ஐசக் அருமைராஜன்
உள்ளத்தைத் தொடும் உணர்வுபூர்வமான கதைகளை எழுதியவர் ஐசக் அருமைராஜன். இவர் பிப்ரவரி 18, 1939 அன்று, நாகர்கோவிலில், வே. ஐசக் - மேரி தங்கம் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். தந்தை தென்னிந்திய திருச்சபையில் (C.S.I) அலுவலராகப் பணியாற்றி வந்தார். துவக்கக் கல்வியை உள்ளூரில் பயின்றபின், உயர்நிலைக் கல்வியை ஸ்காட் கிறித்துவ உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அங்கே புகுமுக வகுப்பில் தொடங்கி, பொருளாதாரத்தில் இளங்கலை வரை பயின்று பட்டம் பெற்றார். தொடர்ந்து தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். பள்ளியில் படிக்கும்போது நூலகத்திற்குச் சென்று வாசித்தது இவரது எழுத்தார்வத்திற்கு வழி வகுத்தது. இவரது பேராசிரியர் எஸ். சுப்பிரமணியன் இவரை எழுத ஊக்குவித்தார். நாகர்கோவில் கிறிஸ்து ஆலயத்தில் பாதிரியாராக இருந்த வி.டி. சகாயமும் எழுதத் தூண்டினார். மு.வ., அகிலன், நா.பா., ஜெயகாந்தன் புதினங்கள் எழுத்தார்வத்தை அதிகரித்தன. முதுகலைக் கல்வியை முடித்ததும் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் பயிற்றுநர் (Tutor) வேலை கிடைத்தது. பணியாற்றிக்கொண்டே மதுரை காமராசர் பல்கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றார். சில ஆண்டுகளில் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறித்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணி கிடைத்தது. அங்கேயே சேர்ந்து பணிபுரிந்து தமிழ்த்துறைத் தலைவராக உயர்ந்தார். 1969ல் லீலாவதியுடன் திருமணம் நிகழ்ந்தது.

இவரது முதல் படைப்பு 'முல்லைமாடம்' என்னும் கவிதை நாடகம். இது 1970ல் வெளியானது. தொடர்ந்து சிறுகதைகளும் எழுதினார். அணில், அண்ணா, காஞ்சி, கண்ணதாசன், தீபம், தாமரை, கல்கி, தாய், தினமணி கதிர், கணையாழி, சுபமங்களா உள்ளிட்ட இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின. கண்ணதாசன் இதழில் இவர் எழுதிய 'காக்கைக் கூடு' கதைக்குச் சிறந்த சிறுகதை என்ற பரிசு கிடைத்தது. இவருடைய பல சிறுகதைகளுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் கிடைத்தன. இவரது முதல் புதினம் 'கீறல்கள்'. இதனை கிறித்துவ இலக்கியச் சங்கம் 1975ல் வெளியிட்டது. இப்படைப்பு பரவலாகப் பேசப்பட்டது. தொடர்ந்து 1980ல் வெளியான 'அழுக்குகள்' முக்கியமான புதினமாகும்.

வாகனம் பழுதுநீக்கும் கடை ஒன்றின் உரிமையாளன் தங்கமணி. முதன்மைப் பணியாளனும் அவன்தான். மாமன் மகள் சில்லா மீதான அன்பு காதலாக மாறுகிறது. அவள் படிக்க, வாழ்க்கையில் முன்னேற உதவுகிறான். ஆனால், அவர்களின் காதல் சில்லாவின் குடும்பத்தாருக்குப் பிடிக்கவில்லை. சில்லாவை ஒருநாள் அவள் தந்தை தங்கமணியின் கடைக்குக் கூட்டி வருகிறார். ஆடை முழுக்க அழுக்கோடும் கறைகளோடும் அங்கே பணி செய்து கொண்டிருக்கிறான் அவன். "அழுக்குப் பிடித்த இவனா உனக்குக் கணவன்?" என்று கேட்கிறார் தந்தை. அவள் யோசிக்கிறாள். "நீ சரி என்றால் உனக்கு வேறு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறேன்" என்கிறார் தந்தை. அவளும் அதற்கு ஒப்புக் கொள்கிறாள். அவர்கள் தினம் ஒரு மாப்பிள்ளையைக் கொணர்கின்றனர். முதலில் சில்லா ஏற்க மறுத்தாலும் நாளடைவில் ஒப்புக்கொள்கிறாள். காசு, பணம் கொட்டுகிறது. கார், பங்களா என்று வாழ்க்கை மாறுகிறது. சில்லா தங்கமணியைப் புறக்கணிக்கிறாள். ஆனாலும் தங்கமணிக்கு அவள்மீதான காதல் மாறவில்லை. ஒருநாள் அவளை யதேச்சையாகச் சந்திக்கும்போது தனது காதலைத் தெரிவிக்கிறான். "நீ அழுக்குப் பிடிச்சவன்" என்று சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து சென்றுவிடுகிறாள். போகும்முன் ஒரு பத்திரிகையை அவன்முன் வீசி எறிகிறாள். அதை எடுத்துப் பார்க்கிறான் தங்கமணி. அதில் சோப்புக் கம்பெனி ஒன்றின் விளம்பரமாடலாக அவள் தோற்றமளிக்கும் படம் இடம் பெற்றிருக்கிறது.

தன் கடைக்கு வந்து அழுக்குப் பிடித்த அந்த இடத்தையும் பழுது நீக்குவதற்காக நின்று கொண்டிருக்கும் கார்களையும் பார்த்து, "ஆமாம். நான் அழுக்குப் பிடித்தவன்தான்" என்று முணுமுணுக்கிறான் தங்கமணி. உண்மையில் அழுக்குப் பிடித்தவர்கள் யார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இப்புதினம்.

