன்றைக்கு என் துறையில் டாப் ரேட்டட் ஆக, உலகமெங்கும் என்னை மதிக்கிறார்கள் என்றால் அதற்கெல்லாம் பாபாதான் காரணம்.

சென்னை பல்கலையில் M.C.A. முடித்தேன். கணினி அறிவியலில் இசையை அடிப்படையாகக் கொண்டு ப்ராஜெக்ட் செய்கிறேன் என்றேன். இதற்கெல்லாம் கைடு கிடைக்க மாட்டார்கள். கைடு இல்லாமல் செய்யமுடியாது என்றார்கள். "எனக்கு கைடு வேண்டாம். நானே செய்து கொள்கிறேன். என் பேப்பரைப் பாருங்கள். என்ன மதிப்பெண் தரக் கூடுமோ தாருங்கள்" என்று சொன்னேன். கொஞ்சம் திமிருடனேயே அந்த ப்ராஜெக்டைச் செய்தேன். ஒரு கடையின் கணக்கு வழக்குகளுக்கோ, அலுவலக நிர்வாகத்துக்கோ எல்லாரையும் போல சாஃப்ட்வேர் எழுதுவதில்எனக்கு விருப்பமில்லை. இசையை எப்படிக் கம்ப்யூட்டரை வைத்துச் செய்யலாம் என்பதையே நான் ப்ராஜெக்டாகச் செய்தேன். வேண்டா வெறுப்பாகத்தான் ஒப்புக் கொண்டார்கள். ஆனால், முடிவாக ப்ராஜெக்ட் அறிக்கையை நான் சமர்ப்பித்ததும் அசந்து போய்விட்டார்கள்.

காரணம், ஒரு ஸ்டூடியோ மாதிரியே ஒன்றை நிர்மாணித்து, அதில் எப்படி கம்ப்யூட்டரால் இசையை வடிவமைக்கலாம் என்பதைச் செய்து காட்டினேன். அதைப் பார்த்து அவர்கள் பிரமித்துப் போய்விட்டார்கள்.

I.I.T. அழைத்தது
அதுபற்றித் தெரியவந்துதான் ஐ.ஐ.டி.யில் என்னைக் கூப்பிட்டார்கள். பொதுவாக அதற்கென்று தனியாக, உயர்படிப்பு படித்திருந்தால்தான் ஐ.ஐ.டி. உள்ளேயே போகமுடியும். ஆனால், என்னை அங்கே நேரடியாகவே ப்ராஜெக்ட் அசோசியேட் ஆக எடுத்தார்கள். கம்ப்யூட்டர் சயன்ஸ் துறையில் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஒலி, இசை, குரல் தொடர்பான ப்ராஜெக்ட்களைச் செய்தேன். அங்கே நான்தான் முதன்முதலில் ஒலிப்பதிவு அறை ஒன்றை அமைத்துக் கொடுத்தேன். குரலை இனங்காணும் (Voice Recognition) சாஃப்ட்வேரை அங்கே ஆரம்பித்து வைத்தேன். அங்கே ஸ்பீச் லேபரட்டரி இருக்கும். எல்லாம் கார்ப்பரேட் ப்ராஜெக்ட்ஸ். மொழி புரிதல் (Language understanding), இந்திய பிராந்திய மொழிகள் புரிதல் என்று பல திட்டப்பணிகளை அங்கே செய்தேன்.

மனதில் ஒரு போராட்டம்
அந்தக் காலகட்டத்தில் என்னுள் மிகப் பெரிய போராட்டம் ஒன்று நடந்தது. மனம் இசையில் இருக்கும். ஆனால் வேலையோ ஒலி தொடர்பானது. எனக்கு இரண்டுமே வேண்டும் என்று இருந்தது. ஆனால், ஐ.ஐ.டி.யில் இசை இல்லை. இசைக்கு என் மனம் ஏங்கியது. இப்படியே பல மாதங்கள் கழிந்தன.