இவர் எழுதிய 'கல்லறைகள்' புதினமும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். பணம் படைத்தவர்களின் அதிகார வெறி, அந்த ஆணவத்தால் அவர்கள் செய்யும் குற்றச் செயல்கள், அதுக்கு காவல்துறை உறுதுணையாக இருப்பது, ஏழைகளுக்கு அதனால் விளையும் துன்பம் போன்ற செய்திகளின் அடிப்படையில் அந்த நாவலை எழுதியிருந்தார் அவர். 'சில மாறுவேடங்கள்', 'வலிய வீடு' போன்றவை இவரது முக்கியமான படைப்புகளாகும். 'நெடுமான் அஞ்சி', 'பாறை' போன்ற கவிதை நாடகங்களையும் எழுதியிருக்கிறார். இவரது 'முல்லை மாடம்' கவிதை நாடகம் மதுரை காமராசர் பல்கலையில் பாடநூலாக வைக்கப்பட்டது. இவர் 'வாழியாதன்' என்ற புனைபெயரில் எழுதிய 'வேங்கைகள்' என்ற கவிதை நாடகமும் இளங்கலை மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. அதுபோல 'கீறல்கள்' புதினம் இளநிலைப் பட்ட மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டிருந்தது. 'தவறான தடங்கள்' என்பது இவர் எழுதிய தொடர்கதைகளுள் ஒன்று. மற்றொன்று 'மரணம் நம்மைப் பிரிக்கும்வரை' என்பது. இது பின்னர் 'காரணங்களுக்கு அப்பால்' என்ற பெயரில் நூலானது. இந்நூல் சிறந்த படைப்பாக திருப்பூர் தமிழ்ச்சங்கத்தால் தேர்த்நெடுக்கப்பட்டது.

தான் கதைகளில் எழுதும் பல சம்பவங்கள் அப்படியே பலரது வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறார் ஐசக் அருமைராஜன். இதுபற்றி அவர், "குலசேகரத்தை மையமாக வைத்து நான் எழுதிய 'கல்லறைகள்' நாவலில் தேவசகாயம் என்று ஒருவர் வருகிறார். இதைப் படித்துவிட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தேவசகாயம் என்பவர் என்னைப் பார்க்க வந்தார். 'என் கதை உங்களுக்கு எப்படித் தெரிந்தது?' என்று கேட்டார். அவரோடு பேசியபோது நாவலில் நான் வருணித்திருந்த சம்பவங்கள் பலவும் அவரது வாழ்க்கையில் நடந்தவை எனக் கூறினார். எனக்கு ஆச்சரியம். இவரை நான் கண்டதோ, அறிந்ததோ இல்லை. அதுபோல மற்றொரு அனுபவம். நாகர்கோயிலை மையமாக வைத்து நான் எழுதிய சிறுகதை ஒன்று அப்படியே ராஜபாளையத்தில் நடந்திருக்கிறது. அங்கிருந்து ஒரு கடிதம்: 'ஐயா, ராஜபாளையத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை உங்களிடம் யார் கூறியது?' என்று. உண்மையில் ராஜபாளையச் சம்பவம் எனக்குத் தெரியாது. ஆனாலும் கதைகளில் இத்தகைய விபத்துக்கள் நிகழக்கூடும். ஆக ஒரு குழுமத்தில் நாம் கண்டறிந்த நிகழ்வுகள், வேறு எங்கேயும் அப்படியே நிகழ்ந்திருக்கக்கூடும். இதன் அர்த்தம், எழுத்து ஒரு தீர்க்கதரிசனம் என்பதுதான்" என்கிறார்.

'கிறித்துவ கம்யூனிசம்' என்பதைத் தனது படைப்புகளில் முதன்முதலில் முன்வைத்தவர் இவரே! தனது 'கீறல்கள்' நாவலில் 'வேதமணி வாத்தியார்' என்ற பாத்திரப் படைப்பின் மூலம் அதனை முன்வைத்தார். அதற்காகப் பல எதிர்ப்புகளை இவர் சந்தித்த போதிலும் தொடர்ந்து எழுத்துலகில் இயங்கினார். தமிழ் இலக்கியம் குறித்தும் ஆய்ந்து சில நூல்களை எழுதியிருக்கிறார். 'சிலம்பு - ஓர் இரட்டைக் காப்பியம்' என்பது இவரது குறிப்பிடத்தகுந்த ஆய்வு நூலாகும். கிறித்துவ மதம் குறித்த மாறுபட்ட சிந்தனைகளை, விமர்சனங்களை தனது படைப்புகளில் முன்வைத்ததால் 'புரட்சிக் கலைஞர்' என்ற பட்டம் இவருக்குக் கிடைத்தது. மதுரை தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 'புரட்சி இலக்கிய வித்தகர்' என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது. ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியதால் 'அருட்கலைஞர்' என்ற பட்டமும் கிடைத்தது. குமரி மாவட்டத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு இவரையும் மற்ற சில எழுத்தாளர்களையும் ஒன்றிணைத்து 'தமிழ் நவமணிகள்' என்று சிறப்பித்தது. இவரது படைப்புகளை பலர் எம்.ஃபில், பிஎச்.டி. பட்டங்களுக்காக ஆய்வு செய்துள்ளனர்.

நான்கு கவிதை நாடகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், எட்டுப் புதினங்கள், கட்டுரைகள், ஆய்வு நூல்கள் எனப் பல நூல்களை எழுதியுள்ள ஐசக் அருமைராஜன், குமரி நாட்டின் வட்டார வழக்கைச் சிறப்பாக தன் படைப்புகளில் கையாண்டவர். இவர் நவம்பர் 07, 2011ல் மறைந்தார்.

அரவிந்த்

© TamilOnline.com