அப்போது பாபா கொடைக்கானலுக்கு வந்தார். அவரைப் பார்க்கப் போனேன். பஜன் முடிந்ததும் சுவாமி எங்களில் மூன்று பேரை உள்ளே கூப்பிட்டார். அவர்கள் இருவரிடமும் தனியாகப் பேசிவிட்டு, என்முறை வந்தபோது என்னிடம் பேசுவதற்குப் பதிலாக, பக்கத்திலிருந்தவரிடம் என்னைக் காட்டி "மெட்ராஸ்ல ஐ.ஐ.டி.ல வொர்க் பண்ணிண்டிருக்கான். வேலைக்குப் போகப் பிடிக்கல. மியூசிக் மேலதான் ஆசை. ஆனா என்ன பண்ணனும்னு தெரியலை" என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, "என்ன சஞ்சலமா?" என்று கேட்டார். "ஆமாம் சுவாமி. நீங்கள்தான் சொல்லணும்" என்றேன். "நான் சொல்றேன், நீ என்ன பண்ணனும்னு" என்றார். இது நடந்தது 2005ல்.

இதற்கு முன்பாக 2003ல் வொய்ட்ஃபீல்டில் பாபாவுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சியில் தபலா வாசித்தேன். அது முடிந்து பாபாவைப் பார்த்தபோது நான் மிகவும் கெஞ்சினேன். "சுவாமி, எனக்கு Ph.D. பண்ண ஆசை. நான் M.C.A. பண்றேன். ஆனா, எனக்கு மியூசிக்ல Ph.D. பண்ணணும்" என்றேன். சுவாமி புன்னகையுடன் "நான் சொல்றேன்" என்றார். அந்த ஒரு வார்த்தை எனக்கு மிகப்பெரிய வரமாக இருந்தது. அதனால் அது நிச்சயம் நடக்கும் என்று அந்த நாளுக்காக நான் வெறித்தனமாகக் காத்திருந்தேன்.

2005ல் திரும்ப நான் தரிசித்த போதும் "நான் சொல்றேன்" என்று அதையே சொன்னார். கிளம்பிப் போகும் போது என் கையில் 500 ரூபாய்த் தாள் ஒன்றை "வச்சுக்கோ" என்று சொல்லிக் கொடுத்தார். காரணம் புரியாமல் அதை வாங்கி பத்திரமாக வைத்துக் கொண்டேன். சுவாமியின் அருளுக்காகக் காத்திருந்தேன்.

என்னைத் தவிர்த்தார் பாபா
2005-2007 எனக்கு மிகவும் கஷ்டமான காலகட்டம். பாபா ஏதாவது சொல்வார் என்று புட்டபர்த்திக்குப் போவேன். ஆனால், ஒன்றுமே சொல்லமாட்டார். நான் இருக்கும் பக்கமே திரும்பமாட்டார். லெட்டர் கொடுத்தால் வாங்கிக்கொள்ள மாட்டார். நான் உட்கார்ந்திருக்கும் வரிசைப் பக்கமே வரமாட்டார்.

உலகத்தில் பல ஆச்ரமங்கள் இருக்கின்றன. பல சுவாமிஜிக்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஓரிடத்தில் இருப்பார்கள். மற்றவர்கள் வரிசையில் நின்று அவரைப் பார்ப்பார்கள். ஆனால் புட்டபர்த்தியில் அது அப்படியே தலைகீழ். எல்லாரும் உட்கார்ந்து இருப்பார்கள். பாபா அவர்கள் அருகே வந்து பார்ப்பார். ஆசீர்வதிப்பார். நாம் அவரைத் தேடிப்போக வேண்டியதில்லை. அவரே நம்மைத் தேடி வருவார். இது உலகத்தில் வேறெங்கும் இல்லாதது.

இப்படியே இரண்டு வருடங்கள் ஓடின. I.I.T. ப்ராஜெக்ட் முடிந்து விட்டது. வேறு வேலைக்கும் நான் போகவில்லை. நாளடைவில் மன அழுத்தத்தின் உச்சகட்டத்திற்கே போய்விட்டேன். எனது நம்பிக்கையே ஆட்டம் கண்டுவிடும் அளவுக்கு மனது சஞ்சலப்பட்டது.

பாபா சொல்வாரா, மாட்டாரா என்று குழப்பமாக இருந்தது. வருமானம் இல்லை. தபலா வாசித்துப் பெரிதாகச் சம்பாதித்துவிட முடியாது. பாபா என்னை மிகவும் சோதித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். 'நம்மிடம் ஏதோ பிரச்சனை. அதனால்தான் பாபாவிற்கு என்னைப் பார்க்க, பேச பிடிக்கவில்லை' என்று நினைக்க ஆரம்பித்தேன். புட்டபர்த்தியிலும் என் வரிசையை அவர் தவிர்த்ததால், என்னால் மற்றவர்களுக்கும் தரிசனம் கிடைக்காமல் போகவேண்டாம் என்று, நான் வெளியிலேயே நின்று தரிசனம் செய்துவிட்டு வர ஆரம்பித்தேன்.

2006ம் வருடம் ஒருநாள், என் அம்மாவை பாபா கூப்பிட்டு பையன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று விசாரித்திருக்கிறார். அம்மா பதில் சொன்னதும், "வீட்டு மாடில அவனுக்குப் பிடிச்ச பிசினஸை ஆரம்பிக்கச் சொல்லு. மியூசிக்ல பண்ணச் சொல்லு" என்று சொல்லியிருக்கிறார். அப்போது வீடு சின்னதாகத்தான் இருந்தது. மாடி கிடையாது. பின்னர் மாடி கட்டி, ஸ்டூடியோ ரெடி செய்தோம்.



சென்னையில் பாபா
2007ம் வருடம் அதிருத்ர மகாயக்ஞம் நடந்தபோது பாபா சென்னைக்கு வந்தார். அப்போது எங்களுக்கு சாயி சமிதி மூலமாக சேவைப்பணி கொடுத்திருந்தார்கள். பாபா தங்கி இருக்கும் அறையைச் சுத்தமாகப் பராமரிப்பது, அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்வது போன்றவற்றை எங்களில் சிலருக்குக் கொடுத்திருந்தார்கள். கொடைக்கானலில் தனியாக அழைத்த 3 பேர் அதில் இருந்தோம். பாபாவின் அண்மையில் இருப்போம். ஆனால், பாபா எங்களுடன் பேசமாட்டார். இப்படியே சில நாட்கள் சென்றன.

ஒருநாள் பாபா என்னைப் பார்த்து, ஒன்றுமே தெரியாத மாதிரி "பேர் ஏமி?" என்றார். நான் "ஷ்ரவணம்" என்றேன். "என்ன வேலை செய்கிறாய்?" என்றார். "ஒண்ணும் பண்ணல சுவாமி. நீங்க சொன்னீங்கன்னுதான் ஸ்டூடியோ ஆரம்பிக்கறேன்" என்றேன். "ப்ச்.." என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

என்னைத் தெரியாததுபோல் பேசுகிறார், பதில் சொன்னாலும் உச்சுக் கொட்டிவிட்டுப் போகிறார் என்றதும் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ஊசியால் குத்திய பலூன் போல ஆகிவிட்டேன். அருகில் இருந்தவர்களிடம், "சுவாமி சொல்லித்தான் ஸ்டூடியோ ஆரம்பித்தேன். இப்படிச் சொல்லிவிட்டுப் போய்விட்டாரே, ஒன்றுமே புரியவில்லையே" என்று சொல்லி வருந்தினேன்.

மதியம் சுவாமி வந்தார். தன்னுடன் இருந்த ஒருவரிடம் எங்கள் மூவரையும் சுவாமி அறிமுகம் செய்தார். "இந்தப் பசங்க எல்லாம் நல்லா படிச்சு நல்லா சம்பாதிக்கற பசங்க. ஆனா சுவாமிக்காக எல்லா வேலையும் செய்யறாங்க. இவங்க சும்மா வெள்ளை பேண்ட் வெள்ளை சட்டையில் இங்க கிளீன் பண்ணிண்டு இருக்காங்கன்னு நினைக்காதீங்க. எல்லாம் பெரிய ஆளுங்க" என்று சொன்னார். ஒவ்வொருவராக, "உன் பேரென்ன, என்ன வேலை, உன் சம்பளம் என்ன" என்றெல்லாம் கேட்டார். இரண்டாமவர் எனக்கு மாதச்சம்பளம் ஒரு லட்சம் என்றதும், "என்ன மூட்டை கட்டி எடுத்துண்டு போவியா? எப்படிக் கொண்டு போவ வீட்டுக்கு இவ்வளவு பணம்?" என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்.

அடுத்தது நான். எனக்கோ வேலை இல்லை, சம்பளமும் இல்லை. என்ன செய்கிறாய் என்று கேட்டால் பதில் இல்லை. எனக்குத் தயக்கம். ஆனால் சுவாமியே, "மியூசிக்ல ரொம்ப இன்ட்ரஸ்ட். I.I.T-ல எல்லாம் வேல பண்ணான். இப்போ மியூசிக் பிசினஸ் பண்ணப் போறான்" என்றார். அதாவது, அவரிடம் என் சார்பாக பாபாவே பேசினார். என் மனம் உருகி விட்டது. கண் கலங்கிவிட்டது.

என் அப்பா அப்போது அங்கே வந்தார். அப்பாவைச் சுட்டிக்காட்டி என்னிடம், "யார் அது?" என்று கேட்டார் பாபா. நான் "மாநிலத் தலைவர்" என்று பதில் சொன்னேன். சிறுவயதில் இருந்தே அப்படித்தான் வழக்கம். சமிதியில், சுந்தரத்தில், புட்டபர்த்தியில் எல்லாம் அப்பா, பையன் உறவெல்லாம் இல்லை. அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யவேண்டும். பணிதான் முக்கியமே தவிர. உறவு அல்ல. உடனே பாபா என் தந்தையிடம் என்னைச் சுட்டிக் காட்டி, "இந்தப் பையன் என்ன பண்றான்?" என்று கேட்டார். என் அப்பாவும், "பஜன் க்ரூப்ல இருக்கான். தபலா வாசிப்பான்" என்றார். தன் மகன் என்று சொல்லவில்லை. பின் பாபா என்னைப் பார்த்து, "நாளைக்குக் கார்த்தால வர்றேன் வீட்டுக்கு. அம்மாகிட்ட சொல்லு. ஸ்டூடியோ இனாகுரேட் பண்ணிடலாம்..." என்றார். எனக்கு அப்படியே தூக்கிவாரிப் போட்டது.

2007, ஜனவரி 19. சுவாமி அதிருத்ர மகா யக்ஞம் போவதற்கு முன்னால் காலையில் நேராக வீட்டு மாடியில் ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார். வந்து விளக்கேற்றி விட்டு, சிறிதுநேரம் இருந்து, ஆசிர்வதித்துவிட்டு, அப்படியே முன்பு நான் கூறியபடி என் பெயரின் விளக்கத்தையும் சொல்லிவிட்டுச் சென்றார்.

பாம்பே ஜெயஸ்ரீயின் 'Confluence of Elements' தான் இங்கு தயாரான முதல் ஆல்பம். அது உலக அளவில் பெரிய ஹிட்.

உள்ளே இருக்கும் லயம்
ஒரு சமயம் காரைக்குடி மணி சார் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தார். திடீரென்று கரண்ட் போய்விட்டது. கம்ப்யூட்டரின் மெட்ரோநோம் (metronome) 'டிக் டிக் டிக்' என்று கேட்கும். அந்தக் காலத்துக்கு வாசித்துக்கொண்டிருந்தார். கரண்ட் போனதால் ஹெட்ஃபோன் வேலை செய்யவில்லை. ஆனாலும் அவர் மிகச்சரியாக வாசிக்கிறார். பொதுவாக இந்த 'டிக் டிக் டிக்' நின்று போய்விட்டால் வாசிப்பு நின்றுவிடும். இல்லாவிட்டால் தாளம் மாறிவிடலாம். இதுதான் ஆதாரம். இரண்டு நிமிடம் வாசித்து முடித்த பிறகு, "ஏம்பா அந்த சப்தம் நின்னுபோயிடுத்துப்பா" என்றார். அப்போதுதான் ஹெட்ஃபோன் வேலை செய்யவில்லை என்று எனக்கே தெரிந்தது. காரைக்குடி மணி மாதிரி ஒரு பெரிய வித்வானிடம் உள்ள வித்வாம்சம் மெஷினைத் தோற்கடித்திருக்கிறது! மெஷின் நாம் கண்டுபிடித்தது. ஆனால், மூலாதார சக்தி நம்முள் இருப்பது. அவரது துல்லியத்தைக் கண்டு நான் மிரண்டு போய்விட்டேன்.

டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களுடன் ஒரு மறக்கமுடியாத அனுபவம். அவர் என் ஸ்டூடியோவுக்குப் பாடல் பதிய வந்திருந்தார். அவரால் பேசக்கூட முடியவில்லை, விடாமல் இருமல். ரெகார்டிங் நடக்குமா என்று பயமாகப் போய்விட்டது. அவர் உள்ளே போய் மைக்கிற்கு முன்னால் நின்று பாட ஆரம்பித்தார். எங்கே இருந்துதான் அவருக்கு அந்த உத்வேகம் வந்ததோ தெரியாது. அடுத்த மூன்று மணி நேரம் ஒரு இருமல் இல்லை. பாடி முடித்து வெளியே வருவதற்குள் மறுபடியும் விடாத இருமல்! சங்கீதத்தின் சக்தியை யாராலும் அளவிட முடியாது என்று அப்போது நினைத்தேன்.

(தொடரும்)

சந்திப்பு: மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன்

*****


ஏ.ஆர். ரஹ்மான்
எனக்கு நியூயார்க் கென்னடி சென்டரில் ஒரு நிகழ்ச்சி. அப்போது ஒரு ஃபோன் வந்தது, ரஹ்மானின் நிகழ்ச்சிக்கு தபலா வாசிக்க நீங்கள் உடனே புறப்பட்டு வரவேண்டும் என்று. நிகழ்ச்சி சிங்கப்பூரில், நான் இருப்பது நியூ யார்க்கில். உடனே கிளம்பிச் சென்றால் இரண்டு மணி நேரத்தில் கச்சேரி. என்ன பாட்டு, என்ன வாசிக்கப் போகிறோம் ஒன்றுமே தெரியாது. ஸ்டேஜில் நேரடியாக ரஹ்மானைப் பார்க்கிறேன். அதற்கு முன்னால் அவரைப் பார்த்ததில்லை. நான் அவரைப் பார்த்ததும் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். நிகழ்ச்சியில் வாசித்து முடித்ததும் "பியூட்டிஃபுல் சவுண்ட்" என்றார். சொல்லப்போனால் எங்கெல்லாம் ஸ்ருதி சேர்ந்ததோ அங்கெல்லாம் சேர்த்து என் இஷ்டத்திற்கு வாசித்தேன். இன்றுவரை அவருடைய எல்லா ரெகார்டிங்குகளிலும் தபலா வாசிக்க என்னைக் கூப்பிட்டுவிடுகிறார்.

- சாயி ஷ்ரவணம்

*****


அத்தனை வேதமும் ஒரே இடத்தில்
சிருங்கேரி ஆச்சாரியாரின் விருப்பத்துக்கு இணங்கி எல்லா வேதங்களையும் பதிவு செய்ய ஏ.கே. ராமமூர்த்தி என்பவர் என்னை அணுகினார். கிட்டத்தட்ட ஐந்து வருடம் இங்கே தொடர்ந்து ஒலிப்பதிவு நடந்தது. வேத பண்டிதர்கள் போவதும் வருவதுமாக இந்த இடமே ஒரு வேத பாடசாலை போல் இருக்கும். சுக்ல யஜுர்வேதம், கிருஷ்ண யஜுர் வேதம், சாம வேதம், ரிக் வேதம் என்று நான்கும், கனம், க்ரமம், ஜடை என்று பல வடிவங்களில் முழுவதுமாக இங்கே பதிவானது. வேத யக்ஞமே நடந்தது என்று சொல்லுமளவுக்கு இங்கே நடந்திருக்கிறது.
எங்கே பாபா வந்துவிட்டுப் போனாரோ அந்த இடத்தில் தானாகவே சில விஷயங்கள் நடக்கும். அதற்கெல்லாம் நான் சொந்தம் கொண்டாட முடியாது. இதில் ஏதோ ஒரு தெய்வீகம் இருந்திருக்கிறது. இல்லாவிட்டால் நீங்கள் கோடி ரூபாய் கொடுத்தால்கூட அத்தனை வேதமும் ஒரே இடத்தில் சொல்லவைக்க முடியாது. பத்து ஸ்டூடியோக்களில் அவர்கள் செய்திருக்கலாம். ஆனால் ஒரே இடத்தில் அது நடந்தது. இதெல்லாம் பாபாவின் அருள். இந்த இடத்தில் புனிதமான வேத சக்தி நிரம்பியிருப்பதாக உணர்கிறேன். இங்கே வரும் இசை மேதைகள் அதை உணர்கிறார்கள். அதைக் குறையாமல் பாதுகாக்க வேண்டும். அதைத்தான் நான் எப்போதும் நினைத்துக் கொள்கிறேன்.

- சாயி ஷ்ரவணம்

*****


என் ஸ்டூடியோவில் என்ன ஸ்பெஷல்?
இது முழுக்க முழுக்க மரத்தால் ஆன ஸ்டூடியோ. இந்திய இசைக்கருவிகள் மரத்தால் ஆன ஸ்டூடியோவில்தான் சிறப்பாக ஒலிக்கும். மேற்கத்திய கருவிகளை ரெகார்டு செய்வதுபோல இங்கே ஸ்டூடியோ செய்து விடுவார்கள். அதில் நம் ஊர் இசைக் கருவிகளின் நாதம் சோபிக்காது. அதற்காகவே முழுக்க முழுக்க மரத்தாலான இந்த ஸ்டூடியோவை அமைத்தேன். இம்மாதிரி ஸ்டூடியோ மிகவும் அரிது.
அதுபோல என்னுடைய டெக்னாலஜியை நானே தேர்ந்தெடுத்து கஸ்டமைஸ் செய்கிறேன். வீணையை ஒலிப்பதிய, எல்லாரும் கிதார் மைக்கை வாங்கிப் போடுவார்கள். நானே டிசைன் செய்த ஒரு மைக்ரோஃபோனை நான் பயன்படுத்துகிறேன். ஸ்வீடனில் ஒருவருடன் அமர்ந்து, இந்த மாதிரி மைக் வேண்டும், அதில் இந்த மாதிரி சவுண்ட் எடுக்கணும் என்று விளக்கி, எனக்கெனச் செய்யவைத்துப் பயன்படுத்துகிறேன். அதனால்தான் இங்கே வருகிற ஒலியின் தரம் வேறிடங்களில் வருவதில்லை என்று பல கலைஞர்கள் நினைக்கிறார்கள்.

- சாயி ஷ்ரவணம்

*****


யுவபுரஸ்கார்
சங்கீத நாடக அகாடமி விருது சவுண்டு எஞ்சினியருக்குக் கிடைப்பதே மிகவும் அரிதுதான். நான் விண்ணப்பிக்கவில்லை. அவர்களே கொடுத்திருக்கிறார்கள். நான் புட்டபர்த்தி போய்க் கொண்டிருக்கும்போது இமெயில் பார்த்தால் சங்கீத நாடக அகாடமியிலிருந்து கன்ஃபர்மேஷன் மெயில் என்று இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் சவுண்ட் எஞ்சினியரிங் என்று ஒரு பிரிவு கிடையாது. அப்படித் தொடங்கினால் அடுத்தடுத்த வருடங்களில் ஆள் கிடைக்காது. ஆகவே 'நடனத்துக்கான இசை' பிரிவில் கொடுத்தார்கள். நான் நிறைய நடன இசைப்பதிவுகள் செய்திருப்பதால் எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

- சாயி ஷ்ரவணம்

*****

© TamilOnline.com